
புதுடெல்லி. ஒரு இரவு. கடுங்குளிர்.
பனி மூட்டம் புகை போல காட்சி அளித்தது. எங்கோ தூரத்தில் போலீஸ் விசில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது.
தாழ்ந்த வருமானக் காரர்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புப் பகுதி திடீரென பரபரப்பாகியது. 1940 ஆம் ஆண்டு கட்டப்பட்ட லோடி காலனி குடியிருப்புகள் எப்போது விழலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தன. குடியிருப்பை ஒட்டிய சாலைகளில் அதிரடிப் படையின் ஜீப் மற்றும் புல்லட் மோட்டார் சைக்கிள்கள் அங்கு மிங்குமாக சுற்ற ஆரம்பித்தன.
சைரன் ஒளியும் டார்ச் லைட்டின் வெளிச்சமும் ஏதோ விபரீதம் நடந்ததற்கான அறிகுறிகளாகத் தெரிந்தன.
காலனியில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் யாரும் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் தூங்கிக் கொண்டே தான் இருந்தார்கள். இது அங்கே அடிக்கடி நடக்கும் சம்பவமாகத்தான் இருக்க வேண்டும்.
லோடி காலனி குடியிருப்பில் தரைத்தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த நாகோஜிராவ் போர்வையை விலக்கிவிட்டு சட்டென ஒற்றைக் கட்டிலில் எழுந்து உட்கார்ந்தார்.
ஒரு மினி ஹால், ஒரு குட்டி சமையல் அறை, பத்துக்கு பத்தில் ஒரு படுக்கையறை, பத்து, பதினைந்து சமையல் பாத்திரங்கள், ஒரு மேஜை, மின்விசிறி,பிரிட்டிஷ் காலத்து ஒற்றை கதவு மர பீரோ, பாதி பாதரசம் போன முகம் பார்க்கும் கண்ணாடி,ஒரு சிறு சுவர் அலமாரியில் நிறைய மருந்து குப்பிகள்,மாத்திரைகள், இவ்வளவுதான் நாகோஜி ராவின் உலகம்.
நாகோஜி ராவ் திருமணமே செய்து கொள்ளவில்லை. வயது எழுபது தாண்டி விட்டது. இந்திய மருத்துவம் கொஞ்சம் தெரியும்.வெடவெட என ஆறு அடி உயரம். ஆனால் மிக ஒல்லியான தேகம். இடுங்கிய கண்கள். பேருக்கு சில பற்கள். நாகோஜி ராவ் தெருவில் நடக்கும் போது காலனி வாண்டுகள் அவரை ஒட்டகம் என கத்தி விட்டு ஓடி ஒளியும்.
நாகோஜி ராவுக்கு ஏதோ பென்ஷன் வருகிறது. ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஃபார்மசி ஒன்றில் உதவியாளராக வேலை செய்கிறார். காலை 8 மணிக்கு பஸ் பிடித்து வேலைக்கு போனால் திரும்பி வர இரவு 7 மணி ஆகிவிடும். ஞாயிற்று கிழமைகளில் சிலர் நாகோஜி தாத்தாவிடம் வைத்தியம் செய்து கொள்ள வருவார்கள். காசு வாங்க மாட்டார்.
படுக்கையில் இருந்து அன்று நாகோஜி தாத்தா எழுந்து உட்கார்ந்த போது யாரோ கதவை பலமாக தட்டியது கேட்டது.
"தர்வாஜா கோலோ! போலீஸ்!"
அதட்டியது ஒரு குரல்.
" போலிஸ் ஏன் இந்த நேரத்தில்? "என்று யோசித்தபடி நாகோஜி தாத்தா கதவைத் திறந்தார். அவர் கண்ணாடி அணியாததால் வந்தவன் முகம் சரியாக தெரியவில்லை. அடுத்த கணம் என்ன நடந்தது என்று அவரால் உணர முடியவில்லை.
வந்தவன், நாகோஜி தாத்தாவை பலமாக ஒரு தள்ளு தள்ளு தள்ள, நிலை குலைந்து விழுந்தார் அவர். தாத்தாவின் மூக்கு கண்ணாடி எங்கோ எகிரி விழ,அந்த நைட் லாம்ப் வெளிச்சத்தில் தன்னை தாக்கியவன் யார் என்று கண்களை இடுக்கிக் கொண்டு பார்த்தார்.
வந்தவன் ஒரு ஆறு அடி உயரத்தில், அடர்ந்த தாடி மீசையுடன் கழுத்தில் ஒரு மப்ளர் சுற்றிக்கொண்டு, அகன்ற தோள்களுடன், தூண் போன்ற கால்களுடன்,வலது கையில் ஒரு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தான்.
அதிர்ச்சியில் இருந்து மீளாத நாகோஜி தாத்தா அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். வெளியே போலீஸ் ஜீப்பின் ஆரவாரமும், சைரன் சத்தமும் மெல்ல மெல்ல அடங்கியது.
வந்தவன் கண்ணில் ஒரு கோப வெறி தெரிந்தது. அவனது இடது தோள்பட்டையில் ரத்தம் கசிந்து சட்டையை நனைத்துக் கொண்டிருந்தாலும் அவன் அதை சட்டை செய்யவில்லை.
நாகோஜி தாத்தா மெல்ல சுதாரித்துக் கொண்டு எழுந்து தனது ஒற்றைக்கட்ட்டிலில் அமர்ந்தார்.
"நீ யார்? தீவிரவாதியா?" தாத்தா சன்ன மான குரலில் கேட்டார்.
" ஏய்!நான் ஒரு லட்சியவாதி. எங்கள் லட்சியத்தை அடைய எவ்வளவு பேரை வேண்டுமானாலும் கொல்லுவேன். போலீஸ் என்னை துரத்துகிறது. இன்னும் இரண்டு நாள் நான் இங்கே தான் தங்குவேன். வாயை மூடிக்கொண்டு நான் சொல்வதை செய்யவில்லை என்றால் கொசு அடிப்பது போல ஒரே அடியில் உன்னைக் கொன்று விடுவேன். ஜாக்கிரதை!" என்றான் காசிம் என்கிற அந்த பாகிஸ்தானிய தீவிரவாதி.
"உனது தோள்பட்டையில் குண்டு பட்டு ரத்தம் வடிகிறது. அதனை உடனடியாக கவனிக்காவிட்டால் உனக்கு ஆபத்து."
"அதெல்லாம் எங்களுக்கு சர்வ சாதாரணம். குண்டு உரசி விட்டுப் போனது. இதற்கு டெல்லி போலீஸ் இன்னும் இரண்டு நாளில் பலன் அனுபவிக்கும். ஆயிரம் இந்தியர்கள் சாகப் போகிறார்கள்."
நாகோஜி தாத்தா உடனே பதில் ஏதும் சொல்லவில்லை.பிறகு, " எனக்கு நாட்டு மருத்துவம் தெரியும் உன் தோளுக்கு மருந்து போட்டு விடவா?" என்று கேட்டார்.
"மருந்து போடு ஆனால் அதற்குப் பின் உன்னை இந்த கட்டிலில் கட்டிப் போடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை."என்றான் காசிம்.
" இதோ பாரு!நீ எனக்கு ஒரு நோயாளி. உனக்கு வைத்தியம் பார்ப்பது ஒரு மனிதாபிமான அடிப்படையில் தான். ஆனால் நீங்கள் எல்லாம் தவறு செய்கிறீர்கள். அப்பாவி மக்களை கொல் வது தான் லட்சியமா? எனக்கு இதில் உடன்பாடு இல்லை.அதே சமயம் இது உங்களுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் உள்ள பிரச்சனை. நான் தலையிட விரும்பவில்லை. உன் தோள்பட்டையை சுத்தம் செய்து மருந்து போடவில்லை என்றால் உன் உயிருக்கு ஆபத்து வரும். "
காசிம் முகத்தில் ஒரு பக்கம் வேதனையும் இன்னொரு பக்கம் கோபமும் தெரிந்தது. நாகோஜி தாத்தாவின் சட்டைக் காலரைப் பிடித்து முரட்டுத்தனமாக தூக்கி கன்னத்தில் ஓங்கி அறைந்தான். தாத்தா கட்டிலில் சுருண்டு விழுந்தார்.
காசிம் சொன்னான்.
"டேய் கிழவா நான் சொன்னதை கவனமாக கேளு. இப்போ நீ எனக்கு சிகிச்சை அளிக்கிற சாக்குல என்னைத் தாக்கி விட்டுத் தப்பிக்கலாம் என்று கனவு கூட காணாதே. நான் இப்போது எங்கே இருக்கிறேன் என்ற தகவலை என் சகாக்களுக்கு ஏற்கனவே தெரிவித்து விட்டேன்.எனக்கு ஏதாவது ஆபத்து என்றால் அவர்கள் உன்னை உயிருடன் விட மாட்டார்கள். என் பையில் முதலுதவிக்கான எல்லாம் மருந்துகளும் இருக்கு.நீ சும்மா இரு. போதும்."
நாகோஜி தாத்தா சுதாரித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்து அவனை மிரட்சியுடன் பார்த்து விட்டு சொன்னார்.
" உன் பேரு என்னன்னு கூட எனக்கு தெரியாது.தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. எனக்கு வயதாகி விட்டது. நீ சொல்றத எல்லாம் நான் கேட்கிறேன். என்னை ஒன்றும் செய்து விடாதே. உன்னை எதிர்த்து இந்த கிழவனால் என்ன செய்ய முடியும்? காலில் விழுந்து கேட்கிறேன் எனக்கு உயிர் பிச்சை கொடு."
என்று புலம்பி விட்டு காசிமின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்தார்..
"அடேய் கிழவா!உன்னைப் போன்ற பூச்சியை எல்லாம் நான் கொல்வதில்லை. நாளை விடியற்காலை, அதாவது இன்னும் மூன்று மணி நேரம், அதுவரை நீ எனக்கு அடிமை.உங்கள் நாட்டு மக்கள் ஆயிரம் பேரைக் கொல்லப் போகிறோம் என்று சொன்ன போதும் அதைப்பற்றி கவலைப்படாமல் உன் உயிரைத் தான் முக்கியம் என்று நினைக்கும் உன்னைப் போன்ற துரோகிகள் தான் எங்களுக்கு வேண்டும். "
நாகோஜி தாத்தா பதில் ஒன்றும் சொல்லாமல் தலையை குனிந்து கொண்டார்.
காசிம் தாத்தா அருகில் வந்து "சாப்பிட ஏதாவது வைத்திருக்கிறாயா?" என்று கேட்டான்.
கட்டிலுக்கு அருகில் இருந்த ஒரு சின்ன மேஜையில் இருந்து ஒரு டிபன் பாக்ஸை எடுத்து அவனிடம் நீட்டினார் தாத்தா.
தாத்தா சாப்பிட்டுவிட்டு மீதம் வைத்த இரண்டு சுக்கா ரொட்டியும் ஊறுகாயும் அதனுள் இருந்தது இரண்டு நிமிஷத்தில் காசிம் அதைத் தின்று முடித்தான்.
" நான் தான் செய்தேன் நல்லா இருக்கா? "
" அருமையாக இருந்தது! ஏய் கிழவா உனக்கு டீ போட தெரியுமா? உடனே எனக்கு டீ போட்டுக் கொண்டு வா." என்று கட்டளையிட்டான்.
தாத்தா மேல நகர்ந்து சமையல் அறைக்கு போய் டீ போட ஆரம்பித்தார் காசிம் அவர் பின்னாலே சென்று நின்று கொண்டான்.
தாத்தா ஒரு கப் டீ போட்டுக் கொடுத்தார்.
கொஞ்சம் குடித்துவிட்டு" டீ அச்சா ஹை. ஆனால் இன்னும் சர்க்கரை வேண்டும்." என்றான்.
தாத்தா மறுபடியும் உள்ளே சென்று சக்கரை குப்பியை எடுத்து அவனிடம் கொடுத்தார்.அதிலிருந்து இரண்டு ஸ்பூன் சர்க்கரையை எடுத்து டீ யில் போட்டு விட்டு, கலக்கிய உடன் உறிஞ்சி குடிக்க ஆரம்பித்தான். கப் முழுவதையும் குடித்தான். நாகோஜி தாத்தாவை ஒரு வாஞ்சையுடன் பார்த்தான்.
"நீ ரொம்ப நல்லவன் தான். ஆனா நான் இங்கிருந்து போன பின்னாடி உடனடியா போலீசுக்கு தகவல் கொடுக்க மாட்டாய் என்று என்ன நிச்சயம்? சொல்ல கஷ்டமாகத்தான் இருக்கு. நான் போவதற்கு முன் உன்னை கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை.இன்னும் அரை மணி நேரத்தில் நான் கிளம்பி விடுவேன் உன்னுடைய கடைசி ஆசை ஏதாவது இருந்தால் கேளு. நீ செத்த பிறகு யாருக்காவது தகவல் சொல்ல வேண்டுமா? "
தாத்தா ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர் போல தோன்றியது. படபடப்பில் அவர் உடல் நடுங்கியது.
" எனக்கு ஒரு பத்து நிமிஷம் அவகாசம் வேண்டும். கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்." என்றார் நாகோஜி தாத்தா நடுங்கும் குரலில்.
" சரி. ஆனால் நான் உன் எதிரிலேயே இருப்பேன். நீ இப்போது உட்கார்ந்து இருக்கும் இடத்திலிருந்து பிரார்த்தனை செய்."
நாகோஜி தாத்தா கண்களை மூடி ஏதோ மந்திரத்தை ஜெபித்தார்.
பத்து நிமிஷம் முடிந்தவுடன் கண்களைத் திறந்து காசிமை உற்றுப் பார்த்தார்.அவர் இதழ்களில் லேசான புன்னகை அரும்பியது. எதிரே காசிம் பிரம்மாண்டமாக அமர்ந்திருந்தான். அவன் கண்கள் நாகோஜி தாத்தாவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.
காசிம் அசையவில்லை. ஏதோ பேச முற்பட்டான். ஆனால் பேச்சு வரவில்லை. நாகோஜி ராவ் அவன் தலை முடியை பிடித்து கன்னத்தில் ஒரு அறை விட்டார்.
" டேய் முட்டாள் காசிம். தேசபக்தியைப் பற்றி இந்தியர்களுக்கு நீ சொல்லித் தருகிறாயா? உன்னால என்னடா பண்ண முடியும்? நீ டீயில் போட்டுக் குடிச்சது சக்கரை இல்ல. மருந்துப் பொடி. இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னால் கை காலைக் கூட அசைக்க முடியாது. "

Leave a comment
Upload