தொடர்கள்
தொடர்கள்
முகிழும் நாமங்கள் 30 ஜி.ஏ.பிரபா

20261014052700372.jpeg

​​​​​கல்பவல்லீ

கல்பவல்லீ ஸமபுஜா கஸ்தூரீ திலக்காஞ்சிதா I

ஹகாரார்த்தா ஹம்சகதி: ஹாடகாபரணோஜ்வலா II

கற்பகக் கொடி போன்ற புஜங்களை உடையவள் அம்பிகை. தன் குழந்தைகளைக் கனிவோடு அணைத்துத் தீமைகளிலிருந்து காப்பாற்றுகிறாள். நாம் சாந்தியும் ஆனந்தமும் நிரம்பி வாழ்வதற்காக , அம்பாள் தன் கரங்களால் நம்மை இருக்க அணைத்துக் கொள்கிறாள்.

அவளைத் தவிர வேறு எதையும் நாம் தியானிக்க வேண்டிய அவசியமில்லை. நம்மைப் பூரணத்துவம் அடையச் செய்பவள் அவளே; அவளைத் தொடர்ச்சியாகத் தியானிப்பதன் மூலம் நம் மனம் தானே நிறைவு பெறும்.

கஸ்தூரிப் பொட்டு அணிந்தவள் அம்பாள்; அவளது திலகத்தின் ஒளியே இந்த உலகத்திற்கே வெளிச்சத்தைத் தருகிறது. அவளது கஸ்தூரிப் பொட்டை மட்டுமே நாம் மனதில் நினைத்துத் தியானித்தால் போதும், வேறு யாரிடமும் எதையும் கேட்க வேண்டியதில்லை. நாம் பூரணத்துவம் அடைய, அவளது கஸ்தூரிப் பொட்டினால் அலங்கரிக்கப்பட்ட முகத்தைத் தியானித்தாலே போதும்.

சாந்தியே இல்லாத இந்த உலக வாழ்க்கையில் தற்காலிகமாக ஒரு நிம்மதி உண்டானால், அதுவும் அம்பாளின் கிருபையே. அதைச் சாஸ்வதமாக்க (நிலைத்திருக்கச் செய்ய ஒரே வழி, அம்பாளின் சரண கமலங்களின் மீதான தியானமே. அம்பாளையே நாம் எப்போதும் தியானம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

பஞ்சதசாக்ஷசரி மந்திரத்தின் ஒன்பதாவது எழுத்தாகிய 'ஹகார'த்தின் அர்த்தமாய் விளங்குபவள் அவள். பராக்கிரமம், தனம் முதலியவற்றை அருளும் சக்தியும், ஹம்சத்தைப் போன்ற நடையை உடையவளும் அவளே. ஜீவர்கள் அடையத் தவமிருக்கும் மோட்ச ஸ்தானமாக விளங்குபவள் அம்பிகையே. ஆத்ம சொரூபிணியான அவளின் மூச்சு விடுதலே 'ஹம்ச' மந்திரமாக அமைகிறது.

பொன் ஆபரணங்கள் போன்று பிரகாசிப்பவள் அவள். எனினும், அவளது பிரகாசத்திற்கு முன் ஆபரணங்களின் ஒளி கூடக் குன்றி விடுகிறது.

"ரத்னா க்ரைவேய சிந்தாக லோல முத்தா பலான் விதா"

என்கிறது லலிதா சகஸ்ரநாமம். ரத்தினத்தால் அமைந்த அட்டிகை, அதிலிருந்து தொங்கும் பதக்கம், அவற்றுக்குக் கீழே தொங்கும் முத்துமாலைகள் ஆகிய மூன்று வகையான ஆபரணங்கள் மூன்று வகையான பக்தர்களைக் குறிக்கின்றன என்கிறார் பாஸ்கரராயர்.

முதல் வகை: இவர்களின் வாய் தேவியைத் துதித்துக் கொண்டு இருக்கும்; ஆனால், மனம் எங்கெங்கோ சுற்றித் திரியும். தேவி இவர்களின் நினைவில் கழுத்தளவில் மட்டுமே இருப்பாள்.

இரண்டாம் வகை (லோலர்): இவர்களின் மனம் சிறிது நேரம் வழிபாட்டிலும், சிறிது நேரம் வேறு எங்கோ சென்றும் அலைந்து கொண்டிருக்கும்.

மூன்றாம் வகை (முக்தர்): அலைந்து திரியும் எண்ணங்களில் இருந்து விடுபட்டவர்கள். இவர்கள் மனத்தாலும், செயலாலும், வாக்காலும் தேவியிடமே முழுமையாக ஒன்றியவர்கள். லலிதா சகஸ்ரநாம நாமம் இவர்களையே குறிக்கிறது.

"மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த அணியே! அணியும் அணிகலக்கே!"

என்று அபிராமி பட்டர் அம்பிகையைப் போற்றுகிறார். மணியில் ஒளிரும் ஒளியே அவள்தான். அணியும் அணிகளுக்கெல்லாம் அழகு தருபவளும் அம்பிகையே. அவளின் அருளால்தான் அந்த அணிகலன்களே ஒளி பெறுகின்றன என்கிறார் அவர். மேலும், அவளது திருமேனி அழகை,

கைகளில் அணிவது கண்ணலும் பூவும் கமலம் என்னும் கண்களைக் கவரும் பூக்களும் கமலமும் போன்ற கைகள் என்பவர், கழுத்தில் அணிவது வெண்முத்து மாலை, காலில் அணிவது பண்மணிக் தண்டையும் கொலுசும் என்று அவர் புகழ்கிறார்.

பவளக்கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமலர் போன்ற புன்னகையும் கொண்டவள். அவளின் ஒளிரும் அழகில் மயங்கிய ஈசன் அவளைத் தன்னிடம் பாதியாகச் சேர்த்துக் கொண்டார். அப்படிப்பட்ட திருவுடையாள் இடப்பாகம் சேர்ப்பவளைப் பணிந்தால், அமராவதியை ஆளும் பாக்கியம் கிடைக்கும் என்பது அவரின் கூற்றாகும்.

அவளது முகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தியானம் செய்து கொண்டிருந்தால், அதன் பேரின்ப ருசி நமக்குப் புலப்படும். அவளுடைய சரண கமலத்தைக் காட்டிலும் சாந்தி அளிக்கக் கூடியது வேறு எதுவும் இல்லை. நாம் பிறருக்கு உபதேசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவரவரும் தங்கள் அளவில் தவறு செய்யாமல், "நம்முடைய ஒவ்வொரு காரியத்தையும் அவள் கவனித்துக் கொண்டிருக்கிறாள்" என்ற உணர்வுடன் செயல்பட்டாலே போதும். இந்த உலகில் யாருக்கும் எந்தக் கஷ்டமும் வராது, உலகம் பரம க்ஷேமமாக இருக்கும் என்கிறார்கள் ஞானிகள்.

​அம்பிகையே நமக்குச் சகலமும்.