தொடர்கள்
அழகு
லண்டனில் வாழும் தமிழ் ! - கோமதி

2026022706221211.jpeg

வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு நமது மொழி, கலாச்சாரம், பண்பாடு ஒட்டி வாழுதல் என்பது இன்று வரை சவாலாகவே இருந்து வருகின்றது. சவாலாக இருக்கிறதோ இல்லையோ, நமது பழக்க வழக்கங்களை, அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற முனைப்பும், எண்ணமும் வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கிறது என்றும் கூறலாம். அந்த நினைப்பே பல வழிகளில் அதை செயல்படுத்தும் உந்து சக்தியாகவும் அமைகிறது. OFAAL என்னும் தமிழ்ப் பள்ளி நடத்தும் பேச்சு போட்டிக்கு என்னை நடுவராக அழைத்திருந்தனர். அங்கு பேச்சுப் போட்டியில் பங்கு பெற்ற சிறுவர்களை காணும்பொழுது மேலே கூறிய எனது எண்ணம் மேலும் வலுப்பெற்றது.

Oriental Fine Arts & Tamil School - என்று அழைக்கப்படும் கீழைத்தேய நுண்கலை மற்றும் தமிழ்ப் பாடசாலை தமிழ் பள்ளி நடத்துவதோடு சங்கீதம், பரதம், வயலின், மிருதங்கம் போன்ற கலைகளை முன்னேற்றுவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. கலைத் துறையில் டிப்ளோமா நிலை வரை தேர்வுகளை நடத்தி வருவதோடு, பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கட்டளை யாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்த அறக்கட்டளை கடந்த வாரம், தனது பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடத்தினர். ஐந்து வயது முதல் பதினெட்டு வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் இதில் பங்கு பெற்றனர். அவர்களின் வயதிற்கு ஏற்ப அவர்களுக்கு தலைப்புகள் கொடுக்கப்பட்டன. பங்கு பெற்ற அனைவரும் வியக்கவைக்கும் வகையில் சிறப்பாக பேசினார்கள். குறிப்பாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் தங்கள் மழலையில் பேசியது வள்ளுவனின் குறளை நினைவு படுத்தியது. தெளிவான உச்சரிப்புடன், பயமோ தயக்கமோ இன்றி அனைவரும் பேசியது பாராட்டுதலுக்குரியது.

20260227062242530.jpg

இந்த மாணவர்கள் தூய தமிழில் சிறப்பாக பேசியதற்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பும் முக்கிய காரணம். மொழியின் முக்கியத்துவம் அறிந்து, தங்கள் கடமையை சிறப்பாக செயல்படுத்தியதன் வெளிப்பாடு தான் குழந்தைகளின் அற்புதமான பேச்சு. பேச்சுப் போட்டி தவிர திருக்குறள் போட்டியிலும் இவர்கள் பங்குபெற்றனர் என்பதை தலைமை ஆசிரியர் குறிப்பிட்டது மேலும் மகிழ்ச்சி அளித்தது.

தமிழ்ப் பள்ளி அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாடுகளிலும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தான் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லையே தவிர (தமிழ் பெற்றோர்கள்), உலகெங்கும் தமிழ் தமிழர்களிடையே கோலோச்சுகிறது....!!

20260227062337891.jpg

20260227062403305.jpg