தொடர்கள்
ஆன்மீகம்
ஜென்மாந்தர பாவங்களைப் போக்கும் ஏகாதசி!! - சுந்தரமைந்தன்.

Ekadashi that removes sins of birth!!

ஏகாதசி என்பது இந்து நாட்காட்டியின்படி, சந்திரனின் சுழற்சியில் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் பதினோராவது திதியாகும். இது மகாவிஷ்ணுவுக்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது மேலும் பக்தர்கள் ஏகாதசி விரதம் அனுஷ்டித்தும் வழிபடுகிறார்கள்.
ஏகாதசி விரதம் என்பது அந்த ஆன்மீகப் பயிற்சிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏகாதசியின் முக்கியத்துவத்தைப் பாண்டவ சகோதரர்களில் மூத்தவரான யுதிஷ்டிரருக்கு கிருஷ்ணர் விளக்கியதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் செழிப்பைத் தேடி, பிற்காலத்தில் மோட்சத்தை அடைய விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
பிரம்ம-வைவர்த்த புராணத்தில், ஏகாதசி நாளில் விரதம் இருப்பவர், பாவச் செயல்களுக்கான அனைத்து வகையான விளைவுகளிலிருந்தும் விடுபட்டு, பக்தி வாழ்வில் முன்னேறுகிறார் என்று கூறப்படுகிறது.
ஒரு முறை எமதருமன் மகாவிஷ்ணுவைச் சந்தித்து ஆசிபெற்றார். பிறகு கருட வாகனத்தில் தனது எமலோகத்திற்கு எழுந்தருள வேண்டும் என கேட்டுக்கொண்டார் மகாவிஷ்ணுவும் அவரின் கோரிக்கையை ஏற்று, ஒரு நாள் எமலோகம் சென்றார் அவரை எமதருமனும் மகிழ்ச்சியோடு வரவேற்றார். பிறகு மகாவிஷ்ணு அங்குச் சென்று பல்வேறு பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார்,
இந்நிலையில் எமலோகத்தின் தெற்கு திசையிலிருந்து கூக்குரலும், அழுகையும் கேட்டது. குரல்கேட்ட திசையை நோக்கி நடந்தார் மகாவிஷ்ணு. அங்கே பாவம் செய்தவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொண்டி ருந்தனர். அப்போது மகாவிஷ்ணு இன்று ஏகாதசி திதி ஆயிற்றே என வாய் விட்டுச் சொன்னார். அந்தநிமிடமே அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி விட்டது. ஏகாதசி என்று சொன்னாலே நம் பாவம் தீரும் என்பதால், அன்று விரதமும் இருந்து பெருமாள் கோயிலுக்குச் சென்று வந்தால் நம் ஜென்மாந்தர பாவங்கள் நீங்கி புண்ணியம், மற்றும் பிறவா நிலைக்குச் செல்லும் ஆற்றலும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.