தொடர்கள்
அழகு
பிச்சாவரம் சதுப்புக்காடுகளின் மதிப்பு என்ன ??? - ப ஒப்பிலி 

20260618075059361.jpeg

சென்னை: கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பிச்சாவரம் சதுப்புக்காடுகளின் மொத்த பொருளாதார மதிப்பு ரூ.2,485.38 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள சமூக மற்றும் பொருளாதார மாற்ற நிறுவனம் (ISEC) மற்றும் தமிழக வனத்துறை இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வு, பிச்சாவரம் சதுப்புக்காடுகள் வழங்கும் சுற்றுச்சூழல் சேவைகளுக்கு முதன்முறையாக பண மதிப்பீட்டை வழங்கியுள்ளது.

ஆய்வின்படி, பிச்சாவரம் சதுப்புக்காடுகளின் ஒரு ஹெக்டேருக்கான மொத்த பொருளாதார மதிப்பு ரூ.1.83 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த உயர்ந்த மதிப்பு, காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துதல், பல்லுயிர் பாதுகாப்பு, மீன்வள உற்பத்தி, சுற்றுலா மேம்பாடு, கடற்கரை பாதுகாப்பு மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு சதுப்புக்காடுகள் அளிக்கும் பங்களிப்பை வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் சதுப்புக்காடுகளின் ‘நீல கார்பன்’ (Blue Carbon) சேமிப்பு திறனும் மதிப்பிடப்பட்டது. சின்னவைக்கால், பத்திராடி, முதசலோடை, எம்.ஜி.ஆர். திட்டம் உள்ளிட்ட சதுப்புக்காடுகளைச் சார்ந்த கிராமங்களில் வசிக்கும் 302 குடும்பங்களிடமிருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. சந்தை விலை முறை மற்றும் கார்பனின் சமூகச் செலவு (Social Cost of Carbon) உள்ளிட்ட பல்வேறு பொருளாதார மதிப்பீட்டு முறைகள் பயன்படுத்தப்பட்டன.

சதுப்புக்காடு தாவரங்கள் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 79.449 டன் கார்பனை, அதாவது சுமார் 291 டன் கார்பன்-டைஆக்சைடை சேமித்து வைத்திருப்பதாக ஆய்வு கண்டறிந்தது. டன் ஒன்றுக்கு 114 அமெரிக்க டாலர் என்ற சமூகக் கார்பன் செலவின் அடிப்படையில், தாவர கார்பன் சேமிப்பின் மதிப்பு ரூ.387 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சதுப்புக்காடுகளின் மண்ணில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 251.14 டன் கரிமக் கார்பன் இருப்பதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ.1,224.63 கோடியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. தாவரங்களிலும் மண்ணிலும் சேமிக்கப்பட்டுள்ள கார்பனை ஒருங்கிணைத்தபோது, பிச்சாவரம் சதுப்புக்காடுகளின் நீல கார்பன் சொத்து மதிப்பு ரூ.1,612 கோடி, அதாவது ஒரு ஹெக்டேருக்கு ரூ.1.19 கோடி என ஆய்வு மதிப்பிட்டுள்ளது.

“நீல கார்பனின் பெரும்பகுதி நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள மண்ணில் சேமிக்கப்பட்டுள்ளது. எனவே தாவரங்களையும் மண் அமைப்பையும் பாதுகாப்பது மிகவும் அவசியம். இந்த ஆய்வு, காலநிலை நிதி திட்டங்கள், நீல கார்பன் முயற்சிகள் மற்றும் இயற்கை மூலதன கணக்கீட்டு கொள்கைகளில் சதுப்புக்காடுகளை ஒருங்கிணைப்பதற்கான வலுவான ஆதாரமாக அமையும்,” என்று ISEC-இன் சுற்றுச்சூழல் பொருளாதார மைய இணைப் பேராசிரியர் எம் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.