தொடர்கள்
அனுபவம்
பாம்புகள்-இந்துமதி கணேஷ்

பாம்புகள் -பூவுலகின் தொல்லுயிர்-ஆசிரியர் : கோவை சதாசிவம்

20260617220228721.jpg

ஜுலை 16 ஆம் தேதி உலக பாம்புகள் தினம். பாம்புகளை பாதுகாக்க வேண்டிய தினம்.

உலகில் மனிதனால் மிக அதிகமாக பாதிப்புக்கு உள்ளான ஒரு உயிர் என்றால் அது பாம்புகள் தான்.

பாம்புகளை கண்டாலே அவற்றை கொல்ல வேண்டும் என்ற அனிச்சை செயல் மனிதனின் மனதில் பதிந்து போயிருக்கிறது,

உயிரின சூழலின் சமன்பாட்டிற்கு பாம்புகள் மிக முக்கியம் என்பதாலேயே இயற்கை பாம்புகளை உருவாக்கி இருக்கிறது.

பாம்புகளிடமிருந்து மனிதனையும், மனிதனிடமிருந்து பாம்புகளையும் பாதுகாக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி நூலாசிரியர் கோவை சதாசிவம் அவர்கள் இந்த நூலில் விலாவாரியாக விளக்குகிறார்.

சத்தியமங்கலம் அரசு கலை கல்லூரியில் பாம்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் ஆசிரியர் பேசிய பேச்சே இங்கு நூல் வடிவம் கண்டிருக்கிறது.

முதலில் பாம்புகள் நம்மை தீண்டியவுடன் இறந்து போய் விடுவோம் என்ற பயந்திலேயே பலர் இறந்து போவது தான் சோகம்.

சின்ன வயதில் தான் சின்னான் என்ற சிறிய பாம்பை பிடித்து விளையாடியதில் இருந்து தொடங்குகிறார்.

இந்தியாவில் பாம்புகளில் அதிகம் இருக்கும் மாநிலமாக கேரளா இருக்கிறது அங்குள்ள பாம்புகளின் வகைகளையும், விஷமுள்ள பாம்புகள் எவை, அவற்றை எப்படி கையாள வேண்டும் என்று பட்டியலிடுகிறார்.

முதலில் வருவது ராஜ நாகம் தான்,

அதன் வசிப்பிடம் மலைகளே.

அவைகள் விரும்பி புசிப்பதும் பாம்புகளை(சாரை) தான். ஆனால் அவற்றின் நஞ்சானது மிகவும் வீரியமானது,

நூறு மில்லிகிராம் நஞ்சானது இரண்டு யானைகளையும், இருபது மனிதர்களையும் கொல்லக் கூடியதாம்.

கரியன்சோலை என்ற சோலைக்காட்டுக்கு போன இடத்தில் ஆசிரியர் ராஜ நாகத்தை பார்க்கிறார்.

ராஜ நாகங்கள் பொதுவாக கூடி கட்டி முட்டை வைத்து குஞ்சு பொரிக்குமாம்.

முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளியே வரும் வரை பட்டினி கிடக்குமாம் பெண் நாகம், அதனால் குஞ்சுகளில் வலிமையற்றவைகளை தானே தேர்ந்தெடுத்து தின்று பசியாரும்.

அடுத்து கட்டுவிரியன், இதற்கு கோழியின் முட்டைகள் மிகவும் பிரியமென்கிறார்.

பகலில் சும்மாவே சுருண்டு படுத்திருக்கும் இது இரவில் லேசான அசைவுக்கே நம்மை கொத்தி விடுமாம்.

கடி உணர்ந்து ஆறு மணி நேரத்திற்குள் மருந்து எடுத்து கொண்டால் பிழைத்துக் கொள்ளலாம் என்கிறார்.

இதே போல கண்ணாடி விரியன்.

அதன் மேல் தோலில் கரும்பழுப்பு குறிகள் இருக்கும், இதை கொண்டு இது மலைப்பாம்பு என்று நினைப்பவர்கள் சிலருண்டு,.

இந்த பாம்பிற்கு நீளமான பல்லும் நஞ்சுப்பையும் தனித்தனியே இருக்குமாம்.

சுருட்டை விரியன் என்ற வகை பாம்பும் நஞ்சுள்ளது தான், அசைவு உணர்ந்ததும் கொத்திவிட்டு பின்பு சட்டென்று சுருண்டு கொண்டு விடும் வகை பாம்பு இது. இவற்றில் கண்ணாடி விரியன் குட்டி போடும் வகையை சார்ந்தது என்று கூறும் ஆசிரியர், முட்டை வைத்து குட்டி போடும் பாம்புகள் பொறுப்புணர்வாக பட்டினி கிடந்து தன் சந்ததியை பெருக்கும் அதனால் தான் அவை ராஜ நாகம் போல வீரியம் குறைந்த பலகீனமான குட்டிகளை தானே சாப்பிட்டு பசியாறும் என்கிறார்.

கடற்பாம்புகளிலும் அதிகமான நஞ்சுகள் உள்ளது என்றும் அவை அதி நவீன மீன்பிடி படகுகளால் பாதிக்கப்படுவதாகவும் கூறுகிறார்.

நல்ல பாம்பு என்ற நாகனை குறித்து இவர் சொல்லும் தகவல்கள் சுவராஸ்யமானவை. பாம்புகளுக்கு மலம் கழிக்க அவற்றின் உடலில் தனித்த துவாரம் இருப்பதாகவும் அவை இணை சேர்க்கையில் இணையை பற்றிக் கொள்ள அவற்றுக்கு கால்கள் இருப்பதாகவும் ஒரு ஆராய்ச்சி மூலம் தெரியவந்திருக்கிறது

எனவே பாம்பின் கால் பாம்பறியும் என்ற பழமொழி அப்படி தான் வந்திருக்கும் என்று கூறுகிறார். சினிமாக்களிலும் நெடுந்தொடர்களிலும் பாம்புகளை வைத்து மூட நம்பிக்கைகளை பரப்புரை செய்கிறார்கள் என்று சாடுகிறார்.

பாம்பு கடித்தவுடன் செய்ய வேண்டிய முதலுதவிகளை பட்டியலிடுகிறார்.

நஞ்சுகள் இரண்டு வகை படும், ஒன்று நரம்பை பாதிக் பாதிக்கும் நியூரோடாக்சின் மற்றொன்று குருதியை பாதிக்கு ஹீமோடாக்சின்.

எந்த பாம்பு கடித்தது என்று தெரிய வரும் போது அதற்கு ஏற்றவாரு "ஆண்டி ஸ்நேக் விநோம்" என்று சொல்ல கூடிய மருந்தை செலுத்தினால் உயிரை காப்பாற்றி விடலாம். இந்த மருந்துகள் பொதுவாக அரசு மருத்துவமனைகளில் தான் கிடைக்கும் தனியார் மருத்துவமனைகளில் கிடைக்காது என்பது மிக முக்கியமான தகவல்.

இந்த மருந்தை செய்ய பாம்புகளின் நஞ்சு தேவைப்படுகிறது, இதை இருளர்கள் வெகு சுலபமாக சேகரித்து விடுவார்கள் என்கிறார்,

இப்படி நஞ்சை சேகரித்து கொடுத்து பல உயிர்களை மீட்ட மாசி சடையனுக்கும் வடிவேல் கோபாலுக்கும் அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது என்பது மிக பெரிய மகிழ்ச்சியான செய்தி.

பாம்புகளை குறித்து சில மூட நம்பிக்கைகளை நாம் கொண்டிருக்கிறோம், அவையெல்லாம் பொய்யான பரப்புரைகள். பாம்புகளுக்கு நுகரும் திறன் மட்டுமே உண்டே தவிர அவைகளுக்கு செவிகள் இல்லை.

நம்முடைய உடலின் அதிர்வுகளை தங்களுடைய தாடை வழியாக உள்வாங்கி அகச்செவி வழியாக இயங்குகின்றன, மகுடியின் ஓசையை அவைகளால் கேட்க முடியாது. பாம்புகளால் பாலை அருந்த முடியாது அவற்றின் செரிமான உறுப்புகளில் பாலை செரிக்கும் திறன் கிடையாது. தங்கள் நஞ்சை கொண்டே இரைகளை செரிமானம் செய்கின்றன பாம்புகள்.

20260616164934595.jpg

பாம்புகளின் தொண்டைகளில் மாணிக்கம் உண்டா ? என்ற கேள்விக்கு வயதான பாம்புகள் வெகு நாட்கள் தங்கள் நஞ்சை பயன்படுத்தாமல் வைத்து அவற்றின் உடல் சுருங்கி போய்விடுமாம் அதன் நஞ்சு கட்டியாகி விடும் என்றும் அந்த நஞ்சை தான் மாணிக்கம் என்று கூறி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

பாம்புகளின் நஞ்சு கட்டியாகாது,

அது திரவமாகவே தான் இருக்கும்.

வயதாகும் போது நஞ்சு சுரப்பது குறையும் அதுவே அறிவியல் உண்மை என்கிறார்.

இதை குறித்து பாம்பாட்டி சித்தர் சட்டைமுனி சித்தரிடம் கேட்ட போது "உனக்குள் இருக்கும் பாம்பை தேடு" என்றாராம் சட்டைமுனி சித்தர், நமக்குள் இருக்கும் பாம்பு என்பது குண்டலினி சக்தி தானே!

இன்னும் மணியன் பாம்புகள், பச்சை பாம்புகள் அவை சார்ந்த மூட நம்பிக்கைகள் என்று நூல் முழுவதும் தகவல்களால் கொட்டிக் கிடக்கிறது.

நாலு வருடத்திற்கு முன்பு ஒரு நாக பஞ்சமி அன்று கரையான் புற்றில் பால் ஊற்றிய என் மதியீனத்தை நினைத்தால் எனக்கே வெட்கமாக இருக்கிறது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாக பஞ்சமி அன்று வழி படுகிறேன் பேர்வழி என்று பல பாம்புகளை கொன்று குவிக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இரு தலை நாகம் என்று ஒன்று உண்டா, இச்சாதாரி பாம்புகள் பூமியில் உள்ளனவா போன்ற அனைத்து கேள்விகளுக்கும் செறிவான பதில்களை தருகிறார் ஆசிரியர் கோவை சதாசிவம். தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் நிறைய இருப்பதால் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

பதிப்பகம் : குறிஞ்சி

பக்கங்கள் : 79

இந்துமதி கணேஷ்