தொடர்கள்
விளையாட்டு
விம்பிள்டன் கிளைமேக்ஸ் - லண்டலினிருந்து கோமதி

20260618074236212.jpg20260618074256774.jpg

இரண்டு வாரங்கள் பரபரப்புடன் நடைபெற்ற விம்பிள்டன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியை செக் குடியரசை சேர்ந்த லிண்டா நோஸ்கோவா முதன்முறையாக வென்றுள்ளார். இருபத்தியொரு வயதாகும் லிண்டாவிற்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமும் கூட. இவரை எதிர்த்து விளையாடிய கரோலினா முச்சோவாவை, 6-2, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரியதொரு சாதனை நிகழ்த்தியுள்ளார். கரோலினாவும் செக் குடியரசு நாட்டையே சார்ந்தவர். இருவரும் நெருங்கிய தோழிகள் என்று தனது உரையில் இருவருமே குறிப்பிட்டு இருந்தனர். இந்த வெற்றியைப் பற்றி கூறும் பொழுது லிண்டா, உணர்ச்சிவசப்பட்டு, இரண்டாவது செட்டைத் தோற்றவுடன், மீண்டு வரவேண்டும் என்றும், விம்பிள்டன் கோப்பையை எப்படியாவது வென்றே ஆக வேண்டும் என்றும் தனக்குத் தானே பேசிக் கொண்டதாகக் கூறினார். இந்த வெற்றியை, இரண்டு வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் உயிரிழந்த தனது தாய்க்கு அர்ப்பணித்து கண் கலங்கி அவர் நிகழ்த்திய உரை, பார்வையாளர்களையும் உருக்கியது. ராயல் பாக்ஸில் இருந்த மார்டினாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இவருக்கு முன்பு பேசிய கரோலினா, இந்தத் தோல்வி தனக்கு ஏமாற்றமாக இருந்தாலும், தொடர்ந்து போராடுவேன் என்றும், மீண்டும் விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு வர வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் கூறினார். தன்னை வீழ்த்திய லிண்டா நோஸ்கோவாவை நகைச்சுவையாக தனது 'முன்னாள் தோழி' என்று அழைத்து, அவருடைய நம்ப முடியாத ஆட்டத்தைப் பாராட்டினார். இவரும் கண் கலங்கி நின்றதை கண்ட ரசிகர்கள்,தங்களது கரவொலி மூலம் ஊக்கப்படுத்தி, ஆதரவு தெரிவித்தனர். இரண்டாவது செட்டைத் தோற்று, அதிலிருந்து மீண்டு வெற்றி பெற்ற லிண்டாவின் விளையாட்டு, அவரது மனவலிமைக்கும், விடா முயற்சிக்குமான சான்றாகும்.

20260618074447238.jpg
ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், உலகின் முதன்மை வீரரான யானிக் சின்னர், பிரெஞ்சு ஓபன் சாம்பியனான அலெக்சாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதி ஆட்டத்தில், முதல் செட்டை இழந்த போதிலும் சின்னர் அசத்தலாக மீண்டு வந்து 6-7(7), 7-6(2), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 3 மணி நேரம் 46 நிமிடங்கள் போராடி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் தனது இரண்டாவது தொடர்ச்சியான விம்பிள்டன் பட்டத்தையும், ஒட்டுமொத்தமாக தனது ஐந்தாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றினார். ஸ்வெரெவின் சிறப்பான சர்வீஸ்களையும் மீறி, சின்னரின் நேர்த்தியான ஆட்டமும் இக்கட்டான தருணங்களில் அவர் காட்டிய நிதானமும் அவருக்கு இந்த வெற்றியைத் தேடித் தந்துள்ளது. தோல்வி அடைந்த போதிலும் ஸ்வெரெவ் மிகவும் கலகலப்பாகவும் பெருந்தன்மையுடனும் தனது உரையில், "நீ ஏன் உலகின் சிறந்த வீரராக இருக்கிறாய் என்பதை இன்று மீண்டும் நிரூபித்துவிட்டாய்" என்று சின்னரை பாராட்டினார். சின்னரின் பயிற்சியாளர்கள் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அவர்கள் மிகக் குறைந்த தரவரிசையில் இருந்து, சின்னர் உலகின் முதன்மை வீரராக உருவெடுக்க எவ்வளவு கடினமாக உழைத்தார்கள் என்பதையும் குறிப்பிட்டு பாராட்டினார். சின்னரும் தனது உரையில் ஸ்வெரெவை பாராட்டி பேசியதோடு, அவர் விம்பிள்டன் வெல்லும் காலம் மிகத் தொலைவில் இல்லை என்றும் மனதார வாழ்த்தினார். ஸ்வெரெவை நோக்கி, "நீயும் உன் குடும்பத்தினரும் சமீபத்தில் பிரெஞ்சு ஓபனை வென்று உங்களது முக்கிய இலக்கை அடைந்தீர்கள். இன்றும் நீ வெற்றிக்கு மிக அருகில் வந்தாய். நீ இதே போல் தொடர்ந்து விளையாடினால், விரைவில் விம்பிள்டன் கோப்பையை உனது வீட்டிற்கு கொண்டு செல்வாய் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்றார். இருவருமே விம்பிள்டன் அமைப்பாளர்களுக்கும், இந்தப் போட்டி சிறப்பாக நடைபெற உதவியவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர்.

20260618074717594.jpg

விம்பிள்டன் வெற்றியாளர் கோப்பையைப் பொறித்துக் கொண்டு, விம்பிள்டன் பால்கனிக்குக் கோப்பையுடன் சென்று அங்கிருக்கும் பார்வையாளர்களுக்குக் காண்பித்து, புகைப்படம் எடுப்பது என்பது வழக்கம். இறுதி ஆட்டத்தை இங்கிலாந்தின் அரச குடும்பத்தினர் கண்டு களிப்பதும் இன்று வரை நடைபெறும் ஒரு நிகழ்வு. சின்னர் இரண்டாவது முறையும், லிண்டா முதல் முறையாகவும், இந்த பாரம்பரிய வழக்கத்தைக் கடைப்பிடித்துத் தங்களது வெற்றியை கொண்டாடினார்கள்.