
அரசியல் என்பது இன்றைய அக்மார்க் வியாபாரம் ஆகி விட்டது.
சூடு சுரணை தன்மானம் இதெல்லாம் காற்றில் பறக்க விட்டால் தான் இன்றைய அரசியலில் கலாட்சேபம் செய்ய முடியும்.
சமீபத்தில் கமல்ஹாசனுக்கு முக நூலில் ஒரு பதிவு கண்ணில் பட்டது. படித்ததில் பிடித்தது..
வணக்கம் கமல் சார்...
இன்று ஓய்வில் தான் இருப்பீர்கள். பரவாயில்லை ஒரு மணி நேரம் ஓய்வு எடுங்கள்.
வீட்டில் உள்ள ஸ்மார்ட் டிவியில் youtube ஓபன் செய்யுங்கள்.
முப்பது வருசம் முன்ன போவோம்.
தேவர்மகன் . ஊஞ்சலாடியபடியே கவுதமிக்கு முத்தம் தர வருவீர்கள். தள்ளிப்போங்க. இஞ்சி இடுப்பழகா பாடலில் ரேவதியுடன் கோலம் போடும் சீன் பாருங்கள். ரொமான்ஸ் என்றால் கமல் தான்.
இன்னும் நாற்பது வருசம் பின்னால்
ராஜபார்வை . பார்வையற்ற பாத்திரம். மனதை பிழிய வைத்தீர்கள். புதுமை என்றால் கமல்.
மைக்கேல் மதன காமராஜன், வசூல் ராஜா....இப்படி கிரேசியின் வசனங்களை வைத்து விழுந்து உருண்டு சிரிக்க வைத்தீர்கள் .
நாயகனில் அழ வைத்தீர்கள். குருதிப்புனலில் மிரட்டினீர்கள்.
இன்றும் பேசப்படும் குணா...!
சலங்கை ஒலி,அபூர்வ சகோதரர்கள்
புத்தாண்டை இன்னமும் நீங்கள் தான் பைக் ஓட்டி துவக்கி வைக்கிறீர்கள்.
இளமை இதோ இதோ! ......
சுமார் முப்பது வருடம் முன்பே சிகரத்தை எட்டி விட்டீர்கள். இனி கலையில் நீங்கள் சாதிக்க மிச்சம் இல்லை. உங்கள் சாதனையை தொடும் தூரத்திலும் யாரும் இல்லை. இதை நினைத்தே கெத்தாக யாருக்கும் கட்டுப்படாத சுதந்திர சிங்கமாய் உலாவி வாருங்கள்.
திமுக தன்னை அழிக்க நினைத்த அத்தனை பேர் கையிலும் ஒரு அலுமினியத்தட்டை தந்து அறிவாலய வாசலில் உட்கார வைத்து விடும்.
வைகோவில் ஆரம்பித்து எத்தனையோ பேர் எம்.ஜி.ஆர் தவிர.
சமத்துவம் பேசும் தோழர்கள், சமூக நீதி பேசும் ஜாதிக் கட்சித்தலைவர்கள் என அந்த லிஸ்ட் பெரியது. எல்லாரும் ராஜாதி ராஜ, ராஜ குல திலக ....என கலைஞரின் வாரிசுகளுக்கு கட்டியம் கூறி முந்தி நிற்க சண்டை போடுகிறார்கள்.
அவர்களுக்கு வயிறு உள்ளது. பசிக்கும். அதில் நியாயமும் உள்ளது.
நீங்கள் மாபெரும் கலைஞர். "ம்" என இணங்கி போனால் அமிதாப் போல உங்களுக்கான களம் ,கதை, பணம் எல்லாம் தயாராக உள்ளது.
உங்களுக்கு தந்த ராஜ்யசபா எம்பி சீட் என்பது கலைஞரின் வாரிசுகளின் புகழ் பாட அளிக்கப்படும் ஒரு பரிசில் என்பது புரியாத மனிதர் இல்லை. வேண்டாம் அரசியல்.
கலையுலகம் காத்திருக்கிறது கமல் சார்.
வாருங்கள். அரிதாரம் பூசுங்கள்.
அந்த அலுமினிய தட்டை தூக்கி வீசுங்கள்!
*****
அந்த அலுமினிய தட்டு தான் நெத்தியடி.
யோசித்துப் பார்த்தால் எத்தனை பேரை அலுமினிய தட்டை. தூக்க வைத்திருக்கிறது திமுக.
பிளாஸ்டிக் சேரில் உட்கார வைக்கப்பட்டு பேச வைக்கப்பட்ட திருமாவளவன். தன் மானம் சுயமரியாதை, சமூக நீதி என்ற ஜல்லிகளை பார்த்து பார்த்து சலித்துப் போன மக்கள்.
திருமாவுக்கு தேர்தல் தோறும் அலுமினிய தட்டு.
திமுகவிலிருந்து வீறு கொண்டு வெளியேறிய வைகோவுக்கு ஒரு அலுமினிய தட்டு.
தன் கணவன் வீராவேசமாக எதிர்த்த ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் தேமுதிக. மக்களாலும், தேமுதிக தொண்டர்களாலுமே புரிந்து கொள்ள முடியாத ஒரு அலுமினிய தட்டு.
இது போக அல்லு சில்லு கட்சிகளுக்கெல்லாம் அவர்கள் சின்னத்தை மறைத்து ஏராள அலுமினிய தட்டுக்கள்.
சரி திமுக தான் இப்படியென்றால் அந்தப் பக்கம் மட்டும் என்ன குறைச்சலா...அதையும் அடுத்த வாரம் அலசுவோம்.
விஜய் கட்சி ஏதோ தப்பித்து ஓடிக் கொண்டிருக்கிறது. விரைவில் தேர்தல் அவரையும் வளைத்து சாய்க்கலாம்.
இது 2026 மக்கள் முன் போல் இல்லை. அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
அரசியல் கட்சிகள் மக்களை முட்டாளாக நினைக்கக் கூடாது.
அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் உணரத் துவங்கி விட்டது.
ஆனாலும் என்ன அரசியல் சதுரங்க விளையாட்டில் எண்கள் தான் முடிவு செய்யப் போகிறது.
தேர்தல் சூடு பிடித்தாலும், அலுமினிய தட்டு தாங்குபவர்களுக்கு சூடு.... வரப்போவதில்லை.

Leave a comment
Upload