
மா.பொ.சி நகர், அமைச்சர் இல்லம்.... எஸ்கார்டு வேண்டாம், பின்னால் யாரும் வரவேண்டாம், நான் பர்சனல் வேலையாகப் போகிறேன்..என்றபடி காரில் ஏறினார் நலத்துறை அமைச்சர் சக்தி.
டேய் நான் கிளம்பிட்டேன்டா, நீ ஏர்போர்ட் வெளியில வா டெர்மினல் 2 -ல் வந்து நில்லு,நான் உன்னை வாசலில் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் என தனது சக கல்லூரி நண்பனிடம் சொல்ல, அமைச்சரின் கார் ஏர்போர்ட் நோக்கிப் பறந்தது.
வாடா மணி, எப்படி இருக்கே? மூனு வருசத்திலே முகமே மாறிட்டு
நீ மட்டுமென்ன? எலக்சன்ல நின்னு எம்எல்ஏ ஆகி அமைச்சராகி உன் தோரணையே மாறிட்டு என கலாய்த்தான் மணி.
அமைச்சர் ஆனால் என்னடா?! உங்களுக்கு நான் எப்போதும் நண்பன்தானடா, என்ற அமைச்சர் சக்தி மணியை அழைத்துக் கொண்டு தான்படித்த கல்லூரி அமைந்துள்ள பூம்புகார் பகுதியை நோக்கி பயணித்தனர்.
டேய் வேற யாரெல்லாம் அலுமினி மீட்டிற்கு வருவதாக கன்பார்ம் பண்ணிருக்காங்க எனக் கேட்க,
நம்ம கடலூர் மண்ணாங்கட்டி சிதம்பரம் ஜமுக்கு ஜனா, கருவிப்பூச்சி, சீர்காழி கருப்பு சிவா, மாயவரம் ஐயரு, ஆக்கூர் எருமை வருவதாக சொல்லி இருக்காங்க டா என்றான் மணி.
ஆக்கூர் எருமையா?! யாருடா அது?! என்றார் சக்தி.
மறந்துட்டியா?!
இந்த தடவைதான் நம்பரைக் கண்டுபிடித்து சேர்த்தேன்,வெரி இன்ட்ரஸ்டிங் என்றான் மணி.
சுத்தமா ஞாபகம் இல்லடா எனக்கு என்றான் சக்தி.
கல்லூரிக்கு அவன் முதன் முதலில் வண்டியிலே வந்தன்னைக்கே அவங்கப்பா கல்லூரிக்கே அவனைத் தேடிக்கொண்டு
"எங்கே அந்த எருமை?" என கேட்டபடி வந்தார்.
அவரு எண்ணெய் வியபாரத்திற்காக மொபெட் வண்டி அவரு வாங்கியிருந்திருக்காரு, அவரிடம் சொல்லாமல் கொள்ளாமல் வண்டியை எடுத்துகிட்டு இவன் கல்லூரிக்கு வந்துட்டான், அதிலிருந்தே அவனை ஆக்கூர் எருமை என அழைக்க ஆரம்பித்தோம்.
அப்புறம் நம்ம காதல் சோடி புறாக்கள் இந்த வருடமாவது வருதா இல்லையா? என சக்தி கேட்டதும்
அவன் இல்லாமலா கண்டிப்பா வந்துருவன்டா. உள்ளூர்தானே கண்டிப்பா வந்துடுவாண்டா என்றான் மணி.
அவர்களது கார் கல்லூரியை அடைந்தவுடன்,ஏக வரவேற்பு, ஆராவாரம் என அமர்க்களப்பட,
இதெல்லாம் எதுக்கு ? என கல்லூரி நிர்வாகத்தையும் உள்ளூர் காவலர்களையும் கடிந்து கொண்டான் சக்தி.
நண்பர்கள் புடைசூழ்ந்த அந்த இடம் சிரிப்பும், மகிழ்ச்சியும், கூட்டத்தின் ஆராவாமும் என கல்லூரி அலுமினி விழா சந்திப்பு நடந்தேறியது.
என்னாச்சுடா சிவாவிற்கும்,சிவகாமிக்கும். ஏன் வரலை என எல்லோரும் கேட்க, எவரிடமும் எந்த தகவலோ பதிலோ இல்லை.
1994 ஆம்வருடம் இருக்கும் கல்லூரி இரண்டாமாண்டு..
கல்லூரிக்காலத்து காதல் பறவைகள் அவர்கள்.
கல்லூரி விழாக்களை ஒருங்கினைப்பதுடன் நன்றாகப் படித்ததால் பேராசிரியர்களிடல்நன்மதிப்பை பெற்றவர்கள் அவர்கள்.
"ஏய் சிவகாமி! உன் ஆளக்காமி! என வருசம்16 பாடலை மாற்றிப்பாடி நாங்கள் கேலி செய்ய முறைத்தபடி அவள் செல்ல,
சிவா மட்டும் வெட்கி தலைகுனிந்ததும் அரசப்புரசலாக அவர்களுக்குள் இருந்த இளமைக்காதல் எல்லோரும் அதைப் பற்றி பேசப்பேச அந்த காதல் வேரூன்றி முற்றி வளர்ந்து விட்டது.
இருவருமே உள்ளூர் என்பதினால் அடிக்கடி சந்தித்து காதல் வளர்ந்து, பெற்றோருடன் போராடி 2001 ஆம் ஆண்டில் மணமும் முடித்தான் என்பது வரைத் தெரியும்.
அலுமினி மீட் ஒன்றில் இருவரும் சோடியாக கலந்துக்கொண்டபோது ஆடிப்பாடினர். காதல் திருமணம் செய்து சந்தோசமாக இருக்கின்றோம் என்று அவர்கள் சொன்னபோது நாங்களே செயித்தது போல ஒரு உணர்வு எங்களுக்கு ஏற்பட்டது.
பழைய நண்பர்களையோ, காதலியையோ சந்திக்கும்போது தனது நிலை தாழ்ந்ததைக் காட்டிக்கொள்வது எத்தனை கொடுமை. இருந்தாலும் கடலூர் மண்ணாங்கட்டியின் ஏழ்மையும், அவனின் இயலாமையையும் அறிந்து மாணவர்கள் நல்ல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்களுக்கான உதவிகளைச் செய்தபோது கூட தன் பங்கிற்கு தொகையினை அனுப்பி வைத்தான் சிவா.
கடந்த முறையும் வரலை இப்போதும் ஏன் வரலை,புலனக்குருப்பில் இருக்கிறானே ஏன் வரலை ?
சரி வா அவனை வீட்டிற்குச் சென்று பார்ப்போமா ? என சக்தி கேட்கும்போதே அங்கே வந்துவிட்டான் சிவா..
ஏன்டா லேட்?! என கேட்டு இருவரும் அவனை கட்டித் தழுவ
ஆனந்தமும் துக்கமும் மனத்தினை அழுத்த சிவாவின் கண்கள் கலங்கி நின்றதைப் பார்த்த இருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை..
ஏண்டா?! பரவாயில்ல விடு அதான் வந்துட்டியே பார்த்து விட்டோமே! என அவனைத் தேற்றினர்.
சிவகாமி வரலையாடா?! என சக்தி கேட்டதற்கு இல்ல,வீட்லே இருக்கா என்றான்.
சரி வா வீட்டிற்குப் போவோம் என கிளம்பியவர்களை தடுத்தான்.
வேண்டாம்டா.. நீங்க ஊருக்கு கிளம்புங்கள் என்றான் சிவா.
நீ வரலையென உன் வீ்ட்டிற்குதான் கிளம்பினோம், வா என அழைத்தனர்.
வேண்டாம்..ப்ளீஸ் என அவர்களிடம் கெஞ்சியும் கேட்காத சக்தியும் மணியும்,
உனக்கு அவள் மனைவியாக இருக்கலாம்,அதற்கு முன்பே எங்கள் சக மாணவி சிவகாமி, நீ மூடிகிட்டு வா என்றனர் சிரித்தபடி.
சிவாவின் வீடு பராமரிப்பின்றி வெறிச்சோடிக் கிடந்தது.
இங்கேயே உட்காருங்க என வாசலில் இருந்த கட்டிலைக் காட்டினான் சிவா.
டீ போடவா என சிவா கேட்பதற்குள், உள்ளூர் ஆளும் கட்சி நிர்வாகிகள் விசயம் அறிந்து வந்து சேர்ந்துவிட்டனர், அவர்களிடத்தில் பேசி அவர்களை கலைந்துப் போகச் சொல்லிவிட்டு வந்த சக்திக்கு டீயைக் கொடுத்தான் சிவா..
ஏய்! சிவகாமி எங்கடா?!என்றனர் இருவரும் கோரசாக..
உள்ளே இருக்காடா ! என்றான் சிவா.
என்ன வெட்கப்படுகிறாளா ?! கூப்பிடுடா என்றனர்.
இரண்டு மாஸ்கை அவர்களிடம் சிவா கொடுத்து, இதைப் போட்டுக் கொள்ளுங்கள் என்றான்.
என்ன விளையாடறே என அவர்கள் வீட்டின் உள்ளே நுழைய முயன்றனர். நுழையும்போதே ஏதோ இனம்புரியாத வாடை அவர்களை வந்து தாக்க தன்னிச்சையாக கைகள் சென்று மூக்கை மூடினர்.
மணிக்கு குமட்டிக் கொண்டு வந்தாலும் நாகரீகம் கருதி அடக்கியபடி,
உள்ளே சென்று சிவகாமியைப் பார்த்ததில் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
சிவகாமி ஐந்தரையடி, பூசினார்போல உடல்வாகு, விழா நாட்களில் உரை நிகழ்த்தும்போதெல்லாம் பாவாடைத்தாவனியணிந்து கூந்தல் நிறைய மல்லிகை பூச்சூடாத நாட்களே கிடையாது. மாணவியாக இருந்தவரை அவளை ரசித்தோம், நண்பனின் காதலியான பின்பு அவர்கள் மீது அக்கரைகொண்டோம்.
அவளா இது?
உடல் இளைத்து,முடிகள் உதிர்ந்து முகம் சுருங்கி,கண்கள் இடுங்கி மேல் சொருகி,உள்ளங்கை வீங்கி குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில் வாட்டர் பெட்டில் உடலெங்கும் புண்கள் வந்து மெல்லியத்துணி ஒன்றினைப் போர்த்தியபடி கருவாடு போல படுக்கையில் நினைவுகளிழந்துக் கிடந்தாள்.
என்னதாண்டானது?! எப்போதிலிருந்துடா? என அவர்களின் கேள்விகளால் நிலை குலைந்துப்போனான் சிவா.
நம்ம அலுமினி 2021 ல் நடந்தபோது ஆடிப்பாடி மகிழ்ந்து ரொம்ப சந்தோசமாத்தான் வீடு திரும்பினோம், இரவு திடீரென மயக்கமாகி விழுந்தாள். மூன்று மாத சிகிச்சைக்குப் பிறகு மூளைக்குச் செல்லும் நரம்புகள் சுருங்கி விட்டதாகவும் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் வேறு வழியில்லை என அனுப்பிவிட்டனர்.
மருத்துவ அறிக்கைகளை வாங்கிய சக்தி, சுகாதார அமைச்சருக்கு அனுப்பி விளக்கம் வேண்டும் என்றார்.
இது கோமாவின் உச்சகட்ட நான்காம் நிலை. 'வெஜிடேட்டிவ் அன்கான்ஷியஸ்னஸ்' என்னும் நிலை. ஆழ்ந்த மயக்க நிலைக்குச் சென்று விடுவர். மூளையின் கட்டளை மூலம் உடல் உறுப்புகள் இயங்கும். வயிற்றில் உணவு செரிமானமாகும். சிறுநீர்,மலங்கள் வெளியேறும். வியர்வை சுரப்பிகள் வேலை செய்யும். ஆனால் இவர்களுக்கு தொடுதல் உணர்வோ வலிகளோ இருக்காது என விளக்கம் அளித்தனர்.
ஐந்து வருடங்களாக இப்படித்தான் கிடக்கிறாள் என்று கலங்கி நின்றான் சிவா.
தனியாக சென்று பேசிய மணியும், சக்தியும் பூரண நலம் பெற்றாலும் பழைய இயல்பு நிலைக்கு திரும்புவது கடினம் என சொல்கிறார்கள்,
ஆனால் உயிரும் அவ்வளவு எளிதில் போகாது, உடலில் உள்ள புண்களும் அதன் துர்நாற்றமும் இவனை மனரீதியாகவும் உடல் ரீதியிலும் பாதிக்க ஆரம்பித்துவிடுமுன் இதற்கு தீர்வு காண வேண்டும் என பலரிடம் பேசி நண்பன் சிவாவின் துக்கத்தினை நீக்க ஒரு முடிவெடுத்தனர்.
சிவா இந்த ஐந்து வருடத்தில் மனைவியை அருகிலிருந்து நன்றாகப் பார்த்துக் கொண்டுள்ளாய்.. ஆனால் வந்திருப்பது தீராத வியாதி, எத்தனை நாள் இப்படியே உன்னால் தொடர முடியும்? இருவருக்குமே இது நல்லதல்ல என்ற சக்தி, உனக்கென வாழ்க்கையில்லையா,
இதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது என்று நிறுத்தியவர்
என்ன ?! சிவா கேட்க
கருணைக்கொலை மனு மாத்திரம் கொடு! முயன்று நான் விரைவில் நீதிமன்ற அனுமதி வாங்கித் தருகிறேன், அவளும் நிம்மதியாக உலகைப் பிரியட்டும் என்றார் சக்தி.
உடனே மறுத்து விட்டான் சிவா.
வேறு வழியில்லை சிவா,எங்களுக்கு உன் நலமும் முக்கியம் நன்றாக யோசிடா என்றனர்.
நான் அவள் உடலைக் காதலிக்கவில்லை, அவளையே உயிராகக் காதலித்தேன். அந்த உயிர் மிச்சம் உடலில் இருக்கிறதே! அது போதும் என்று சொல்லி அமைதியானான் சிவா.அறையிலிருந்த சிவகாமியின் விழிகளிலிருந்து நீர் கசிந்தது.
அந்த விழி நீரின் எடை எவ்வளவு இருக்கும்?

Leave a comment
Upload