
மிஷன் டு சீக் மேன்கைண்ட் (MTSM) விண்கலத்திலிருந்த மூன்று வீரர்களுக்கும் பயணித்துப் பயணித்து போர் அடித்தது. கை கால்களை நீட்டி சோம்பல் முறித்தனர். புறப்பட்டு சரியாக மூன்று வருடம் முப்பத்தொரு நாட்கள் ஆகின்றது. பூமியை விட்டு நூற்று அறுபது கோடி மைல்கள் கடந்து வந்தாகி விட்டது.
சற்று முன்னர் தான் வரிவரியாய் வளையங்கள் அணிந்த சனி கிரகம் வலது புறமாய் கடந்து போனது. அடுத்து யுரேனஸ்ஸை நோக்கிய பயணம். மனிதர்களைப் போல வேற்று கிரகங்களில் வாழும் இனம் இருக்கிறதா என்று ஆராய்வதற்காக புறப்பட்ட மிஷன். இதுவரை எக்ஸ்டெண்டட் ஸ்பெக்ட்ரம் எல்லாவற்றிலும் அலசிப்பார்த்தும் ஆள் அரவம் எதுவும் தென்படவில்லை. அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.
“ ஹலோ.. பூமி மனிதர்களே.. எங்கே போய்க் கொண்டிருக்கிறீர்கள்.. விண்வெளியில் ஏனிந்த விபரீதப் பயணம்?”
திடீரென்று ஹெட்போன் ஸ்பீக்கரில் கனீரென்று ஒலித்தது ஒரு பரிச்சயமில்லாத குரல். விண்கலத்தின் கடிகாரம் பூமியின் தேதியையும் நேரத்தையும் டிஜிட்டலில் காட்டியது. 0700 GMT, 20 டிசம்பர் 2029.
இது பூமியில் இருந்து வரும் வழக்கமான கட்டளைச் சேனல் இல்லை. புதிய அலைவரிசையில் அட்சர சுத்தமாய் விசாரித்த குரல். பேசியது யார்? அருகில் ஏதாவது விண்கலத்திலிருந்து வந்ததா அல்லது வேற்று கிரகத்திலிருந்தா..?
விண்கலத்திலிருந்த மூன்று பேரும் பரபரப்பானார்கள்.
காதில் ஒலித்தது நிஜந்தானா அல்லது மனப்பிராந்தியா என ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.
அடையாம் தெரியாத குரல் தொடர்பு பற்றி உடனே பூமியிலிருக்கும் கட்டுப்பாட்டு மையத்திற்கு மெசேஜ் பறந்தது. அனுப்பிய செய்தி எல் டூ பாயிட்டில் இருக்கும் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ்ஷிப் மூலம் அஞ்சல் செய்யப்பட்டு பூமியை சென்றடைய இரண்டு மணி நேரமாகும். அங்கிருந்து கட்டளை வருவதற்கு மேலும் இரண்டு மூன்று மணி நேரமாகலாம்.
இதற்கிடையில் குரல் வந்த அதே பேண்டில் ரிசீவரை ட்யூன் செய்து தொடர்பு கொள்ள முயன்றனர்.
“நீங்கள் யார் .. எங்கிருந்து பேசுகிறீர்கள்.. உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றோம்”
“நான் சூரிய மண்டலத்துக்கு அப்பால் தொலைவிலிருக்கும் கிரகவாசி. நானும் உங்களைப் போல எங்கள் கிரகத்திலிருந்து முப்பது பில்லியன் மைல் தூரத்தில் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றேன்.
“ பதிலளித்தமைக்கு மிக்க நன்றி. உங்களை சந்திக்க முடியுமா?”
“தற்போது உங்கள் விண்கலத்திலிருந்து இருபது பில்லியன் மைல் தூரத்திலிருக்கின்றேன். என்னால் அரை நாளில் உங்களை வந்தடைய முடியும். ஆனால் நீங்கள் ஆபத்தானவர்கள். உங்கள் கண்ணில் படாத தூரத்தில் இருக்க வேண்டும் என்பது எங்கள் தேசக் கட்டுப்பாடு”.
“ஏன் அந்த கட்டுப்பாடு?”
“உங்கள் பூமியில் புகழ்பெற்ற அவ்வையாரின் நீதி வெண்பா படித்ததில்லையா?”
“கொம்புளதற்கு ஐந்து; குதிரைக்குப் பத்து முழம்;
வெம்புகரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே..
வம்புசெறி தீங்கினர்தம் கண்ணில் தெரியாத
தூரத்து நீங்குவதே நல்ல நெறி".
“ஓ.. எங்கள் இலக்கியம்கூட உங்களுக்குத் தெரியுமா?”
“பூமியைப் பற்றியும், மனிதர்களைப் பற்றியும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். அவ்வப்போது உங்கள் கண்ணில் படாமல் பூமிக்கு வந்து நோட்டமிட்டுக் கொண்டு இருக்கிறோம்”
“அப்படியா.. மகிழ்ச்சி ..உங்களைப் பற்றி இன்னும் சொல்லுங்கள்..”
“நாங்கள் பூமியில் வாழும் மனிதர்களாகிய உங்களை விட நாகரீகத்தில் ஆயிரம் வருடம் முன்னேறியவர்கள். உங்களை விட நூறு மட்ங்கு அறிவு வளர்ச்சி பெற்றவர்கள்”
“ஆச்சர்யமாக இருக்கிறது”
“உங்கள் செவிகளுக்கு இருபது ஹெர்ட்ஸ் முதல் இருபது கிலோ ஹெர்ட்ஸ் வரைதான் கேட்கும் திறன். கிகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் பேசவும் கேட்கவும் கூடியவர்கள் நாங்கள். உங்கள் கண்களுக்கு தெரியும் ஒளி ஸ்பெக்ட்ரம் நானூறு முதல் எண்ணூறு டெரா ஹெர்ட்ஸ்தான். நாங்கள் அல்ட்ரா வயலெட்டையும் தாண்டி மேலும் ஆயிரம் டெரா ஹெர்ட்ஸ் வரை காணும் சக்தி பெற்றவர்கள். எங்கள் உருவமோ விண்கலமோ உங்கள் கண்களுக்குத் தெரியாது ஆனால் எங்களால் உங்களையும் உங்கள் கலங்கள் கருவிகள் அனைத்தையும் பார்க்க முடியும். உங்களைப் பின் தொடர்ந்து வரும் எங்கள் கலத்தை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை”.
“ஓ.. அப்படியா”
“எங்களிடம் ஒளியைவிட பல மடங்கு வேகமாய் பயணிக்கும் வாகனங்கள் உண்டு. நீங்கள் இன்னும் ஒளி வேகத்தையே உச்சமென்று நம்பிக் கொண்டிருப்பவர்கள்”.
“ஒளியைவிட வேகமாய் பயணிப்பீர்களா..”
“இந்த மொத்த சம்பாஷனையும் எனக்கு ஒரு நொடிப்பொழுதுதான். ஆனால் உங்களுக்குப் புரிய வேண்டும் என்பதற்காக என் பாட்டன் காலத்து ட்ரான்ஸ்டூசரைத் எடுத்து அதன் வழியாக வேகம் குறைத்து உங்களுக்குப் புரியும் மொழியில் மொழிமாற்றி உங்களருகில் உள்ள எங்கள் விண்கலம் மூலம் அஞ்சல் செய்து, அப்படித்தான் அரை மணி நேரமாய் உரையாடிக் கொண்டிருக்கின்றோம்”.
“அப்படியா..”
“ம்.. சொல்லுங்கள் .. எதற்காக எவ்வளவு தூரம் வந்திருக்கின்றீர்கள்”.
“உங்களைப் போன்ற வேற்று கிரக மனிதர்களைக் காண வந்திருக்கின்றோம்..”
“பூமியில் வாழும் உங்கள் சகமனித உயிர்களை நீங்கள் மதிக்கின்றீர்களா… ஒரு பக்கம் ஒவ்வொரு நாளும் அதிபயங்கர வெடிகுண்டுகளை ஏவுகனைகளில் கொண்டுபோய் வீசி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொத்து கொத்தாய் கொன்று குவிக்கும் நீங்கள், மற்றொரு பக்கம் வேற்றுகிரக மனித இனத்தைத்தேடி இத்தனை தூரம் வருவதற்கு வெட்கமாக இல்லையா?”
“சாரி.. நண்பனே..”
“ஆயிரக் கணக்கான கிரகங்கள் வறண்டுபோய் பாலைவனமாக அழிந்து கிடக்கின்ற போது உங்களுக்கு மட்டும் அமிர்தமாய் கிடைத்த தண்ணீரை எப்படி வீணடிக்கின்றீர்கள். விரைவில் தண்ணீரில்லா கிரகங்களின் வரிசையில் பூமியும் சேரப்போகிறது என்பதை நாங்கள் அறிவோம். எல்லா வளங்களோடும் சொர்க்கமாய் கிடைத்த பூமியை, போட்டி பொறாமை சுயநல மிகுதியால் ஒருவரை ஒருவர் அழித்துக் கொண்டு, வாழத் தகுதியற்ற நரகமாய் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் நீங்கள், மிகவும் ஆபத்தானவர்கள்”.
“உண்மைதான்.. வருந்துகிறோம்..”
“எங்களைப் போன்று இன்னும் ஐம்பது கிரகங்களில் நன்கு நாகரீகமடைந்த இனம் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். நாங்கள் யாரும் பூமியிலிருந்து வரும் மனிதர்களை அருகே அண்டவிட மாட்டோம். உங்கள் தொடர்பு என்பது எங்களின் அழிவின் ஆரம்பம் என்று எங்களுக்குத் தெரியும். தயவுசெய்து திரும்பிப் போய் விடுங்கள். பூமியில் சகமனிதரோடு உண்மையான சகோதரத்துவமாய் வாழப் பழகுங்கள்”.
“உங்கள் வளர்ந்த தொழிட்நுட்பத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறோம்..”
“திருந்திய மனிதர்களாக நீங்கள் மாறியிருந்தால் மீண்டும் நூறு வருடம் கழித்து சந்திப்போம். எங்கள் அட்வான்ஸ்டு டெக்னாலஜியை அப்போது சொல்லிக் கொடுப்போம். வந்த வழியே பத்திரமாக பூமிக்குத் திரும்புங்கள்”.
“நன்றி நண்பனே!..”
“ரோஜர்”
ஆரம்பத்தில் அனுப்பிய செய்திக்கு இன்னும் பூமியில் இருந்து பதில் வரவில்லை.

Leave a comment
Upload