
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம் |
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் ||
பொருள்: வேதங்கள், சாஸ்திரங்கள், மற்றும் புராணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணையின் வடிவமானவரும், உலகம் முழுவதற்கும் மங்கலத்தை (நன்மையை) அருள்பவருமான ஆதிசங்கர பகவத்பாதர்களை நான் வணங்குகிறேன்.
இந்த வாரம் செவ்வாய்க் கிழமை 14.07.26 அன்று எனது சம்பந்தி குடும்பத்தாருடன் சுவாமி மலை, திருவையாற்றுக்குப் பயணம் செய்துகொண்டிருந்த போது, காஞ்சி காமகோடி பீடத்தின் பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் (மஹா பெரியவா) தாய்வழி இல்லத்தைத் தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் சுமார் 6 கி.மீ தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள ஒரு அமைதியான சிற்றூர் 'ஈச்சங்குடி'
இது மஹா பெரியவாளின் பூர்வாசிரமத் தாயார் மகாலட்சுமி அம்மாள் பிறந்த இல்லம். மஹா பெரியவா சுமார் 5 வயது வரை இந்த இல்லத்தில்தான் தங்கி வளர்ந்துள்ளார். அவர் வாழ்ந்த அந்தப் பழைய ஓட்டு வீடு, காஞ்சி மடத்தால் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு தியான மண்டபமாகவும், ஆன்மீக வழிபாட்டுத் தலமாகவும் மாற்றப்பட்டுள்ளது. இங்கு மஹா பெரியவா, அவரது பெற்றோர் (சுப்பிரமணிய சாஸ்திரிகள் - மஹாலக்ஷ்மி அம்மாள்), அவரது சகோதரர் ஸ்ரீ சிவன் சார் ஆகியோரின் திருவுருவப் படங்கள் மற்றும் மஹா பெரியவாளின் பாதுகைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் ஆன மஹா பெரியவாளின் தத்ரூப சிலையும், ஆதி சங்கரரின் சிறிய சிலையும் இங்கு உள்ளன. இதைத்தவிர மஹா பெரியவா பயன்படுத்திய பல்லக்கும் (மேனா) வைக்கப்பட்டுள்ளது.

இந்த இல்லம் முழுவதும் அமைதியா சூழலைக் கொண்டுள்ளது. இங்கு தியானம் செய்யும் போது மஹா பெரியவாளின் ஆன்மீக அதிர்வுகளை நம்மால் உணர முடிகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு விபூதியைப் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள்.
விருப்பப்பட்ட பக்தர்கள் தங்கள் நன்கொடைகளை இங்குள்ள நிர்வாகியிடம் கொடுக்கலாம்.

ஈச்சங்குடி சிறப்பு:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஈச்சங்குடி, புகழ்பெற்ற ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. இது மஹா பெரியவாள் தாயாரின் பூர்வீகம்
மஹா பெரியவா தன் சித்தி அடைந்த தினத்தன்று தன் பாதத்தில் இருந்த பாதுகைகளைக் கொடுத்து, ஈச்சங்குடி இல்லத்தில் வைத்து, பாடசாலை தொடங்கும்படி அருளிச் செய்துள்ளார். மஹா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி (இளைய சகோதரர்) சிவன் சார் பிறந்த மண்.
பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது இங்கு தங்கி சிவபெருமானை வழிபட்டதாக ஐதீகம். ஈசன் குடிகொண்ட இடம் என்பதால் "ஈசன்குடி" என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் அது "ஈச்சங்குடி" என மருவியது.
சிவபெருமான் திருவையாற்றில் இருந்து சுவாமிமலைக்கு முருகனிடம் பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்கச் சென்றபோது, தனது 'ஈசான்ய' நிலையை இங்கு விடுத்துச் சென்றதால் இப்பெயர் பெற்றது என்ற நம்பிக்கையும் உண்டு.
ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயில்: காருண்யவல்லி அம்பாள் ஸமேத கச்சபேச்வரர் திருக்கோவில். இக்கிராமத்தில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவில். பாண்டவர்கள் வனவாசத்தின் போது இங்குள்ள சிவபெருமானை வழிபட்டதாகப் புராண வரலாறுகள் கூறுகின்றன. இந்தச் சிவன் கோயிலுக்குப் மஹா பெரியவா பலமுறை சென்று தரிசனம் செய்துள்ளார்.
ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் கோவில்: ஈச்சங்குடி கிராமத்தின் அக்ரஹாரப் பகுதியில், கச்சபேஸ்வரர் சிவன் கோயிலுக்கு நேர் எதிர்புறத்தில் (மறுமுனையில்) ஸ்ரீ மகாவிஷ்ணு (பெருமாள்) கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள பெருமாள், தனது இடது மடியில் மகாலக்ஷ்மி தாயாரை அமர்த்தியபடி 'ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர்' ஆக வீற்றிருக்கிறார். கோயில் சிறியது, ஆனாலும் கீர்த்தியுடையது.
ஸ்ரீ உடைப்பு காத்த அய்யனார் கோயில்: காவிரிக் கரையின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோவில். முன்னொரு காலத்தில் காவிரியில் ஏற்பட்ட வெள்ள உடைப்பைத் தடுத்துக் காத்ததால் "உடைப்பு காத்த ஐயனார்" என்று பெயர் பெற்றார். திருமணத் தடைகளை நீக்குவதால் இவருக்கு "கல்யாண சாஸ்தா" என்ற திருநாமத்தை மஹா பெரியவாளே சூட்டினார்.

மஹா பெரியவா இல்லம் திறந்திருக்கும் நேரம்:
தினமும் காலை 6:30 முதல் 11:00 மணி வரையிலும், மாலை 4:30 முதல் இரவு 8:00 மணி வரையிலும் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.
எப்படிச் செல்வது:
திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருவையாற்றைக் கடந்ததும் வரும் திருப்பழனம் கிராமத்திற்கு அடுத்ததாக ஈச்சங்குடி அமைந்துள்ளது.
திருவையாற்றில் இருந்து கும்பகோணம் செல்லும் அனைத்து நகர மற்றும் புறநகரப் பேருந்துகள் மூலம் ஈச்சங்குடி நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம்.
ஒரு முறை ஈச்சங்குடி சென்று காஞ்சி மஹா பெரியவாளின் திருப்பாதம் பணிந்து, ஆசிகளைப் பெறுவோம்.

ஹர ஹர சங்கர!!
ஜெய ஜெய சங்கர!!!

Leave a comment
Upload