தொடர்கள்
கவிதை
ஜன்னல் ஓரத்து இருக்கை...! - கோவை பாலா

2026061808002223.jpg

பறக்க வேண்டிய பயணம்...

பறக்கத் தயாராக விமானம்...

ஜன்னல் ஓரத்து இருக்கையில்,

பின்னால் தள்ளிச் சாய்கையில்...

சின்னக் குரலொன்று ஒலித்தது.‌‌..

"ஓர இருக்கையில் அமரவா நான்?"

தந்தையோடு நின்ற பிள்ளையின்,

சிந்தை தொட வைத்த கேள்வி...!

என்ன பதில் தர நினைக்கையில்,

முன்ன உரைத்தார் தந்தை தான்...

மன்னிப்பு வேண்டினார் மகனுக்கு...

அறியாத பிள்ளை அவனின்,

தெரியாத வேண்டுகோள் அது...!

நிர்பந்தம் ஒன்றும் இல்லை...!

"உனக்குத்தான் இது"என நான் எழ,

மினுக்கும் ஒளி முகத்தில் வந்தது...

துள்ளிக் குதித்து பிள்ளை அமர்ந்து,

வெள்ளி மேகத்தை பார்த்து இருக்க,

தள்ளி அமர்ந்தேன் தந்தை அருகில்..

பறக்க உயர்ந்த நொடிப் பொழுதில்,

உறக்க நிலைக்கு பிள்ளை போக...

"உடற் சோர்வில் உறங்கிவிட்டான்",

மனச் சோர்வில் தந்தை பகிர்ந்தார்...!

பற்றிக்கொண்டது புற்றுநோய் மகனை...!

எட்டு மாதங்கள் எத்தனை சோதனை...!

மருத்துவ சிகிச்சை அத்தனை தாண்டி...

மீண்டு போகிறோம் ஊர் வேண்டி...!

இருக்கை அளித்த மகிழ்ச்சி போய்,

இறுக்கம் ஆகியது மனதின் நிலை...!

ஜன்னல் ஓரத்து இருக்கையின்,

பின்னால் இருந்த போராட்டம்,

கண்ணால் பார்க்கத் தெரியவில்லை..!

சிறுவனாய் பார்த்த நிமிடங்கள் மாறி,

போர் வீரனாய் பார்க்கச் சிலிர்த்தது...!

ஓர இருக்கையின் ஆசையின் பின்,

ஒளிந்து இருந்தது ஓர் உண்மை...!

தந்தை தொடர்ந்த வார்த்தைகளில்,

சிந்தை உருகிப் போனதன்று...!

பிள்ளையின் அழகான எண்ணம்...

தந்தையிடம் சொன்ன வண்ணம்...!

மேகங்களுக்குள் செல்லச் செல்ல,

பார்ப்பானாம் இறைவனை அருக..!

உடல் நலம் பெற செய்தமைக்கு ,

சொல்வானாம் நன்றி மனம் உருக...!

ஜன்னல் ஓரத்து இருக்கை கூட,

அழகான காட்சியைக் காட்டவில்லை..

காண்பவர் மனதின் கண்ணோட்டம்,

காட்சியை மாற்றிக் காட்டிவிட்டது...!

கண்ணீர் மறைத்தது என் கண்ணை..

தந்தையின் முகத்தில் புன்னகை,

இனிய நாளாகச் செய்தேன் என்று,

கனிய நன்றி சொன்னார் நின்று...!

என் நாள் இனிமையானது அவரால்...!

மிகையில்லை அதைச் சொன்னால்..!

ஓரத்து இருக்கை கொடுத்தேன்..!

பேரத்தில் பாடங்கள் பெற்றேன்...!

ஆகாய பயணத்தின் தருணங்கள்...

ஆறாத காயத்தின் வடுக்களை,

தீராத பாரமாய் சுமந்தவர்களை,

பாராது இருப்பது நலமாகுமோ...?

கண்முன்னே சந்திக்கும் பலரும்,

சுமப்பார் தன் கதையை தன்னுள்...

கருணையில் கைகொடுத்து நிற்க,

காலத்தால் அழியாது நினைவுகள்...!

சூழல்கள் பலநேரம் நம்மை,

அனுதாபம் கொள்ளச் செய்கிறது..!

சிறிய சமிக்ஞைகளும் சிலநேரம்,

அனுதாபம் வரச் செய்கிறது...!

இரக்கத்தின் வழி தேடலாய் தான்,

அனுதாபம் வடிவம் பெறுகிறது...!

இரக்கம் கொள்வது பாவமில்லை...

மறக்க முடியாது அதன் நினைவுகளை...!

Get Outlook for Android