ஆந்திரப் பிரதேசம், கடப்பா மாவட்டம், தேவுனி கடப்பாவிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்கது. சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக, இந்த கோயில் இந்துக்கள் மட்டுமல்லாது இஸ்லாமியர்களும் தங்களது வேண்டுதலுக்ளுக்காக இங்கு வந்து பெருமாளை வழிபடுவது ஒரு சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது.
இஸ்லாமியர்களின் தொழுகை எந்த அளவுக்கு முக்கியமோ அதுபோல இந்த பெருமாள் கோயிலுக்கு வந்து வழிபடுவதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
யுகாதி வருடப்பிறப்பு அன்று இந்த பெருமாளைத் தரிசிப்பதால் சகல சௌபாக்கியங்களையும், குறிப்பாகச் செல்வ வளத்தைச் சேர்க்கும் என்பது அவர்களது நீண்ட கால நம்பிக்கை. யுகாதி வருடப்பிறப்புக்கு வரும் முஸ்லீம் பக்தர்கள், அப்பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பே மாமிசம் சாப்பிடுவதையும் நிறுத்திவிடுகின்றனர். இது மிகவும் வியக்கத்தக்கது.
அன்றைய தினம் அதிகாலை 5 மணியிலிருந்தே ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் வரிசையில் நின்று 'கோவிந்த கோவிந்தா' என்ற கோஷங்களுடன் பிரார்த்தனை செய்கிறார்கள். இதைத்தவிரத் தேங்காய் உடைத்து வழிபாடு செய்வதும், பட்டாசாரியார் சடாரி வைத்த பிறகு தரும் தீர்த்தம் மற்றும் பிரசாதம் சாப்பிடுவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
இவ்வூர் மக்களைத் தவிர அனந்தப்பூர், சித்தூர் மாவட்டங்களில் வசிக்கும் இஸ்லாமிய மக்களும் இங்கு வந்து பிரத்தியேக வழிபாடு செய்கிறார்கள். இந்த கோயிலுக்கு எப்படி இஸ்லாமியர்கள் வருகை தருகிறார்களோ அந்த மாதிரி இங்குள்ள பெரிய தர்க்காவுக்கு இஸ்லாமியர்களுடன், இந்துக்களும் சேர்ந்து வழிபாடு செய்கின்றனர்
கிருபாவதி க்ஷேத்திரம்:
"தேவுனி கடப்பா" என்ற பெயர் கடப்பா என்ற வார்த்தையிலிருந்து உருவானது, அதாவது "வாசல்" அல்லது "கதவு சன்னல்" தேவுனி கடப்பாவின் பண்டைய பெயர் " இங்குள்ள வெங்கடேஸ்வரரின் சிலை கிருபாச்சாரியாரால் நிறுவப்பட்டது, எனவே தேவுனி கடப்பாவின் பண்டைய பெயர் " கிருபாவதி க்ஷேத்திரம் " என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது திருமலை வெங்கடேஸ்வர கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் முன்னோடியாகக் கருதப்படுகிறது, திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், திருமலைக்குச் செல்லும் வழியில் இந்த கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று நம்பப்படுகிறது, அப்போதுதான் அவர்கள் திருமலை தரிசனம் முடிந்ததாக ஐதீகம். இந்த ஸ்தலத்தைப் பெரிய தெலுங்கு கவிஞர் க்ஷேத்ரய்யா, தல்லபாக அன்னமய்யா மற்றும் அத்வைத வேதாந்த மடத்தின் அனைத்து சங்கராச்சாரியார்களும் பார்வையிட்டதாகக் கூறப்படுகிறது.
கோயில் அமைப்பு:
இந்தக் கோயிலின் நுழைவாயில் இராஜ கோபுரம், மற்றும் வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்படத் தூண்கள், அற்புதமான சிற்பங்கள் விஜயநகர கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கோயிலின் உட்புறத்தில் தூண்களுடன் கூடிய பல மண்டபங்கள், பலிபீடம், துவஜ ஸ்தம்பம் (கொடிக் கம்பம்) ஆகியவை உள்ளன. நடனமாடும் விக்னேஸ்வரர் முக மண்டபத்தில் காணலாம்.
கருவறையில், சங்கு, சக்கரம், கதி மற்றும் வரத ஹஸ்தம் ஆகியவற்றுடன் நான்கு கைகளுடன் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் அருள்பாலிக்கின்றார். பிரதான கோயிலின் பின்புறத்தில் ஆஞ்சநேயர் இருப்பதால், ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரர் கோயில் ஹனுமத் க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. கோயில் வளாகத்தில், பிரதான கோயிலின் தெற்கே தனி சந்நிதியில் பத்மாவதி தாயார் நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் இரண்டு கைகளில் இரண்டு தாமரை மலர்களையும், மற்ற இரண்டு கைகளில் அபய மற்றும் வரத முத்திரையுடன் அருள்கிறார். கோயிலின் முகமண்டபத்தின் கூரையில், பல்லிகளின் இரண்டு உருவங்கள் உள்ளன. பல்லிகளைத் தொட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இக்கோயில் வளாகத்தில் விஸ்வக்ஷேணர், கோதா தேவி, சென்ன கேசவ பெருமாள் மற்றும் ஆழ்வார்களின் சிற்பங்களைக் காணலாம். கோயிலுக்கு அருகில் ஒரு புஷ்கரிணி (குளம்)உள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 06.00 முதல் பகல்12.30 மணி வரை மாலை 03.30 முதல் இரவு 8.00 மணி வரை (விசேஷ காலங்களில் கோயில் திறந்திருக்கும் நேரம் மாறுதலுக்கு உட்பட்டது)
கோயிலுக்குச் செல்லும் வழி:
கடப்பாவிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் தேவுனி கடப்பா அமைந்துள்ளது. சென்னையிலிருந்து இருநூற்று எண்பது கிலோமீட்டர் தொலைவிலும், திருப்பதியிலிருந்து நூற்று நாற்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவிலும் கடப்பா அமைந்துள்ளது. அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களிலிருந்தும் பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன. கடப்பாவிற்கு ஹைதராபாத், விஜயவாடா மற்றும் சென்னையிலிருந்து விமான இணைப்பும் உள்ளது.
ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வர பெருமாளும் கடப்பா வாழ் இஸ்லாமிய மக்களும் மத ஒருமைப்பாட்டுக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பல்வேறு மதங்களால் நாம் பிரிந்திருந்தாலும் சகோதரத்துவத்துடன் இணைவது சிறப்பானது.
Leave a comment
Upload