தொடர்கள்
ஆன்மீகம்
நந்தியெம்பெருமானின் தத்துவம் தெரிந்து கொள்வோம்!- மீனாசேகர்.

Let's learn the philosophy of Lord Nandhi!!

சிவாலயங்கள் அனைத்திலும் கருவறை சிவபெருமானை நோக்கியபடி அமந்திருக்கும் நந்தியெம்பெருமான், சிவ கணத்தினரில் முதன்மை பெற்றவராகவும், சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலை மலையைக் காத்து நிற்கும் அதிகாரம் பெற்றவராகவும், சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் திகழ்கின்றார். நந்தியின் உருவமைப்பே தத்துவக் குவியல். சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று கால்களையும் மடித்து ஒடுக்கி, நான்காம் காலான ஞான பாதத்தினால் பரம்பொருளை வணங்கிக் கொண்டிருக்கிறது என்கின்றன ஆகம நூல்கள். ‘நந்துதல்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்துதான் நந்தி என்ற சொல் வந்தது. ‘நந்துதல்’ என்றால் மேலேறிச் செல்லுதல் எனவும் பொருளுண்டு. ஒரு யோகி பத்மாசனத்தில் அமர்ந்து மூலாதாரக் கனலை எழுப்பும் அமைப்பும் நந்தியிடம் உண்டு. ஔவையார் கூட தனது விநாயகர் அகவலில், ‘மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்து’ எனும் வரிகள் நந்தியெம்பெருமானை நினைவுறுத்தும். நந்தியின் துணையால் மேலேறிச் சென்று ஈசனைக் காண வேண்டும் என்பதே இதன் முழுப்பொருள். நந்தியின் அருளில்லாது ஈசனைக் காண இயலாது என்கின்றன சைவ ஆகமங்கள்.
நந்தியெம்பெருமானை வணங்கிய பின்னரே ஈசனை வணங்கச் செல்வது வழக்கம். அதோடு நந்தியிடம் சிவ பெருமானை வணங்க அனுமதி கேட்டுவிட்டு, வைக்கப்போகின்ற நம்முடைய கோரிக்கைகளை முதலில் அவரிடம் சொல்ல வேண்டும். அவரின் அனுமதியை மானசீகமாக வாங்கிய பின்னரே சிவனை வணங்கச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.