தொடர்கள்
அழகு
மயக்கும் மாலை பொழுதே நீ போ! போ! - மோகன் ஜி


20250609215802403.jpg

ஒன்று கவனித்திருக்கிறீர்களா? அந்தி மயங்கும் போழ்தில் இனம்புரியாத ஒரு மென்சோகம் நம்மை ஆட்கொள்ளும்.

சூரியன் மறைந்து நிலவு எழும் நேரத்தை அசுர சந்தியா வேளை என்பார்கள். மனநோய் உடையவர்களுக்கு பாதிப்பு சற்றுக் கூடுதலாக இருக்கும்.

காதலர்களுக்கு தேவையற்ற கலக்கம் வரும்.

எனவே தான் அந்த நேரத்தில் தீபமேற்றியும், ஆலயம் தொழுதல், ஜபம் பாராயணம் மேற்கொள்ளுதல் என்றும் முன்னோர் வகுத்திருக்கிறார்கள்.

திருவிருத்தம் என்பது நம்மாழ்வார் அருளிய அற்புதமான பிரபந்தம். அவர் நாயகி பாவம் கொண்டு பரந்தாமனை அகப்பொருள் வயமாகச் செய்த ஆக்கம்.

அதில் ஒரு செறிவான பாடலைப் பார்ப்போம்.

சந்தியா காலத்தில் வீசும் வாடைக் காற்றால் வாட்டமுறும் தலைவியின் கூற்றாக வெளிப்படுகிறது இந்த வரிகள்.

ஒரு அழகான இயற்கைக் காட்சி இலக்கிய காட்சியாக மாறுகிறது.

இனி பாடல்:

பால்வாய்ப் பிறைப்பிள்ளை ஒக்கலைக்

கொண்டு, பகலிழந்த

மேல்பால் திசைப்பெண் புலம்புறு

மாலை, உலகளந்த

மால்பால் துழாய்க்கு மனமுடை

யார்க்குநல் கிற்றையெல்லாம்

சோல்வான் புகுந்து,இது வோர்பனி

வாடை துழாகின்றதே.

பத விளக்கம்:-

பால் வாய் -

வாயிலிருந்து பாலமுதம் ஒழுகும் (குழந்தைபோல்);

பிறை பிள்ளை–

(அமுத கிரணங்களை பொழியும்) பிறை நிலவாகிய குழந்தையை ;

ஒக்கலைக் கொண்டு-

தனது இடையில் ஏந்தியபடி ;

பகல் இழந்த -

பகலவனாகிய கணவனை இழந்த

மேற் பால் திசைப் பெண்–

மேற்கு திசையாகிய நங்கை;

புலம்புறு மாலை–

துக்கத்தினால்

புலம்பியழும் மாலைக் காலம்

உலகளந்த மால் பால்–

மூவுலகும் அளந்த வாமனனாகிய திருமாலுக்குச் சொந்தமான

துழாய்க்கு மனம் உடையார்க்கு–– திருத்துழாயின்பால் ஆவல் கொண்ட மனத்தினை உடைய பக்தர்களுக்கு

நல்கிற்றை எல்லாம்–

பரம கருணையினால் பகவான் தந்த அருளையெல்லாம்

சோல்வான் புகுந்து -

கவர்ந்து செல்கின்ற விதமாய் வீசுகின்ற

இதுவோர் பனி வாடை–

இந்த நடுக்கும் பனிக்கால குளிர்காற்று

துழாகின்றது– எமைத் துழாவியபடி வருத்துகிறதே!

மேலைத் திசை ஒரு பெண்ணாக உருவகிக்கப்பட்டிருக்கிறது.

அவள் இடையில் தன் குழந்தையான பிறைநிலவை ஏந்தியிருக்கிறாள். நிலவுக்குழந்தையின் வாயிலிருந்து பால் வழிவதைப்போல், அமுதகிரணங்கள் பொழிகின்றன.

அப்போதே மறைந்துவிட்ட சூரியன் அந்த மேற்திசைப்பெண்ணின் கணவனாம். அவனையெண்ணி குழந்தையை ஏந்தியபடி அவள் புலம்புகிறாளாம். கூடடையும் பறவைகளின் நானாவித இரைச்சல் புலம்பலாகக் கேட்கிறதோ?!

அத்தகைய மாலைக்காலத்தில் நடப்பதென்ன?

திருமால் தன்மார்பில் அணிந்த திருத்துழாயின்பால் இச்சைகொண்ட பக்தர்கள்தம் மனங்களில், தேக்கிவைத்த அவன் அருளையெல்லாம், கவர்ந்து செல்லுவதுபோல் குளிர்ந்த வாடைக்காற்று துழாவிச் செல்கிறதாம்.

இதில் ‘ஒக்கல்’ எனும் பிரத்யேக வார்த்தை சுட்டும் உடற்பகுதி இடுப்புக்கும் சற்று பின்னே. பெண்கள் குழந்தையையோ, குடத்தையோ நேர் பக்கவாட்டு இடுப்பில் ஏந்தாமல், இடுப்பினின்று சற்று பின்தள்ளி ஒக்கலில் ஏந்துவார்கள். தமிழின் அழகும் வளமும்! நெல்லையில் இன்றும் இச்சொல் புழக்கத்தில் உண்டு என அறிய வருகிறது.

உண்மையான பக்தியில், உள்ளுறையும் பரந்தாமனே கொடும் கோடையில் குளிர்த் தென்றலாகவும், நடுக்கும் வாடையில் போர்வையின் கதகதப்பாகவும் இருப்பான் என்பதில் ஐயமுண்டோ?