
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்து பத்து பவுன் நகை காணாமல் போனது தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
சமூக ஆர்வலரான ஹென்றி திபேன் நிறைய ஆதாரங்களை சேகரித்து வீடியோ ஆதாரம் புகைப்பட ஆதாரம் போன்றவற்றை நீதிபதிகளிடம் சமர்ப்பித்து வாதிட்டார்.
சிறப்புப்படை போலீசார் பிளாஸ்டிக் பைப், இரும்பு ராடுகளை கொண்டு அஜித்குமாரை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள். தலைமை காவலர் கண்ணன் மானாமதுரை டி.எஸ்.பியின் சிறப்பு படையை சேர்ந்தவர். இவர் அங்கிருந்து வந்து விசாரித்தது விதி மீறல் என்பது வழக்கறிஞர் ஹென்றி திபேன் வாதமாக இருந்தது. அதுமட்டுமல்ல திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் மானாமதுரை டி.எஸ்.பி ஆகியோர் அஜித்குமார் குடும்பத்தினரிடம் 50 லட்சம் கொடுப்பதாகவும் சகோதரருக்கு அரசு வேலை தருவதாகவும் பேரம் பேசி இருக்கிறார்கள். இந்த வழக்கின் புகார்தாரர் நிகிதா ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் நெருங்கிய உறவினர் என்பதால் அஜித்குமாரை விசாரணை என்ற பெயரில் அடித்து கொலை செய்து விட்டார்கள்.
வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதி பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் ஒரு இடம் விடாமல் அடித்துள்ளனர். மிளகாய் பொடி தூவி உள்ளனர். வெறித்தனமாக தாக்கி இருக்கிறார்கள். ஒருவரை கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள் கூட இந்த அளவுக்குக் கொடூரமாக தாக்கி இருக்க மாட்டார்கள். காயங்களை பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. அதிகாரம் போலீசை இப்படி செய்ய வைத்துள்ளது. விசாரணையின் போது அஜித்குமார் குற்றவாளி இல்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முந்தைய விசாரணையின் போது இப்படி ஒருவரை தாக்கலாமா ? இந்த சம்பவத்தின் இயக்குனர் யார் ? என்றெல்லாம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி கேட்டார்கள். மேலும் அஜித்குமார் கொலை சிறப்புப்படை திட்டமிட்டு செய்த கொலை. ஒரு அரசு தனது குடிமகனை கொலை செய்துள்ளது என்றும் கடுமையாக தங்கள் கருத்தை பதிவு செய்தார்கள் நீதிபதிகள்.
இதனை அடுத்து முதலமைச்சர் அமைச்சர் பெரிய கருப்பனை அனுப்பி அஜித்குமார் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல சொன்னார். கூடவே அமைச்சரின் செல்பேசியில் இருந்து முதல்வர் அஜித்குமாரின் தாயார் மற்றும் அஜித்குமாரின் சகோதரரிடம் பேசி சாரி என்றார். கூடவே உங்களுக்கு வேண்டியதை அமைச்சர் செய்வார் என்றும் முதல்வர் செல்பேசியில் வாக்குறுதி தந்தார். அதனைத் தொடர்ந்து அஜித்குமார் குடும்பத்திற்கு மூன்று சென்ட் காலிமனையும் அஜித்குமார் சகோதரருக்கு ஆவினில் வேலையும் அரசாங்கம் வழங்கியது. இது தவிர திமுக சார்பாக 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அந்த குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், அஜித்குமார் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லி இரண்டு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கி இருக்கிறார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் சார்பாக அவரது கட்சியின் நிர்வாகிகள் அஜித்குமார் குடும்பத்தை சந்தித்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார்கள்.
இவையெல்லாம் போன உயிரை மீட்டுக் கொண்டு வருமா ???
தற்சமயம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக முதல்வர் அறிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் இது போன்ற காவல் மரணங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

Leave a comment
Upload