
அமெரிக்காவை உலுக்கிய ‘ஆன்லைன்’...
இந்த ஊரடங்கு நாட்களில், கொள்ளையடித்துக் கொண்டிருப்பது கொடூர கல்வி `தாதா’க்கள் தான்! இந்த கொள்ளை நோய் நம்மூர் அயோத்தியா குப்பத்திலுள்ள தனியார் பாலர் பள்ளியிலிருந்து, அமெரிக்காவரை நடக்கிறது.
இதன் உச்சக்கட்டமாக, அமெரிக்கா ஒரு அதிரடி அறிவிப்பை செய்தது. அதாவது ஆன்லைனில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள், இனி அமெரிக்காவில் தங்கி படிக்க முடியாது. அவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்கிற உத்தரவை ஜூலை 6 ந்தேதி வெளியிட்டது.
இதற்கு ஏராளமான எதிர்ப்புக்குரல்கள் அமெரிக்காவில் கிளம்பியது. 17 மாகாணங்களில் இருந்த பல்கலைக்கழகங்கள் கொதித்தெழுந்தன. உலகப் பிரசித்தி பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகம், இந்த எதிர்ப்பை முன்னெடுத்துச் சென்றது. அதற்கு துணை நின்றது மசூசெசட்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகம். அதே போல் இணையதள நிறுவனங்களான கூகுள், மைக்ரோ ஸாஃப்ட் பேஸ்புக் போன்ற நிறுவனங்களும் இந்த அணியில் சேர்ந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மசூசெசட்ஸ் மாகாணா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. வழக்கு பாஸ்டன் மாகாண நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணை துவங்குவதற்கு முன்பே, அமெரிக்க அரசு இந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.அறிவிப்புக்கான எதிர்ப்பைக் கண்டு நடுங்கிப் போனார் டிரம்ப்.
இந்த உத்தரவினால் ஏற்படும் விளைவுகள் என்ன?
அமெரிக்காவில் மிகச்சிறந்த பல்கலைக்கழங்கள் உள்ளது. உலகத் தரம் வாய்ந்த இந்தப் பல்கலைக் கழகங்களில், உலகமெங்குமிருந்து வந்து மாணவர்கள் படிக்கிறார்கள். இது போல் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை மட்டுமே பத்து லட்சம். இதில் இந்திய மாணவர்கள் மட்டும் 1,94,556 பேர்.
இந்த ஆன்லைன் வகுப்புகள் என்பது, வெளிநாடுகளில் புதிதல்ல! நேரடி வகுப்புக்கள் நடந்து கொண்டிருக்கும் போது கூட, இரவு மற்றும் விடுமுறை நாட்களில் கூட தங்கள் ஆசிரியர்களை உடனே தொடர்பு கொண்டு, சந்தேகங்களைக் கேட்டு, ஆன்லைனில் விளக்கங்கள் கேட்கலாம். ஆன்லைன் என்பது அவர்கள் பாடத்திட்டத்தில் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. இந்த மாதிரி தனியாக ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்கும்போது, அதற்கு ட்யுஷன் பீஸ் ‘அபராதம்’ எல்லாம் கிடையாது.
அங்கே மாணவர்கள், ஆசிரியர்களின் உறவு என்பது மிகவும் நட்பானது. ஒவ்வொரு மாணவனைப் பற்றி ஆசிரியருக்கும், ஆசிரியரைப் பற்றி மாணவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
அங்கே பெரும்பாலான பல்கலைக்கழகங்களில், வகுப்புக்களில் மாணவர்கள் ஆசிரியர்களை பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள். கையில் புத்தகம் இல்லாமலேயே பலமணி நேரம் சுவாரஸ்யமாக பாடம் எடுக்கக்கூடிய ஆசிரியர்களைத்தான் பல்கலைக்கழகங்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கும்.
அயல்நாட்டு மாணவர்களை வெளியே அனுப்பும் உத்தரவுக்கு இத்தனை எதிர்ப்பு கிளம்பியதற்கு இன்னொரு அடிப்படைக் காரணம் உண்டு. அமெரிக்கா வந்தேறிகளால் உருவான தேசம். பூர்வீக அமெரிக்கன் என்பது அங்கே கிடையாது.
முதலில் அமெரிக்கா என்பது பிரிட்டிஷாரின் ஒரு காலனி நாடாகத்தான் இருந்தது. அது அவர்கள் பிடியிலிருந்து விலகியபின் அங்கே உழைக்க பல நாட்டினர் வந்தார்கள். நாட்டை முன்னேற்றினார்கள். கறுப்பின் மக்களை கடுமையான வேலைகள் செய்ய அடிமைகளாகத்தான் கொண்டு வந்தார்கள். பிறகு அவர்கள் எல்லாத் துறைகளிலும், பல நாட்டினர் அங்கே வந்த பிறகுதான் முன்னேறினார்கள். அதனால் அமெரிக்காவின் எல்லா பலங்களுமே வெளிநாட்டினரை நம்பித்தான் உள்ளது.
அதனால் வெளிநாட்டு மாணவர்கள் விஷயத்தில் அவர்கள் இத்தனை கொந்தளித்தார்கள்.
ஆனால், இந்தியாவில் இப்போது நடக்கும் ஆன்லைன் வகுப்புக்கள் என்பது கொடூர கொள்ளை.
மத்திய அரசு இப்போது ஆன்லைன வகுப்புக்களுக்கான வழிகாட்டுதலை கொடுத்திருக்கிறது. உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குக் கூட ஆன்லைன் வகுப்பு என்றால் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்.
ஆனால் ஏழை, கீழ்மட்ட நடுத்தர குடும்பங்கள் இப்போது இந்த ஊரடங்கினால், பல்வேறு பொருளாதார துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். பலரால் வீட்டு வாடகை கூட கட்ட முடியவில்லை. வீட்டு உரிமையாளர்களின் அச்சுறுத்தலை தினமும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் குடும்பத்தினரின் அந்தந்த பகுதிகளில் இருக்கும் சிறு ஆங்கில மீடியம் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்திருப்பார்கள்.
இந்தப் பள்ளிகள் இப்போது எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புக்களுக்கும் ஆன்லைன வகுப்பு என்று சொல்லி அதிகமான கல்விக் கட்டணம் கட்ட மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆன்லைன் கல்வி கற்க அந்த வீடுகளில் ஸ்மார்ட்போன், இணையதள வசதிகள் இருக்காது. மேலும் அந்தப் பிஞ்சு குழந்தைகள் அந்தக் காமிரா முன்பு உட்காராமல் ஓடிக்கொண்டே இருக்கின்றன.
வகுப்பறை என்பது ஒரு அறையில் குழந்தைகளை அடைத்து வைத்து நடப்பது. அந்த சூழலே குழந்தைகளுக்கு ஒரு வித அச்ச உணர்வை தூண்டிவிடும். அவர்கள் வெளியே ஓடிவிடாதபடி சுற்றிலும் பாதுகாப்பு. எதிரே கையில் குச்சியுடன் ஒரு டிச்சர். அதனால் அந்த
பயத்திலேயே குழந்தைகள் கட்டாயத்தினால் படிக்கும்.
அந்த குழந்தைகளுக்கு, வீட்டில் அந்த பயம் இல்லை. அதனால் காமிராவில் தெரியும் டீச்சருக்கு குட் மார்னிங் சொல்லிவிட்டு ஓடிவிடுகிறார்கள். அந்தக் குழந்தைகளை அந்த காமிரா முன்பு கட்டிப் போட்டு உட்கார வைக்கக்கூடிய கற்பனை வளம் மிக்க பாடமுறைகள் இங்கே முன்னேறவில்லை. அதற்கான முயற்சியும் எந்தப் பள்ளிகளும் எடுப்பதில்லை. காரணம் அந்த மாதிரி வகுப்புக்கள் எடுக்கும் ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும்.
பெரும்பாலும் ஏழைகள் பகுதியில் இருக்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கூட வெறும் பட்டதாரிகளாக மட்டுமே இருப்பார்கள். போதிய ஆசிரியப் பயிற்சி கூட பெற்றிருக்க மாட்டார்கள்.
குழந்தைகளுக்கான ஆன்லைன் வகுப்புக்களை அந்த பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்கிறது மத்திய அரசின் வழிகாட்டுதல் குறிப்பு.
இது பள்ளிகளுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. இன்னும் சில பள்ளிகள் ஒரு படி மேலே போய், ஆன்லைன் வகுப்புக்களுக்கு பள்ளி பஸ் போக்குவரத்து கட்டணம் கூட வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆன்லைன் கல்வி என்பதை இங்கே முறைப்படுத்தாவிட்டால், பல குழந்தைகள் படிப்பு நின்று விடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.

Leave a comment
Upload