தொடர்கள்
சினிமா
இசை தேவதை !! எஸ். ஜானகி !! -மரியா சிவானந்தம்

20260617110728222.jpg

இப்போது இலையுதிர்காலம் ...

நேற்று வரை காற்றில் அசைந்து நிழல் தந்த மரத்தின் இலைகள், பழுத்து உதிரும் காலம் இது. ஒரு மாத காலத்தில் நமக்கு மகிழ்வும், இதமும் தந்த மூன்று திரை ஆளுமைகள் இம்மண்ணில் இருந்து மறைந்துப் போனார்கள்.

பாரதிராஜா, பாக்யராஜ், எஸ்.ஜானகி...

இவர்கள் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக தமிழ் ரசிகர்கள் உடன் பயணித்தவர்கள் உணர்வில் கலந்தவர்கள். தலை சிறந்த படைப்பாளுமை கொண்டவர்கள். இவர்களுள் 'தென்னிந்தியாவின் கானக்குயில்' என்று அழைக்கப்படும் எஸ்.ஜானகி அவர்களின் இழப்பு, திரை இசைக்கு நிகழ்ந்த பேரிழப்பு.

ஜானகி அம்மா பிறவி இசையை வரமாக பெற்றவர் ... இசைக்கடவுளின் அருளைப் பூரணமாக நிறையப் பெற்றவர். அவரது தேன்குரலில் பல மொழிப்பாடல்கள், குறிப்பாக தென்னிந்திய மொழிப்பாடல்கள் சாகாவரம் பெற்றன.

மிகச் சிறிய வயதிலியே கேட்ட பாடலை உடனடியாக பாடும் ஆற்றல் பெற்றவர். அவரது அன்னை அவரை முறையான சங்கீதம் கற்றுக் கொள்ள பைடிஸ்வாமி என்ற நாதஸ்வர குருவிடம் அடிப்படை சங்கீத நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள அனுப்பினார். அப்போது, அவரைப் பாட சொல்லி கேட்ட குரு "உனக்கு நான் என்ன கற்பிப்பது, நீ சங்கீதத்தை வரமாக பெற்றவள்!" என்றாராம். இத்தகவலை மனதோடு மனோ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி பேட்டியில் ஜானகி அம்மா சொல்லி இருக்கிறார்.

அவரது இசை தனித்துவம் மிக்கது. உள்ளத்தை ஊடுருவி, நம் சோகங்களில் துணை நிற்கும் இதமான குரல். நம் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் குரல். உள் மனத்தின் ஓசைகளைச் சமன்படுத்தி,அமைதியைத் தரும் குரல்.

ஜானகி பாடத்தொடங்கிய ஆரம்பகாலத்தில் பி.சுசிலா, எல்.ஆர் .ஈஸ்வரி, பி.லீலா ,ஜிக்கி , ராஜேஸ்வரி போன்றோர் பாடினார்கள். பிற்காலத்தில் கே.எஸ் சித்ரா, வாணி ஜெயராம், ஜென்சி, ஸ்வர்ணலதா, சுஜாதா போன்றோர் பாடினார்கள். ஆனாலும் எவருடனும் ஒப்பிட முடியாத தனித்துவம் மிக்க குரல் இவருடைய குரல்.'இவரைப்போல' என்றோ , 'இவரை விட' என்றோ யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு குரல் அது.

குழந்தையாக 'டாடி டாடி ஓ மை டாடி' என்று கொஞ்சிய அக்குரல் . 'பழைய நினைப்புதான் பேராண்டி' என்று கிழவியாக நடுங்கியது.இரண்டு வயதோ , இருவது வயதோ, அறுபது வயதோ, எந்த வயதையும் தன் குரலில் கொணரும் வல்லமை அவருக்கு இருந்தது.எல்லா நடிகையருக்கும் ஏற்ற ஒரு குரலாக, அவரவர் பாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் காதல், சோகம், பாசம், தாபம் என்று நவரசங்களைக் கொட்டியது.

ஜானகி அம்மா எளிமையின் வடிவமாக விளங்கினார். மிகையான ஒப்பனை அலங்காரங்களுடன் எப்போதும் அவர் மேடையில் தோன்றியதில்லை. பெரிய குங்குமப்பொட்டு, வகிட்டில் குங்குமம், எளிய சேலை, கழுத்தை மூடிய ரவிக்கை அவரது அடையாளங்களாக இருந்தன. கணவர் ராம்பிரசாத்தின் இறப்புக்குப் பின்னர் எல்லா அணிகலன்களையும் களைந்து ஒரு துறவி போல திருநீறும் , வெண்ணிற சேலையும் அணிந்தார்.

அவரது தோற்றம் மட்டுமல்ல, மேடையில் அவரது நடத்தையும் மிக எளிமையாக இருக்கும்.பகட்டும், பந்தாவும் இல்லாமல் இளம் பாடகர்களுக்கு ஒரு அன்னையைப் போல, ஆசிரியையைப் போல வழி நடத்துவார். மனமார பாராட்டி, வாழ்த்துவார்.இசையை ஒரு தவம் போல போற்றி வாழ்ந்தவர். சக திரை இசை கலைஞர்களுடன் அன்பு பாராட்டி வாழ்ந்தவர். எல்லோரையும் மதிப்புடன் நடத்தியவர். கனிவும், பரிவும், பண்பும், தன்னடக்கமும் கொண்ட பாடகராக அவர் மேடையிலும் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்.

அவர் பாடும் உடல் மொழி பிற பாடகர்களிடம் இருந்து மாறுபட்டது ஒரு சிறிய நோட்டுப்புத்தகத்தில் பாடல் வரிகளை எழுதி வைத்துக் கொண்டு, முகத்தில் , உடலில் ஒரு சிறு அசைவும் இன்றி பாடுவார். பாடலில் இருக்கும் உணர்வுகளும், பாவங்களும், துள்ளலும் குரலில் மட்டுமே காட்டுவார்'.குத்தாட்டப் பாடல் பாடும் போது கூட , அரங்கமே ஆடினாலும் அவர் சிறு அசைவையும் காட்ட மாட்டார் என்பது சிறப்பு

17 மொழிகளில் , 48,000 பாடல்கள், நான்கு தேசிய விருதுகள் , 33 மாநில அரசு விருதுகள்.தமிழக அரசின் கலைமாமணி பட்டம், பிலிம்பேரின் வாழ்நாள் சாதனையாளர் விருது, மைசூர் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் என்று அவர் பெற்ற விருதுகளின் பட்டியல் நீள்கிறது. அவரது பாடல்களைத் தேட ஆரம்பித்தால், முத்துக்கள் கொட்டிக்கிடக்கும் ஒரு ஆழ்கடலே நம் கண்முன் விரிந்து பரவுகிறது .

புகழ் மிக்க வாழ்வை 88 வயது வரை வாழ்ந்து முடித்தார் ஜானகி அம்மா. 2023 ஆம் ஆண்டு, பத்மபூஷன் பட்டத்துக்கு தேர்நதெடுக்கப்பட்ட போது அந்த தாமதிக்கப்பட்ட அங்கீகாரத்தை நிராகரித்தார். மக்களின் மனதில் இசை அரசியாக கொடி கட்டி பறப்பவருக்கு, இந்த தாமத அங்கீகாரம் உயர்வாக தோன்றவில்லை.

2016 ஆம் ஆண்டு '10 கல்பனகள்' என்ற மலையாளத் திரைப்பட பாடலுடன் , 'இனி நான் பாடுவதில்லை' என்று தன் ஓய்வை அறிவித்தார் ஜானகி. அதன் பின்னர் அவர் திரைப்பாடல்களைத் தவிர்த்தது மட்டுமன்றி மேடை நிகழ்ச்சிகளையும் தவிர்த்தார். ஆனால் இறுதிவரை அவர் குரல் நடுக்கமின்றி இருந்தது'

ஜானகி அம்மா தன் இசையால் நம்மை வருடி தந்தார்.'தாலாட்டும் பூங்காற்று நானல்லவா? என்று நம்மைத் தாலாட்டினார். தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே' என்று தூங்க வைத்தார். பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றலாக 'நமக்கு அமைதி தந்தார்.

பிறப்பெடுத்த பெரும் பணியை, தவம் போல முடித்து, இத்தனை புகழையும் அவருக்கு அளித்தவரிடம் புறப்பட்டுச் சென்றார்.

தன் இசையால் என்றென்றும் நம் உள்ளங்களில் வாழ்வார்