
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையின் அடிவாரத்தில் உள்ள பூங்கா சாலையில் தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான 1.4 ஏக்கர் நிலம் உள்ளது. குப்புசாமி மணியக்காரர் என்பவருக்குச் சொந்தமான இந்நிலம் தண்டாயுதபாணி சுவாமி என்பவருக்கு சொந்தமான இந்த நிலம் 26.4.1888-ஆம் ஆண்டு மடம் கட்டவும், இந்துமத கோட்பாடுகளை பரப்பவும் அனுசரிக்கவும் தர்மசாஸ்திரத்தின் மூலமாக எழுதிக் கொடுத்தார். தண்டாயுதபாணி மடம் பல்வேறு நபர்களால் பராமரிப்பு செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காகவும், பூஜைகள் செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த காலி மனை இலவச வாகனம் நிறுத்தும் இடமாக இது பயன்படுகிறது.
சம்பந்தப்பட்ட இடத்தை விற்க ஏற்கனவே பலமுறை முயற்சி நடந்து இருக்கிறது. அப்போதெல்லாம் நீதிமன்றம் இந்த இடம் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்று பலமுறை தீர்ப்பு சொல்லியிருக்கிறது. இது சம்பந்தமான ஒரு மேல்முறையீட்டு வழக்கு 19.8.2024-ல் தள்ளுபடி ஆனது. ஆனால், இந்த நிலத்தை வாங்க இருந்தவர்கள் அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி இந்த இடத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்று ஒரு உத்தரவை வாங்கி விட்டார்கள். ஆனால், இந்த வழக்கில் முக்கிய எதிர் தரப்பான மடத்தின் நிர்வாகம் மற்றும் பழனி கோவில் நிர்வாக கருத்து கேட்காமலே தனி நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் போது தான் நீதிபதிகள் கார்த்திகேயன் சக்திவேல் ஆகியோர் கொண்ட அமர்வு "சம்பந்தப்பட்ட இடம் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்று ஏற்கனவே தீர்ப்புகள் உள்ளன.
மேலும் தனி நீதிபதியிடம் சம்பந்தப்பட்ட எதிர்மனுதாரர்கள் மோசடியாக உரிய எதிர் தரப்பு யாரையும் சேர்க்காமல் உத்தரவு பெற்றுள்ளனர். இது நீதிமன்றத்தை ஏமாற்றி பெறப்பட்ட உத்தரவாகும்.
ஏற்கனவே இந்த இடத்தை பத்திர பதிவு செய்யக்கூடாது என்று கோயில் தரப்பு ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால், பத்திரப் பதிவுத்துறையில் வேண்டுமென்றே முறையான பதிவாளரை விடுப்பில் அனுப்பிவிட்டு பொறுப்பில் வந்த அதிகாரி இந்த பத்திரப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
இது முற்றிலும் முறைகேடாக செய்யப்பட்ட காரியம். பிரச்சனைக்குரிய மத வழிபாட்டு இடங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரணை செய்துதான் பத்திர பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பத்திர பதிவு சட்டம் உள்ளது..
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த பத்திரப்பதிவு அதிகாரி எதையும் கருத்தில் கொள்ளாமல் இந்தப் பத்திரப்பதிவு மேற்கொண்டுள்ளார்.
எப்படி மேற்கொள்ள முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது அரசு தரப்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற போது தற்காலிக பணி நீக்கம் என்பது போதுமானதாக இல்லை.
இந்த பத்திரப்பதிவு என்பது முறைகேடாக பதிவு செய்யப்பட்டதால் வழக்கு தாக்கல் செய்த அன்றே இறுதி உத்தரவு பிறப்பிக்கலாம் என்று அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுள்ளோம்.
எனவே முறைகேடாக செய்யப்பட்ட இந்த பத்திரப்பதிவு செல்லாது. அந்தப் பத்திரப்பதிவை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கிறது என்று உத்தரவிட்டார்கள்.
இந்தக் காரியத்தில் பொதுமக்களுக்கு மிகுந்த சந்தேகங்கள் இருக்கின்றன. அவற்றை விளக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கும், அரசுக்கும் உண்டு.
முதல் கேள்வி : சம்பந்தப்பட்ட அதிகாரியை விடுமுறையில் அனுப்பிவிட்டு பழனியில் இருந்து அறுபது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை பொறுப்பு சார்பதிவாளராக நியமித்தது யார். பழனிக்கு அருகிலேயே குமார் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் மூன்று சார் பதிவாளர் அலுவலகங்கள் இருக்கின்றன. அந்த அலுவலகங்களில் உள்ள சார்பதிவாளர்களை ஏன் நியமிக்கவில்லை.
இரண்டாவது கேள்வி : முதல்வர் இது அறியாமையில் செய்த தவறு என்கிறார். ' அரசு அதிகாரிகள் அறியாமையில் தவறு செய்ய சட்டத்தில் இடம் இருக்கிறதா ? அறியாமையில் செய்த தவறு என்றால் அவரை ஏன் பணியிடை நீக்கம் செய்தீர்கள் ? மன்னித்து விட்டுவிட வேண்டியதுதானே ? பிறகு ஏன் முன்ஜாமீன் கேட்டு மனு செய்து ஜஸ்டின் மணிகண்டன் ஏன் முன்ஜாமீன் பெற்றிருக்கிறார் ?
மூன்றாவது கேள்வி : முன்ஜாமீன் கேட்ட ஜஸ்டின் மணிகண்டன் இந்த விஷயத்தில் திட்டமிட்டு என்னை மட்டும் குற்றவாளியாக்கி பத்திரப்பதிவு செய்தவரைத் தப்பிக்க வைத்துவிட்டனர் என்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
அதற்கு அரசு சார்பில் மூன்றாம் தேதி பதிவுக்கான வேலைகள் மட்டுமே நடைபெற்றன. ஜஸ்டின் மணிகண்டன் தான் முறைப்படி பதிவுப் பணிகளைச் செய்துள்ளார் என்று நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறது. அரசு தரப்பு அப்படி என்றால் பத்திரப்பதிவுக்கான வேலைகளை செய்தவர் குற்றவாளியா இல்லையா என்ற கேள்வி எழுகிறது. அவர் மீது என்ன நடவடிக்கை என்பதை அரசு விளக்க வேண்டும்.
நான்காவது கேள்வி: இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம், மாவட்ட பதிவாளர் இடைநீக்கம், பத்திரப்பதிவு அதிகாரிகள் கொண்ட மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு என்பதெல்லாம் சரி.
இந்த நிலம் சம்பந்தமாக கி.பி. 2000-ஆம் ஆண்டிலேயே நிலத்தை விற்பதற்கான வேலைகள் நடந்தன.
அதன் காரணமாக தான் தக்கார் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலம் சம்பந்தமாக பத்துக்கும் மேற்பட்ட நீதிமன்ற வழக்குகள் உள்ளன என்கிறார் பழனி டிஎஸ்பி செல்வகுமார் அப்படி இருந்தும் பத்திரப்பதிவாளர்கள் இதை பத்திரப்பதிவு செய்யும்படி அழுத்தம் தந்த பெரிய மனிதர் யார் ?
அவர் அரசியல் தலைவரா ? அதிகாரியா ? இது எல்லாமும் வெளிப்படையாக சொல்ல வேண்டாமா ? அல்லது அறநிலைய துறை அமைச்சரும் அறியாமையில் இருக்கிறாரா ?
மொத்தத்தில் பழனியாண்டியையே ஏமாற்ற யாரோ முயற்சி செய்திருக்கிறார்கள்? அது தண்டபாணிக்கு தெரியாமலா இருக்கும் ?
அவர் பார்த்துக்கொள்வார். பழனி முருகனுக்கு அரோகரா.

Leave a comment
Upload