விட்டலா விட்டலா என்றாலே...
விட்டுப் போகும் வினையென்று,
சுட்டிக் குழந்தையும் மூத்தோரும்
எட்டிக் குதித்து ஆடிப் பாடி,
பக்தர் ஆவார் வார்க்கரியில்...!
பட்டுத் துணியில் பல்லக்கில்
இஷ்ட குலகுரு பாதங்களை,
கட்டித் தோலில் சுமந்து வரும்,
எட்டுத் திக்கும் பக்தர் கூட்டம்
தொட்டு வணங்கும் பண்டரிபுரம்..!
ஆஷாட ஏகாதசி அந்நாளில்,
பாடி வரும் கூட்டம் எல்லாம்
பண்டரிநாதனைத் தேடி வரும்...!
பாண்டுரங்கன் தரிசனத்தில்
ஆத்மார்த்த பக்தி மிளிரும்...!
அப்படி என்ன பெருமையது...!
அந்த ஆஷாட ஏகாதசிக்கு...?
தாய் தந்தையரை மதிப்பதே
தலைசிறந்த சேவையென்று, புண்டரீகனுக்கு புத்தி சொல்லி,
காத்திருந்து கிருஷ்ண பகவான்,
விட்டலனாய் காட்சிதந்த
தினம்தான் இது..!
ஆடி முதல் கார்த்திகை வரையில்,
ஆழ்ந்த சயனத்தில் பெருமாளும்,
யோக நித்திரை கொள்வதனால்,
தேவசயனி என்று பெயர் சொல்லி,
ஏகாதசி விரதமாய் ஏற்கும் தினம்தான் இது...!
சயனத்தை ஏற்கும் பெருமாளும்,
சாதுக்கள் ஏற்கும் விரதமும்,
சாதுர்மாஸ்யம் எனத் துவங்கும்,
ஆஷாட ஏகாதசி தினத்தன்று...!
பகவான் கிருஷ்ணர் இத்தினத்தில்,
பண்டரிபுரத்தில் பாண்டுரங்கனாய்,
பாரினில் நமக்கு சொல்வதெல்லாம்,
பெற்றோரைப் பேணிக் காத்திடு..!
மற்றவைகள் நன்மையாய் முடிய,
வேண்டும் பொழுதில் வருவேன்...!
பாண்டுரங்கனாய் உன் முன்னே...!
Leave a comment
Upload