
ஞான கூடத்திலிருந்து போர் பூமி ஒரு யோஜனை தூரம் தான் (12 கீமீ) இருக்கும். நடக்க பத்து நாழிகை (4 மணி) ஆகும். உச்சிக்கு மேல் கிளம்பி நடக்க ஆரம்பித்தான் சுப்ரதன்.
பாதி வழி கடந்த போது அருகில் கரும்பு வயல் இருப்பதைப் பார்த்த உடன் வயலுக்குள் இறங்கினான். சத்ரு
ஜித்துக்கு கரும்பு ரொம்ப பிடிக்குமே! யுத்தபூமியில் பாவம் யார் அவனுக்கு மெனக்கிட்டு கரும்பு கொடுப்பார்கள்? போர் சமயத்தில் அரிசி, சோளம், மூங்கில் வாழை, இலை தழை,, இவை தான் எளிதில் நிறைய கிடைக்கும். இரண்டு முழுக் கரும்புகளை கத்தியால் வெட்டி தூண்டுகளாக்கி தன் மேல் துண்டில் வைத்து முதுகில் கட்டிக் கொண்டான்.
அவன் குருஷேத்திரம் செல்வதற்கு முன் சூரியன் மறைந்து விட்டது. போர் முடிந்து உயிருடன் மீண்ட பல்லாயிரக்கணக்கான வீரர்களும் ரதங்கள், யானைகள் குதிரைகளுடன் திரும்பிப் பாசறை நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது. இது பாண்டவர் அணி போலும்..
தேவதத்தனின் நெருங்கிய நண்பனான படை வீரன் சூரசேனன் சுப்ரதனை அங்கு பார்த்து ஆச்சரியப்பட்டான்.
"குழந்தை, நீ எங்கே வந்தாய்?"
"என் அப்பாவையும் என் யானை சத்ரு ஜித்தயும் காண்பதற்கு தான் ஐயா."
சூரசேனன் ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் நின்றான். பின்,
சுப்ரதா! ஒரு விஷயம் கூறுவேன் நிதானமாக கேட்டுக் கொள். ரொம்பவும் கவலை கொள்ளும்படி விஷயமாக இருக்காது. இன்று மதியம் கௌரவ சேனையின் பலர் சேர்ந்து உன் தந்தை பாகனாக இருந்த யானயையும் மேல் இருக்கும் வீரர்களையும் தாக்கும் போது மிகுந்த காயமுற்ற யானை துளியும் பதட்டப் படாமல் தேவதத்தனையும் அம்பாரியில் அமந்திருந்த மாவீரன் ஜெயசீலனையும் தாக்குதல் பகுதியிலிருந்து வெளியேற்றி இறக்கி விட்டு, பின் கீழே விழுந்து விட்டது.
ஜெயசீலனுக்கு காயம் எதுவும் இல்லை. தேவதத்தனுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் உயிருக்கு அபாயம் இல்லை. தேவதத்தனால் குறைந்தது இன்னும் பத்து நாட்களுக்கு போர் பூமிக்கு வர முடியாது. ஒரு வகையில் பார்த்தால் இது உனக்கும் உன் அன்னைக்கும் நல்ல செய்தி தான். ஆனால் உங்க யானை... சத்ருஜித் தானே அதன் பெயர்?... பாவம். தன் எஜமானர்கள் உயிரை காப்பாத்திவிட்டு கீழே விழுந்து விட்டது. அது பிழைக்க வழியில்லை.. இந்நேரம் அது இறந்திருக்கலாம்."
"சத்ருஜித் எங்க விழுந்தது?"
சூர சேனன் யானை விழுந்த இடத்தை தூரத்திலிருந்து காட்டினான். பின் "சுப்ரதா. நீ தந்தையை காண முடியாது அவர் உடல் நலம் பெற்ற பின் சொல்லி அனுப்புகிறேன். கவலை வேண்டாம். நீ இங்கு வந்ததை உன் தந்தையிடம் சொல்ல மாட்டேன். நீ உடனே வீட்டுக்கு போ. ஜாக்ரதை." என்றான்.
"சரி" என்ற சுப்ரதன் சூரசேனன் தலை மறைந்ததும் சத்ருஜித் விழுந்த இடம் நோக்கி சென்று தேட ஆரம்பித்தான். யுத்த பூமி, ரண பூமியாக இருந்தது.
போகும் இடமெல்லாம் மனித, மிருக உடல்கள் உறுப்புகள். உடைந்த தேர் பாகங்கள், எய்த அம்புகள், ஏறிந்த ஈட்டிகள், உடைந்த வாட்கள், கொடிகள்..
தூரத்தில் ஊளையிடும் நரிகள் ஓநாய்கள்..... .
இத்தகைய மாபெரும் போர்களில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மடியும் போது ஒரு சில முக்கியமானவர்களை மட்டுமே மற்ற வீரர்கள் கண்டு பிடிக்க முடியும். சாதாரண வீரர்களை எல்லாம் மரணித்த பின் அடையாளம் கண்டுபிடிப்பது என்பது முடியவே முடியாத விஷயம்.
மறுநாள் காலையில் போர் மீண்டும் துவங்க வேண்டும் என்பதால் முந்திய இரவில் போர் பூமியில் எல்லா உடல்களும் அகற்றப்பட நேரம் பற்றாமையால் உடல்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டு ஏரியூட்டப்படும்.
இது, இறந்த, அடையாளம் தெரியாத, வீரர்களுக்கும், குதிரைகளுக்கும் யானைகளுக்கும் பொருந்தும். உடைந்த மரத்தேர்களும் வெட்டப்பட்ட மரங்களும் எரியூட்ட உதவும். ஆயிரக்கானக்கான பணியாளர்கள் இரு பக்கத்திலிருந்தும் இந்த துப்புரவு தொழிலில் ஈடுபட்டாக வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த நாள் வீரர்கள் போரிடுவது கடினம்.
யுத்தத்துக்கும் கூட சுத்தம் வேண்டியிருந்தது!
குரு ஷேத்திரம் பெரிய பூமியா இருந்ததால் கூட சுத்தம் சுகதாரம் இரண்டும் அதற்கு தேவைப்பட்டது என்று நமக்கு புரிகிறது.
யானைகளின் முதுகில் கட்டப்பட்ட சங்கிலிகளில் பிணைக்கப்பட்ட உடைந்த ரதம் போன்ற பெரிய பொருட்களும் இழுத்துச் செல்லப்பட்டு எரியூட்டப்படும்..
கடைசியில் ரணபூமி முழுவதும் கிருமி நாசினியாக மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு மறுநாளின் புதுச் சண்டைக்கு யுத்த பூமி ஜம் என்று மங்களகரமாகத் தயார் ஆகிவிடும்.
சுப்பிரதனுக்கு அங்கு நடப்பவை கொஞ்ச நேரத்தில் புரிய ஆரம்பித்து விட்டது.
"நல்ல வேளை. தந்தை கொஞ்சம் அடி பட்டு இருந்தாலும் உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என்று அவர் நண்பர் சொல்லியிருக்கிறார். இது நல்ல சேதி. அடுத்த பத்து நாட்களுக்கு போரிட வேண்டாம் என்பதும் நல்ல செய்தி.
ஆனால் அம்மாவிடம் சொல்லும் போது அப்பாவுக்கு அடிபட்ட விஷயத்தை மட்டும் மறைத்து விடலாம். உயிருடன் இருக்கும் வீரனின் கதியே இப்படி.! இறப்புக்குப் பின் வீரர்களை அடையாளம் கண்டு பிடிக்கும் நேரம் கூட யாருக்கும் இல்லை, எனும் போது என் யானை சத்ருஜித்தை எப்படி கண்டு பிடிப்பேன். ஒருவேளை கண்டுபிடித்தாலும் என்னால் யானையை பிழைக்க வைக்க முடியுமா?" என்று எண்ணினான்.
நிதானமாக போர் பூமியில் நகர்ந்து கீழே விழுந்திருந்த யானைகளை எல்லாம் மிக அருகில் சென்று பார்த்தான். சத்ருஜித்தை எளிதில் அடையாளம் காட்டும் விஷயங்கள் இரண்டு உண்டு.
அதனுடைய இரண்டு தந்தங்களில் ஒன்று மிக வளைந்தும் ரொம்ப நீளமாகவும் மற்றொன்று ஓரளவுக்கு நேராகவும் கொஞ்சம் குட்டையாகவும் இருக்கும்.
மற்றொரு முக்கியமான அடையாளம் சத்ருஜித் நெற்றியில் இரு கண்களுக்கு மத்தியில் நீளவாக்காக வெளிர் மஞ்சள் நிறத்தில் பெரிய தேமல் ஒன்று இருக்கும்.
இரண்டு நாழிகை நேரத்துக்கு மேலாகத் தேடிய பின் போர் வீரர்களின் தீவட்டி வெளிச்சத்தில் சத்ருஜித் கிடைத்தான்.
பூகம்பத்தால் சரிந்த மலை போல் கிடந்தது சத்ருஜித். உடலில் அசைவு இல்லை. கழுத்து கால்கள் போன்ற இடங்களில் சில அம்புகள் தைத்திருந்தன.
சத்ருஜித்தை சுப்ரதனால் பார்க்க முடியவில்லை. கண்களில் நீர் திரண்டது. "சத்ருஜித் இறந்து போய்விட்டதா? இல்லை என்றாலும் இந்த நிலையிலிருந்து எப்படி உயிர் பிழைக்க வைக்க நம்மால் முடியும்? இறந்துவிட்டது என்பது நிச்சயமாகிவிட்டால் போர் வீரர்களின் துணையுடன் எரியூட்ட வேண்டியது தான்." சுப்ரதனுக்கு அதற்கு மேல் எதுவும் எண்ணவே முடியவில்லை.
சத்ருஜித்.. சத்ருஜித்" என்று தன்னால் முடிந்த அளவுக்கு சப்தமிட்டு அழைத்துப் பார்த்தான் சுப்ரதன். சத்ருஜித்த்தின் உடலில் அசைவில்லை. கொஞ்ச நேரம் கண் கலங்கி நின்ற சுப்ரதன், பின்னர் தன் முதுகில் சுமந்து வந்த கரும்புத் துண்டங்களை துண்டிலிருந்து எடுத்து, தன் கடைசிக் காணிக்கையாக சத்ருஜித் முன் வைத்து வணங்கினான்.
அடுத்த பதினோரு நாட்களில் போர் முடிந்து விட்டது. பாண்டவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். எவ்வளவு பெரிய வெற்றி பெற்றால் என்ன? அவர்கள் தரப்பிலும் மரணங்கள் இழப்புகள் இருந்தன.. அதுவும் போர் முடியும் சமயத்தில் ஏராளமான இழப்புகள். கொண்டாட்டம் என்று ஒன்றுமில்லை. போர் முடிவு என்பது ஒரு கடமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கான காரியங்கள் நடந்தன.
வெள்ளம் புகுந்து பின் மீண்ட பகுதியில் தேங்கும் குட்டை போல் பாரதப் போர் முடிந்து ஆங்காங்கே மீதியாக இருந்தது சொற்பப் போர் வீரர்கள், படைகள்.!
சிலர் தூரத்தில் இருந்த அவரவர்கள் நாட்டை நோக்கித் திரும்பிச் செல்லவும் ஆரம்பித்தனர்.
தேவதத்தன் உடல் போதிய அளவு நலமாக, ஞான கூடம் செல்வதற்கு ஒரு குதிரையில் கிளம்பினான்.
அவனும் அந்த குதிரையுமே அதிருஷ்ட சாலிகள்தான் என்று அவன் நினைத்தான்… இவ்வளவு மரணங்களைத் தாண்டிப் பிழைக்க இவர்களுக்கு விதி வழி செய்திருக்கிறதே!
"நம் மன்னர் துருபதனும் இளவரசன் த்ரிஷ்டத்யும்னனுமே இறந்துவிட்டார்களே போரில் ! தாராவையும் சுப்ரதனயும் பார்க்கப்போகிறோம். இனிமேல் போர் என்ற ஒன்று உலகில் நடக்காது. நடப்பதாக இருந்தாலும் சண்டை போட வீரர்கள் வேண்டாமா உலகத்தில் எவ்வளவு வீரர்கள் இறந்தனர்? எவ்வளவு குதிரைகள் யானைகள் மறைந்தன?. பாவம் நம் சத்ருஜித்.! இன்று நான் உயிருடன் இருக்கக் காரணமே சத்ருஜித் தானே!. சத்ருஜித் என்னைக் காப்பாற்றி விட்டுப் பின் இறந்துவிட்டதாக எல்லாரும் சொன்னார்கள். அதன் ஆன்மா மற்ற இறந்த லட்சக்கணக்கான யானைகளின் ஆன்மாவுடன் சேர்ந்து நற்கதி அடையட்டும்" இவ்வாறு எண்ணியபடியே கண் கலங்கியபடி தேவதத்தன் ஞான கூடம் அடைந்தான்.
அங்கே மக்கள் சிறு குழுவாக அவனை எதிர்பார்த்து வரவேற்கக் குழுமி இருந்தனர். நடு நாயகமாக ஒரு யானை மீது சுப்ரதன் அமந்திருந்தான்.
யானையா? .. ஆம்!! சத்ருஜித்தே தான்.!!
"இது எப்படி நடக்கும்! சத்ருஜித் உயிரோடு எப்படி இருக்கிறான்?" தேவதத்தன் தழதழத்தான்.
சுப்ரதன் சப்தமாய் சொன்னான். "அப்பா! அடிபட்ட உங்களைக் காப்பாற்றி விட்டு சத்ருஜித் மயங்கி விழுந்து விட்டான். அன்று அங்கு உங்களைப் பார்க்க வந்த நான் நீங்கள் காயமுற்றது முதல் எல்லா விவரமும் அறிந்தபின் கீழே விழுந்து விட்ட சத்ருஜித்தைத் தேடிக் கண்டு பிடித்தேன் .
இறந்து போய்விட்டான் என்று நிச்சயம் செய்து நான் அவனுக்கு கொண்டு வந்திருந்த கரும்பைக் காணிக்கையாக அவன் முகத்தின் அருகில் வைத்தேன். ஆச்சரியம்! கரும்பு வாசனையில் சற்று நேரத்தில் மயக்கம் தெளிந்த சத்ருஜீத் உற்சாகமாக கரும்பைத் தின்றுவிட்டு ஒன்றுமே நடக்காதது போல் எழுந்து மெதுவாக நடக்க ஆரம்பித்து விட்டான்.
நான், சத்ருஜித்தால் வேகமாக நடக்க முடியவிட்டாலும் பரவாயில்லை. இந்த இடத்தை விட்டு முதலில் அவன் அகலவேண்டும் என்று அவனைக்கூட்டிக்கொண்டு ஞான கூடத்துக்கு, நம் வீட்டுக்கே வந்துவிட்டேன். பின் செய்த மருத்துவத்தில் சத்ருஜித் உடல் you சரியாகிவிட்டான்.
அவன் செய்த பெரும் போரும், நமக்கு செய்த உதவியும் நம்முடைய இந்த ஜென்மத்துக்கும் இந்த நாட்டுக்கும் தாராளமாகப் போதும் அப்பா! . நீங்கள், சத்ருஜித், அம்மா, நான் எல்லாரும் இனிமேல் நிம்மதியா வாழலாம் அப்பா."
சுப்ரதன் முடிக்க சத்ருஜித் தன் தும்பிக்கையால் சுப்ரதனை கீழே இறக்க, தேவதத்தன் ஓடி வந்து தன் இரு பிள்ளைகளயும் ஒன்று சேர அணைத்துக்கொண்டான்.
(முற்றும் )

Leave a comment
Upload