தொடர்கள்
விளையாட்டு
லார்ட்ஸில் சிங்கப் பெண் ! யாஸ்திகா பாட்டியா !! - லண்டனிலிருந்து கோமதி

20260618073132591.jpg

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 கிரிக்கெட் போட்டியில் நமது இந்திய வீரர்களின் தொடர் தோல்வியைத் தொடர்ந்து, மனம் நொந்திருந்த கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் பாலை வார்க்கும் விதத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நமது இந்திய மகளிர் அணி வென்றுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியை இந்தியா வென்றுள்ளது. இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 285 ரன்கள் என்ற இலக்கோடு தனது ஆட்டத்தைத் தொடங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 83 ரன்கள், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 58 ரன்கள் மற்றும் தீப்தி சர்மா 57 ரன்கள் என இவர்களின் அபாரமான ஆட்டத்தால் இந்தியா இந்த மாபெரும் இலக்கை எட்டியது. இங்கிலாந்து வீராங்கனை சோஃபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்து தனது முதலாவது இன்னிங்ஸில் 170 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கௌத் இங்கிலாந்து பேட்டிங் வரிசையைச் சிதறடித்து 37 ரன்கள் மட்டுமே கொடுத்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில், 341 ரன்கள் எடுத்து, ஏழு விக்கெட்டுகள் மட்டுமே இழந்த நிலையில் ஆட்டத்தை முடிப்பதாக அறிவித்தது. இந்திய அணியில், விக்கெட் கீப்பர்-பேட்டர் யாஸ்திகா பாட்டியா அபாரமாக விளையாடி 113 ரன்கள் எடுத்து லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த முதல் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். ஸ்மிருதி மந்தனா 70 ரன்களும், ரிச்சா கோஷ் அதிரடியாக 50 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்துக்கு 457 ரன்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இமாலய இலக்குடன் களம் புகுந்த இங்கிலாந்து அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சினே ரானா 4 விக்கெட்டுகளையும், கிராந்தி கௌத் மற்றும் சாயலி சத்காரே தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இறுதியில் எமி ஜோன்ஸ் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து 54 ரன்கள் எடுத்தாலும், இங்கிலாந்து அணி 186 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது மகளிர் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு எதிராக அபாரமாக விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான யாஸ்திகா பாட்டியா, இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த உலகின் முதல் பெண் கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடிப்பது என்பது, எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் தனது வாழ்நாள் கனவாகும். ஆண்கள் கிரிக்கெட்டில், வினூ மன்கட், திலீப் வெங்சர்க்கார், சௌரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோர் இங்கு சதம் அடித்து, தங்களின் பெயர்களை லார்ட்ஸ் கௌரவப் பலகையில் பதிய வைத்துள்ளனர். தற்போது, அந்தப் பெருமைமிக்க வரிசையில் முதல் இந்தியப் பெண்ணாக மட்டுமன்றி, உலகிலேயே லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் பெண் என்ற சாதனையை யாஸ்திகா பாட்டியா நிகழ்த்தியுள்ளார். இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸில், மூன்றாவது ஆட்ட நாயகியாகக் களமிறங்கிய யாஸ்திகா பாட்டியா, ஆரம்பம் முதலே நிதானமாகவும், அதே சமயம் நேர்த்தியாகவும் விளையாடினாள். 145 பந்துகளில், 14 பவுண்டரிகள் எடுத்து தனது சதத்தை நிறைவு செய்தாள். சதம் அடித்த தருணத்தில், யாஸ்திகா தனது ஹெல்மெட்டைக் கழற்றி, மைதானத்தில் மண்டியிட்டு பிட்சை நோக்கி வணங்கி உணர்ச்சிப்பூர்வமாகக் கொண்டாடிய விதம் ரசிகர்களை நெகிழ வைத்தது. காயத்திலிருந்து மீண்டு வந்த சிங்கப்பெண் யாஸ்திகாவிற்கு, இந்தச் சாதனை எளிதாகக் கிடைத்துவிடவில்லை.

கடந்த ஆண்டு அவர் கடுமையான முழங்கால் அறுவை சிகிச்சைக்கு ஆளானார். அதன்பின் பல மாதங்கள் தீவிர உடற்பயிற்சி மற்றும் மறுவாழ்வு சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும் அணிக்குத் திரும்பினார். "சில மாதங்களுக்கு முன்பு வரை நான் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடிப்பேன் என்று கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. இந்த வெற்றிக்கு உதவிய எனது பெற்றோர், மருத்துவர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி" என்று சதம் அடித்த பிறகு நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். யாஸ்திகா பாட்டியாவின் சதம் மற்றும் கிராந்தி கௌத்தின் அசத்தலான 5 விக்கெட் ஆகியவற்றின் உதவியோடு, இந்திய மகளிர் அணி இங்கிலாந்தை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த மாபெரும் வரலாற்று வெற்றி, இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய பொற்காலத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. லார்ட்ஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க மைதானத்தில் இந்தியாவின் தேசியக் கொடி கம்பீரமாகப் பறக்க, யாஸ்திகா பாட்டியாவின் பெயர் அதன் கௌரவப் பலகையில் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும்!