தொடர்கள்
ஆன்மீகம்
பெருமை மிகு கந்த புராணம்!! - ஆரூர் சுந்தரசேகர்.

The most glorious epic!!

தமிழ் இலக்கியத்தில் மிகவும் தொன்மையான நூல் என முருகப் பக்தர்களால் போற்றப்படும் மிக முக்கியமான புராணம் கந்தபுராணம். இது முருகப்பெருமானின் வரலாற்றையும், அவரின் பெருமைகளையும் கூறும் ஒரு சிறப்புமிக்கத் தமிழ் இலக்கியம். இது வேதங்களில் உள்ள தர்ம விதிகளைத் தெளிவாகவும், விரிவாகவும் விளக்குகிறது. கந்த புராணம் "புராணநாயகம்" என்றும், "முதல்வன் புராணம்" என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இதன் சிறப்புகள் சொற்பொருள் சுவை, பக்திச் சுவை, மற்றும் புராணங்களில் ஒரு தனித்துவமான இடத்தை வகிக்கிறது.
கந்தபுராணம், முருகப்பெருமானின் பிறப்பு, சூரபத்மனை வதம் செய்தல், சிவபெருமானின் அருட்செயல்கள் போன்றவற்றை உள்ளடக்கியது.
கந்த புராணம் கச்சியப்ப சிவாசாரியரால் இயற்றப்பட்டது, இதன் சிறப்பம்சம், முருகப்பெருமானே கச்சியப்ப சிவாசாரியருக்கு முதல் அடியை அருளினார்.
"கந்த புராணத்தில் இல்லாதது வேறு எந்தப் புராணத்திலும் இல்லை":
இந்த பழமொழி கந்த புராணத்தின் சிறப்பை எடுத்துரைக்கிறது.

கந்த புராணத்தின் சிறப்புகள்:
பதினெண் புராணங்களும் வடமொழியில் இருப்பவை. இவற்றுள், கந்த புராணத்தின் சங்கர சங்கிதையில் சிவரகசிய கண்டத்தில் வரும் முதல் ஆறு காண்டங்களதும் தமிழ்த் தொகுப்பே கந்தபுராணமாகும். உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்று ஆறு காண்டங்களை உடையது. கந்த புராணத்திலே 10346 செய்யுட்கள் உள்ளன. இது கந்தபுராணத்தின் பாயிரப் பாடல் 'திகட சக்கர' என்பதை முதலாகக் கொண்டு கலிவிருத்த யாப்பில் அமைந்துள்ளது. இவற்றில் அறுமுகக் கடவுளின் அவதாரம், தேவரை அசுரர்கள் சிறைச் செய்த வரலாறு, சூரபன்மனை முருகன் வென்ற வரலாறு, வள்ளி, தெய்வயானைத் திருமணம் முதலிய வரலாற்றை முறையாகவும் முழுமையாகவும் கூறுகிறது.
கந்த புராணம் ‘மாங்கல்யப் புராணம்’ என்ற சிறப்பிற்குக் காரணம் இப்புராணத்தில் பார்வதி கல்யாணம், தெய்வயானைக் கல்யாணம், வள்ளி கல்யாணம் என்று பல கல்யாண வைபவங்கள் விவரிக்கப்படுகிறது.

The most glorious epic!!

கச்சியப்ப சிவாசாரியர்:
காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் அர்ச்சகராக இருந்தவர் காளத்தியப்ப சிவாசாரியர். அவரது மகன் கச்சியப்ப சிவாசாரியர். கல்வியறிவும், சமய அறிவும் நிரம்பபெற்றவர். இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழ் புலவர் மற்றும் வேதாந்தி. ஒருசமயம் கச்சியப்பரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், அவரை கந்த புராணத்தைத் தீந்தமிழில் இயற்றும்படி பணித்தார். மேலும், ‘திகட சக்கரம் செம்முகம் ஐந்துளான்’ என்ற முதலடியையும் கச்சியப்பருக்கு எடுத்துக் கொடுத்து அருளினார். இதைத் தன் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதிய கச்சியப்பர், அதன்படி கச்சியப்பர் கந்தபுராணத்தை இயற்றினார்.

The most glorious epic!!

கந்த புராணம் அரங்கேற்றம்:
கந்தப் பெருமான் அருளிய முதலடியைக் கொண்டு, கந்த புராண நிகழ்வுகளைத் தமிழ்ப் பாடல்களாகப் புனையத் தொடங்கினார். ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில், தான் அன்றைய தினம் இயற்றிய பாடல்களைத் தொகுத்து, முருகப்பெருமானின் சந்நிதியில் வைத்துச் செல்வார். மறுநாள் அதிகாலை, முருகப்பெருமானின் கருவறையைத் திறக்கும்போது, அப்பாடல் களில் தவறுகள் இருந்தால் குமரகோட்டம் குமரனே திருத்தம் செய்திருப்பாராம். கூடவே 'காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி' எனக் காப்புச் செய்யுளையும் இயற்றி, கந்தபுராணத்தை நிறைவு செய்தார் கச்சியப்ப சிவாச்சாரியார். அதைத் தொடர்ந்து முருகப்பெருமானின் ஆணைப்படி 'கந்த புராணம்' குமரகோட்டத்தில் அரங்கேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அரங்கேற்றத்திற்கு வந்திருந்த தமிழ்ப் புலவர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாட்டைப் போக்க,
முருகப்பெருமானே புலவர் வடிவில் வந்து அவர்களின் ஐயத்தைப் போக்கினார்.
கந்த புராணத்தை எழுதிய கச்சியப்பருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக குமரகோட்டத்தில் அவரது பீடம் எதிரே முருகப் பெருமான் தெற்கு நோக்கி காட்சி அருள்கிறார். கி.பி. 11ம் நூற்றாண்டில் கந்தபுராணம் அரங்கேற்றம் நடைபெற்ற கல் மண்டபம், இன்று நூலகமாகப் பராமரிக்கப்படுகிறது.
முருகப்பெருமானின் திருவரலாறாகிய கந்தபுராணத்தை பக்தியுடன் படிப்போர், கேட்போர், நினைப்போர் யாவரும் இந்திரனைப் போலத் தலைமைத்துவமும் இன்பமும் மிக்க வாழ்வை வாழ்ந்து இறுதியில் பரமானந்த நிலையாகிய சிவபதப் பேறும் பெறுவர்”

The most glorious epic!!

முருகா சரணம்..!! கந்தா சரணம்..!!!