அம்பை (குறுந்தொடர் ) – ஒரு சிறிய முன்னுரை :
மகாபாரத காவியம் எளிதில் அளவிட முடியாத ஆழம் கொண்ட மகா சமுத்திரம் போன்றது.
நாம் முயன்று அதன் அடிக்கு சென்றால் அதன் ஆழத்தில் கிடைக்கும் நல்முத்துக்களும் பவளங்களும் ஏராளம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கியமான பாத்திரங்களைக் கொண்ட இந்த மாகாவியத்தில், ஒவ்வொரு பாத்திரமும் ஒரு நல்முத்தோ அல்லது பவளமோதான்!
ஆனால், கதையின் வேகத்தாலும் அதன் விரிவாலும்,ஒவ்வொரு பாத்திரத்தையும் நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடிவதே இல்லை; அதற்கு நம் வாழ்நாளும் போதாது.
'அம்பை' என்ற இந்த நீண்ட கதை மகாபாரதத்தின் மிக முக்கியமான இரு பாத்திரங்களான பீஷ்மர் மற்றும் அம்பையைச் சுற்றி எழுதப்பட்டுள்ளது.
. இரண்டுமே உன்னதமான பாத்திரங்கள்.
ஆனாலும், ஆரம்பத்திலிருந்தே அவர்களுக்கிடையே ஏற்பட்ட விரோதம், மகாபாரதப் போர் முடியும் வரை ஒரு தீராப் பகையாகத் தொடர்கிறது.
ஒரு புறம் : பீஷ்மர் ஒரு மகா புருஷர், உன்னதமான தியாகி; மிகக் கடுமையான சபதங்கள் செய்து அதன்படியே கடைசி மூச்சு வரை வாழ்ந்தவர். இச்சா மரண வரம் பெற்றவர்.
மறுபுறம் : அம்பை—காசி மன்னனின் மூத்த புதல்வி, அழகி, வீராங்கனை மற்றும் புத்திசாலி. இள வயதில் காதலை இழந்து, தன் சமூகத்தாலும் தான் நம்பிய ஆண்களாலும் கைவிடப்பட்டு, வாழ்க்கையையே தொலைத்தவள். அவளது ஒட்டுமொத்த கோபமும் பீஷ்மரின் மீது திரும்பி, ஜென்மப் பகையாக மாறுகிறது.
மகாபாரதத்தைப் படிக்கும்போது இவர்களின் பகையையும் தாண்டிய பெரிய விஷயங்கள் பல இருப்பதால், இவர்களின் இந்த ஜென்ம விரோதம் ஓரளவுக்கு மேல் பாரதத்தில் விவரிக்கப்படுவதில்லை. எனவே, மூலக்கதையின் வழி விலகாமல், வரலாற்றுடன் கொஞ்சம் கற்பனையையும் கலந்து, இவர்களுடைய பகையின் இறுதிப் புள்ளியின் கடைசித் துளி வரை கூடவே பயணித்து வாசகர்களுக்குக் கூற முயன்றிருக்கிறேன்... 'அம்பை' என்ற பெயரில் 5 அத்தியாயங்கள் கொண்ட இந்தக் குறு நாவல் வாயிலாக.
மகாபாரதத்தின் விளிம்புநிலை மற்றும் பாதிக்கப்பட்ட பாத்திரங்களின் கோணத்தில் இருந்து கதையை அணுகுவது எப்போதுமே வாசகர்களுக்குப் பிடிக்கும். இந்த முன்னுரை வாசகர்களைக் கதையின் உலகிற்குள் அழைத்துச் செல்ல சரியான ஒரு நுழைவாயில் என்று நம்புகிறேன்.
– கி. ரமணி

அத்தியாயம் 1 : அம்புப்படுக்கை
அம்புப்படுக்கையில் பீஷ்மர் சாய்ந்து எட்டு நாட்கள் ஆகிவிட்டன. நிஜமாகவே அது படுக்கையா என்ன?
அர்ஜுனனின் அம்புகள்தான் அந்தப் படுக்கையின் கட்டில், மெத்தை எல்லாமே. அர்ஜுனன் எய்ய, பீஷ்மரின் மார்பைத் துளைத்து முதுகு வழியே வெளியே வந்த அம்புகள் அவை.
அவர் தரையில் சாய்ந்ததும், அம்புகளின் கூரான முனைகள் முதலில் தரையில் பதிந்து, பீஷ்மர் என்ற கொடிக்குப் பந்தல் போடுவது போல் படர்ந்து, அவர் படுக்க உதவின. அம்பு துளைத்த உடலிலிருந்து கிளம்பிய ரத்தம் உறைந்து, அம்புகளைச் சுற்றி அரக்கு முத்திரை வைத்தது போல் சிவந்த வட்டங்களாகத் தெரிந்தன.
அவருடைய மார்பில் சிகண்டி எய்த அம்புகளும் ஏராளம். ஆனால், அந்த மாவீரர், சிகண்டி எய்த ஒவ்வொரு அம்பையும் பிடுங்கி வெளியே எடுத்து, புன்னகையுடன் எறிந்துவிட்டிருந்தார். இப்போது அவர் விழுந்த நிலையில் உடலில் இருந்த அம்புகள் பெரும்பாலும் அர்ஜுனனுடையவை என்பதில் பீஷ்மருக்கு ஏகத் திருப்தி.
பீஷ்மர் படுத்திருந்தது வெறும் அம்புப்படுக்கை அல்ல; அது அவருடைய பிராயச்சித்தக்களம். திரௌபதிக்கு அநீதி நடந்தபோது வாய் திறவாமல் இருந்ததற்குத் தன் உடலை வருத்தி அவர் செய்த தவம் அது என்று கூட சொல்லலாம். தன் மனதை யோக நிலையில் நிறுத்தியதால், உடலின் வலியைத் தாண்டும் ஆன்மீக பலம் அவருக்குக் கிடைத்திருந்தது.
கங்கை மைந்தனான பீஷ்மருக்கு, அவருடைய தாய் கங்காதேவி தன் அமானுஷ்ய சக்தியால் குளிர்ச்சியையும், மன அமைதியையும் தந்து, அந்த அம்புப்படுக்கையின் வெப்பத்தையும் வலியையும் தாங்கிக்கொள்ளும் பலத்தைக் கொடுத்தாள்.
இன்று பதினெட்டாம் நாள் யுத்தம். ஒருவழியாகப் பாரத யுத்தமே முடிந்துவிட்டது. துரியோதனனும் இறக்கும் தருவாயில் இருக்கிறான். பாண்டவர்களுக்கு வெற்றி. ஆனால், அதை வெளியே பறைசாற்றிக் கொள்ள முடியாதபடி ஒரு துக்கமும் தயக்கமும் சூழ்ந்திருந்தது. சகோதரர்களுக்குள் சண்டை போட்டு, ஏராளமான அவமானங்களுக்கும் துன்பங்களுக்கும் மரணங்களுக்கும் காரணமாகிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அது.
அன்றும் சூரியன் மேற்கில் மறைந்துவிட்டான். பீஷ்மர் வழக்கம்போல் சாயங்காலம் அன்றைய போர்க்களத் தகவல்களைத் தனக்கு அறிவிக்க வரும் துரியோதனனின் வீரனுக்காகக் காத்திருந்தார். ஆனால், அந்த வீரனை அன்று காணோம்.
துரியோதனனே அன்று போரில் முற்றிலும் தோற்றுப்போய் மரண வாயிலில் கிடக்கிறான் என்பது பீஷ்மருக்கு அப்போது தெரியாது. யுத்த பூமிக்கு அருகிலேயே படுத்திருந்தும் கூட, தூரத்திலிருந்து மரண ஓலம் காதில் கேட்டுக் கொண்டிருந்தாலும் கூட, மரணங்கள் பற்றிய துல்லியமான விவரம் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
காலடிச் சத்தம் கேட்டவுடன், யுத்த பூமிக்கு எதிர் திசையில், வலது பக்கம் நோக்கினார் பிதாமகர்.
ஞானியான விதுரர் வந்து கொண்டிருந்தார். விதுரர் திருதராஷ்டிரன், பாண்டு ஆகிய இருவரின் இளைய சகோதரன்; மிகச் சிறந்த ஞானியும் கூட.
பீஷ்மரின் அம்புப்படுக்கைக்கு அருகில் வந்த விதுரர், கீழே விழுந்து வணங்கினார்.
"விதுரா, எழுந்திரு! நீ எங்கே வந்தாய் இந்த யுத்தகளத்துக்கு? போருக்கு முன்னால் உன் மீது உன் அண்ணன் திருதராஷ்டிரன் கொண்ட சந்தேகத்தால் கோபம்கொண்டு, உன் வில்லை உடைத்துப் போட்டுவிட்டு, 'இந்த போரில் நான் பங்கேற்க மாட்டேன்' என்று சொல்லிவிட்டுத் தீர்த்த யாத்திரை கிளம்பினாயே! ஏன் இப்போது திரும்பி வந்துவிட்டாய்?"
"உங்களுக்குத் தெரியாததா பெரியப்பா? இன்றுதான் யுத்தம் முடிந்துவிட்டதே... கொஞ்ச நாழிகைக்கு முன்புதான்."
"யுத்தம் முடிந்துவிட்டதா? என்ன சொல்கிறாய்?"
"ஆம் பெரியப்பா, முடிந்துவிட்டது. நீங்களும் நானும் துரோணாச்சாரியாரும் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. பாண்டவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள்."
பீஷ்மரின் முகத்தில் கணநேரம் ஏதோ மலர்ச்சி தெரிந்தது போல் தோன்றியது; மறுகணம் அது வழக்கமான, இறுக்கமான, உணர்ச்சியற்ற முகமாக மாறியது.
"சொல் விதுரா! துரியோதனன் இப்போது எங்கே இருக்கிறான்?"
விதுரர் ஒரு நிமிட அமைதிக்குப் பின் சொன்னார்:
"இன்றைய போரில் துரியோதனன் பக்கம் எஞ்சியிருந்த சல்லியன், சகுனி போன்றோர் இறந்தனர். தோல்வி எனும் நிலையிலிருந்து தப்புவதற்கு வெளியே வந்த துரியோதனனை, அருகில் இருந்த தடாகத்துக் கரையில் வைத்துப் பீமன் மல்யுத்தத்தில் வென்றான்... பரந்தாமனின் உதவியுடன். மிகவும் அடிபட்ட துரியோதனன் இறப்பது உறுதி."
கரகரவென்று பீஷ்மரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
"ஆம் விதுரா, நாங்கள் யாரும் தர்மத்தைக் காப்பாற்றவில்லை. அரியணையின் அதிபதியைக் காப்பாற்ற வேண்டும் என்று அநீதிக்குத் துணை போனோம். எது நீதி என்று தெரிந்திருந்தும் மன்னன் முன் வாய் திறக்காமல் இருந்தோம். அந்த விஷயத்தில் எங்களை விட நீ எவ்வளவோ உயர்ந்தவன்."
"பெரியப்பா! இதில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று எதுவும் கிடையாது. தர்மம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நாம் எல்லோரும் கொடுத்த விலை—மன்னரின் நூறு புதல்வர்கள் மற்றும் ஏராளமான வீராதி வீரர்கள்... உங்களையும் சேர்த்துதான் பெரியப்பா இவர்களின் உயிர்! இந்த வெற்றியில் யாருக்கும் மகிழ்வு இருக்காது. பாண்டவர்கள் இன்று வந்து உங்களைப் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு இது வெற்றி கிடையாது; உறவுகளையும், மனிதர்களையும், நிம்மதியையும் இழக்க வைத்த ஓர் அர்த்தமில்லாத பெரும் போரின் முடிவு."
சிறிது நேரம் பேசாமல் இருந்த பீஷ்மர் மீண்டும் ஆரம்பித்தார்.
"மகா ஞானி விதுரனே! யாரும் என்னுடன் இல்லாத இக்கணத்தில், நான் செய்த சில பாவங்களைப் பற்றி உன்னிடம் கூறினால், அது இறைவனிடமே கூறியபடியாகும் என்று எனக்குத் தோன்றுகிறது. என் பாவங்களுக்கு மன்னிப்பு கிடையாது. இருந்தாலும், இதை உன்னிடம் பகிர்ந்து கொள்ளும்போது என் நெஞ்சின் பாரம் சற்று குறையும் என்று நினைக்கிறேன்" என்றார்.
"பெரியப்பா! கர்மயோகியான நீங்கள் இந்தச் சிறியோனிடம் இப்படிப் பேசுவதா? நீங்கள் எப்படித் தவறு செய்ய முடியும்? இருந்தாலும், இந்த நிலையில் இருக்கும் நீங்கள் ஆசைப்படும் எதையும் செய்யத் தயாராக உள்ளேன். தயவுசெய்து தாங்கள் கூற வந்ததைக் கூறுங்கள்" என்று கூறி, பீஷ்மரின் அருகில் சென்று அமர்ந்தார் விதுரர்.
பீஷ்மர் ஆரம்பித்தார்: "அப்பா விதுரனே, நீயே முக்காலமும் உணர்ந்த முனிவன். நான் சொல்லப்போவதெல்லாம் உனக்குத் தெரிந்த விஷயம்தான். நான் என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறுகள் இரண்டு.
எல்லோருக்கும் தெரிந்த ஒரு தவறு—பாண்டவர் பக்கம் இருந்த நியாயத்தை நிலைநாட்டாமல், திருதராஷ்டிரன், துரியோதனன் பக்கம் நான் இணைந்தது. இந்தத் தவறுக்காக என்னைச் சரித்திரம் மன்னிக்கவே மன்னிக்காது; அதுவே எனக்கு மாபெரும் தண்டனை. ஆச்சா மரம் போல் வளர்ந்த இத்தவற்றின் கிளைகள் வேறு நிறைய உண்டு... திரௌபதியின் துயரத்தையும் சேர்த்து! அதைப் பற்றி இப்போது நான் பேசப்போவதில்லை. இன்று உலகே அதை அறியும். மேலோகத்திற்குச் சென்றாலும் நான் இந்தத் தவற்றுக்கான தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
ஆனால்,நான் ரொம்பவும் வருந்துவது என்னுடைய மற்றொரு தவறுக்காகத்தான். சரியாகப் பார்த்தால், இதுதான் என்னுடைய முதல் தவறு என்று கூற வேண்டும்."
"எதைப் பற்றிப் பேசுகிறீர்கள் பெரியப்பா?"
"அம்பை எப்படி இருக்கிறாள்?"
"அம்பையா? யாரது?"
"மன்னித்துக் கொள் விதுரா. வயதான, அடிபட்ட கிழவனின் வாய் கொஞ்சம் குழறுகிறது!" என்று சிரித்தார் பீஷ்மர்.
"சிகண்டி எப்படி இருக்கிறான் என்று கேட்க வந்தேன்."
புன்முறுவல் பூத்த விதுரர் கூறினார்: "இன்று போரின் முடிவில், சில நாழிகைகளுக்கு முன் வரை பாண்டவர் தரப்பில் பஞ்ச பாண்டவர்கள், கிருஷ்ணன், சாத்தியகி, திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகிய முக்கியமானவர்கள் மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். மற்ற எல்லாரையும் விட்டுவிட்டுச் சிகண்டியைப் பற்றி விசாரிக்கிறீர்களே பெரியப்பா? அர்ஜுனன் ரதத்தில் அவனுக்குக் கேடயமாய் அவன் முன் நின்று, உங்கள் மீது அம்பு மழை பொழிந்த, உங்களைக் கொல்லவே பிறந்த சிகண்டி மீது உங்களுக்கு என்ன கருணை?
இவ்வளவுக்கும் அவன் உங்கள் மீது எய்த அம்புகளையெல்லாம் பிடுங்கி கீழே போட்டு, 'என் உயிர் உன் அம்பால் போகாது; போனால் அது அர்ஜுனன் அம்பால்தான் போகும்' என்று அவனிடம் கூறினீர்களாமே பெரியப்பா? அப்படி உங்களை இந்த நிலைக்குக் கீழே தள்ளிய பெருமையானது, நீங்கள் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் கூட, கொஞ்சமாவது சிகண்டிக்கு உண்டு இல்லையா?" என்று மெதுவாகச் சிரித்துக்கொண்டே கேட்டார் விதுரர்.
"ஆம் விதுரா, நீ கூறியது உண்மைதான். என் உயிர் என் உடம்பிலிருந்து வெளியே செல்வதற்குக் சிகண்டிக்கு முக்கியமான பங்கு உண்டு என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நான் செய்த துரோகத்திற்குப் பிராயச்சித்தமே கிடைக்காது."
"அவன் உங்கள் உயிர் போவதற்குக் காரணமாய் இருந்த உங்கள் எதிரி என்னும்போது, அவனைப் பற்றி ஏன் இப்போது இந்த விசாரணை?"
"எல்லாம் தெரிந்தே என்னை கேள்வி கேட்கிறாய் விதுரா. நீ பிறப்பதற்கு முன்னால் நடந்த கதையையும் சொல்கிறேன். இதில் என் கதையும் வரும். என்னுடைய ஆத்ம சாந்திக்காகவாவது அதைக் கேள்" என்றார் பீஷ்மர்.
ஆம், விதுரருக்குத் தெரியாத விஷயம் எந்த உலகத்திலும் இல்லை; அவர் பரம ஞானி.
பீஷ்மரின் தலையைத் தடவிக்கொடுத்தபடியே, "சொல்லுங்கள் பெரியப்பா" என்றார் விதுரர்.
பீஷ்மர் பேச ஆரம்பித்தார். அவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த விதுரரும், குரு வம்சத்தின் பழைய காலக் கதைகளையும் நிகழ்ச்சிகளையும் தன் மனதில் நினைத்துப் பார்த்துக்கொண்டார்.
(தொடரும் )

Leave a comment
Upload