தொடர்கள்
நேயம்
நீலகிரி மாவட்ட நிர்வாகம் சர் தாமஸ் மன்றோ 200 வது நினைவு வருடத்தை சிறப்பிக்குமா ? - ஸ்வேதா அப்புதாஸ்

நவீன நீலகிரியை உருவாக்கிய ஜான் சல்லிவன் இந்த மாவட்ட மக்களின் நினைவில் என்றும் இடம்பெற்றிருக்க ,இந்த மலை மாவட்டம் உருவாக அனைத்து அரசு உதவிகளும் செய்து கொடுத்த மெட்ராஸ் மாகாண ஆளுநர் சர் தாமஸ் மன்றோவை பற்றி பெரும்பாலும் யாருக்கும் தெரியாமல் இருக்கதான் செய்கிறது.

20260616221809585.jpeg

நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் தர்மலிங்கம் சர் தாமஸ் மன்றோ இறந்து 200 ஆண்டுகள் நினைவு அலைகளை பகிர்ந்து கொண்டு அவரின் திறமையான நிர்வாக திறமையை பாராட்டி நீலகிரி வளர அவரின் பங்களிப்பை பாராட்டி இந்த வருடம் அவரை நினைவு கூற அழைப்பை விடுத்துள்ளார்.

ஜூலை 6 ஆம் தேதி அவரின் 200 வது நினைவு தினம் அன்றிலிருந்து அடுத்த வருடம் இதே நாள் வரை அவரின் நினைவு கொண்டாட்டங்கள் தொடரலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

20260616221903148.jpeg

கடந்த வாரம் ஊட்டி தலைமை நூலகத்தில் இது தொடர்பாக ஒரு சிறிய கூட்டம் நடைபெற்றது அதில் நீலகிரி மாவட்ட நூலகர் கிளமெண்ட் , நீலகிரி வாசகர் வட்ட தலைவர் அமுதவல்லி மற்றும் நீலகிரி வரலாற்று போதகர் மல்லி கலந்து கொண்டு மன்றோவை பற்றி நினைவு கூறினர்.
ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் கூறும்போது,

20260616221930668.jpeg
“ சர் மன்றோ 1820 முதல் 1827 வரை மெட்ராஸ் மாகாண கவர்னராக சாதனைகள் படைத்துள்ளார்.
தென்னிந்தியாவை ஒரு நவீன மாகாணமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
மாவட்ட கலெக்டர் அலுவலகம்,வட்டார மொழி வளர்ச்சி கல்வி மற்றும் கிராமங்களில் பஞ்சாயத் முறை உருவாக்கிய பெருமை இவரை சேரும்.

மாவட்ட ஆட்சியர் பதவி உருவாக்கி மாவட்ட நிர்வாகம் முழுவதற்கும் கலெக்டர் அதிகாரத்திற்கு உட்பட்டதாக அறிவித்தார்.
இது நாள் வரை எல்லா மாவட்டங்களிலும் கலெக்டர் தான் முழு அதிகாரம் படைத்தவர்.

அனைத்து நிர்வாகத்திலும் இந்திய அதிகாரிகளை நியமித்து மக்களிடம் நேரடி தொடர்பை ஏற்படுத்தினார்.
1822 ஜூன் மாதம் மன்றோ முதல் உள்நாட்டு மொழி கல்வி குறித்த ஆய்வை மெட்ராஸ் மாகாணம் முழுவதும் மேற்கொண்டார்.
உள்நாட்டு கல்வி முறைக்கு கட்டாய முக்கியதுவம் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார் .
காவல் துறை, நிதி நிர்வாகம் உருவாக்கி தசில்தார் பதவியை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராம பஞ்சாயத்தை ஏற்படுத்தி அந்தந்த கிராம மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் என்று கூறியவர் மன்றோ.
நீலகிரி உருவாக அனைத்து நிர்வாக வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்தவர் தாமஸ் மன்றோ.
1819 ஆம் ஆண்டு ஜான் சல்லிவன் கோயம்பத்தூர் கலெக்டராக பொறுப்பேற்க 1820 ஆம் ஆண்டு மன்றோ மெட்ராஸ் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
சல்லிவன் முதல் பிரிட்டிஷ் மலை வாசஸ்தலமான நீலகிரியை உருவாக்க முழு சுதந்திரத்தைப் பெற்று வந்தார்.

20260616222014259.jpeg
சிறுமுகை வழியாக 1826 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மன்றோ நீலகிரிக்கு விஜயம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.
1827 மே மாதம் கிழக்கு இந்தியா கம்பெனி இயக்குனர் குழுவிடம் நீலகிரி ஒரு மலை வாசஸ்தலமாக மாற்றலாம் மக்கள் வாழுமிடமாக உருவாக்க பரிந்துரைகள் செய்தார்.
நீலகிரி உருவாக எல்லா நிதி உதவியும் செய்து கொடுத்தவர் கவர்னர் தாமஸ் மன்றோ.
ஆந்திராவும் மெட்ராஸ் மாகணத்துடன் இணைந்து இருந்ததால் அங்கும் அவரின் நிர்வாக பணி விரிவானது.
1827 ஜூலை மாதம் ஆந்திரா பெல்லாரி மாவட்டதிற்கு விசிட் செய்தார்.
அந்த மாவட்டத்தில் காலரா நோய் பரவியிருந்தது. கவர்னர் அலுவலக அதிகாரிகள் அங்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்தனர்.
என் மக்களை பார்க்க செல்கிறேன் ஒன்றும் ஆகாது என்று கூறி சென்றார் காலரா தொற்று நோய் மன்றோவை தொற்றி கொள்ள 1827 ஜூலை 6 ஆம் தேதி கர்னூல் மாவட்டத்தில் உள்ள பட்டிக்கொண்டா என்ற ஊரில் இறந்து போனார்.

அவரின் இறப்புக்கு முந்தின நாள் மெட்ராஸ் அரசு மன்றோவின் பரிந்துரையை ஏற்று நீலகிரி மலை வாசஸ்தலமாக உருவாக அங்கீகாரம் வழங்கியது.
அவரின் உடல் பட்டிக்கொண்டாவில் அடக்கம் செய்யப்பட்டு பின்னர் உடல் மெட்ராஸ் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வீற்றிருக்கும் செயின்ட்.மேரிஸ் தேவாலயத்திற்கு எடுத்துவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

போதகர் மல்லி கூறும்போது,
“ சர் தாமஸ் மன்றோ தமிழகத்தில் ஏராளமான முன்னேற்ற பணிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் முக்கியமாக உழவர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார் .
ரயோத்வாரி திட்டத்தை அறிமுகம் செய்தவர் விவசாயிகள் இடையே இருந்த இடைத்தரகர்கள் மற்றும் ஜமீன்தார் முறையை அகற்றி நேரடியாக விவசாயிகள் அரசாங்கத்திடம் விளை பொருட்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்தார் அதனால் ரயோத்வாரி தந்தை என்று அழைக்கப்பட்டார்.
நிலத்திற்கு பட்டா சிட்டா அறிமுகம் செய்தது மன்றோ .

20260616222055884.jpeg

வாசகர் வட்ட தலைவர் அமுதவல்லி கூறும் போது,
“ மாநில சுயாட்சி, நிர்வாகம் ,காவல் மற்றும் கல்வி நம் தென்னிந்தியாவில் அறிமுகம் செய்து நிர்வகித்த ஒரு ஆளுநர் சர் தாமஸ் மன்றோ.
ஜான் சல்லிவனின் அழைப்பை ஏற்று நீலகிரிக்கு வந்து ஸ்டோன் அவுசில் தங்கி இந்த மலை ஊரை ரசித்து அவரின் மனைவி ஜேன் மன்றோவிற்கு கடிதம் எழுதினார் “நீ உன் வாழ்நாளில் ஒரு முறையாவது. நீலகிரிக்கு வந்து இந்த அழகிய மலையை கண்டு ரசிக்க வேண்டும் “என்று.
காலத்தில் அழியாத அழகிய நீலகிரி உருவாகவும் தென்னிந்தியாவின் நிர்வாகத்தை உருவாக்கிய ஆளுநர் சர் தாமஸ் மன்றோவின் 200 வது சாதனை நினைவுகளை கொண்டாட நீலகிரி மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும்.