தொடர்கள்
ஆன்மீகம்
ஆடி மாதம் பொறந்தாச்சு..!! - மீனாசேகர்.

The month of Aadi has arrived..!!

இந்த ஆண்டு (2026) ஆடி மாதம் ஜூலை 17 -ம் தேதி வெள்ளிக்கிழமை துவங்கி, ஆகஸ்ட் 17-ம் தேதி திங்கட்கிழமை நிறைவடைகிறது.
ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாடு, குலதெய்வம் பூஜை மற்றும் பண்டிகைகளுக்கு மிகவும் உகந்தது. இந்த மாதம் ஆன்மீகத்தில் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் பண்டிகைகள், கோயில் திருவிழாக்கள் என்று தொடர்ந்து வந்தபடியே இருக்கும்.
நாம் இறைவனைத் துதிப்பதற்கும், சிந்தனை செய்வதற்கும் ஆன்மிக ஸ்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் பண்டைக்காலம் தொட்டுத் தவிர்க்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர ஆடி மாதம் விவசாயத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. "ஆடிப்பட்டம் தேடி விதை" என்பதற்கு ஏற்ப இந்த மாதத்தில் விதை விதைக்கும் காலம் ஆரம்பமாகிறது.
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுவதும் வழக்கம். அறிவியல் பூர்வமாக, ஆடி மாதத்தில் பருவநிலை மாறுபடுவதாலும் காற்று அதிகம் வீசும் காலம் என்பதாலும் பலவிதமான நோய்கள் பரவும். பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ற எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத் தெய்வத்தின் பிரசாதம் என்ற பெயரில் கூழ், மோர், இளநீர், வேப்பிலை ஆகியவற்றைச் சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.

The month of Aadi has arrived..!!

ஆடி மாத சிறப்பு:
பார்வதியின் தவத்தைப் போற்றிய பரமசிவன் ஆடிமாதம் அம்மனின் அருள் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.
ஆடி மாதத்தில் சிவனின் சக்தியைவிட அம்மனுக்குச் சக்தி அதிகமாக இருக்கும். இந்த மாதத்தில் மட்டும் சக்திக்குள் சிவன் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம்.
விண்ணுலகில் இருந்த 'ஆடி' என்ற தேவமங்கை, சிவபெருமானின் சாபத்தால் மண்ணுலகில் வேப்ப மரமாகத் தோன்றினாள். இந்த அதிசய நிகழ்வு ஆன்மீகத்தில் மிகவும் போற்றப்படுகிறது.
பூமாதேவி அவதரித்தது ஆடி மாதம் என்று சொல்லப்படுகிறது.“அரங்கநாதனையே மணப்பேன்” என்ற உறுதியுடன் வாழ்ந்த ஆண்டாள் திரு அவதாரம் செய்ததும் ஆடிப்பூரம் திருநாளில்தான்.
கருடாழ்வார் ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர். அவரது பிறந்த தினம் ‘கருட பஞ்சமி’ எனக் கொண்டாடுகிறோம்.
அம்பிகைக்குச் சங்கர நாராயணராகச் சிவபெருமான் காட்சி அளித்தது , கஜேந்திர மோட்சம் நடந்தது. இப்படிப் பல தெய்வீக நிகழ்வுகள் இந்த ஆடி மாதத்தில் தான் நடந்தது.
அப்பரடிகளுக்கு திருவையாற்றில் சிவபெருமான் கைலாயக் காட்சி அருளியதும், ஆடி மாதம் ஸ்வாதியில் சுந்தரமூர்த்தி நாயனாருக்குக் கயிலையில் இருந்து வெள்ளையானையை அனுப்பி இறைவன் அழைத்துக் கொண்டதும் மற்றும் பட்டினத்தார், பெருமிழலைக் குறும்ப நாயனார், மூர்த்தி நாயனார், புகழ்ச்சோழ நாயனார் முக்தி பெற்றது என்று பற்பல தெய்வீக அற்புதங்கள் நிறைந்து இருப்பதாலும் ஆடி மாதம் ஒரு தெய்வீக மாதம் என்றால் மிகையில்லை.
இந்த ஆடிமாதத்தில் தான் கற்புக்கரசி “கண்ணகி” தனக்குத் தவறாக நீதி வழங்கிய பாண்டிய மன்னனின் மதுரை மாநகரை எரித்ததாக வரலாறு கூறுகிறது.

The month of Aadi has arrived..!!

பண்டிகைகள் நிறைந்த ஆடி:
ஆடி மாதத்தில் எல்லா நாட்களும் தெய்வீகம் நிறைந்தவை.
எனினும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் அம்பிகைக்கு ஏற்றவை. இதைத்தவிர ஆடிப்பண்டிகை, ஆடிக்கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, வரலக்ஷ்மி விரதம், ஹயக்ரீவர் ஜெயந்தி, ஆகிய பண்டிகைகள் தொடர்ந்து வருகின்றன.

​ The month of Aadi has arrived..!!

அம்மன் ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கரகம், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், போன்ற விழாக்களை இன்றும் நடத்தி வருகிறார்கள்.
ஆடி மாதத்தில் வரும் பண்டிகைகள், மற்றும் திருவிழாக்களை நாமும் கொண்டாடி, அம்மனின் அருள் பெறுவோம்!!

 The month of Aadi has arrived..!!