தொடர்கள்
ஆன்மீகம்
நலம் தரும் நவகிரக நாயகர்கள்..!! - 18 - ஆரூர் சுந்தரசேகர்.

சென்னையிலேயே நவகிரக ஸ்தலங்கள்..!!

The heroes of the nine planets that bring good luck..!! - 18

ஒன்பது (9) என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு, ஒரு முழுமையான சுழற்சி இருப்பதாக ஆன்மீக மற்றும் ஜோதிடம் உணர்த்துகின்றன.நவகிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள். நவரசங்கள், நவராத்திரி இது போன்ற பல விஷயங்கள் உலகில் நம் நடைமுறை வாழ்க்கையில் உள்ளன.
அதேபோன்று எந்த எண்ணின் ஒன்பது மடங்கும் (9, 18, 27, 36...) இறுதியில் கூட்டிப் பார்த்தால் (9+0=9, 1+8=9, 2+7=9) ஒன்பதாகவே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்புகள் பொதுவாக இந்த அமைப்புகள் உலகின் முழுமை, தெய்வீகம் மற்றும் இயற்கையின் சுழற்சியைக் குறிப்பதாக நம்பப்படுகின்றன.
நவகிரக கோயில்களும் அந்த அடிப்படையில் அமைந்தவையே. கும்பகோணத்தைச் சுற்றி நவகிரக ஸ்தலங்கள் இருப்பது நாம் அறிந்ததே. ஆனால் கும்பகோணத்தைச் சுற்றி உள்ள நவக்கிரக ஸ்தலங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் அதே பலன்களைப் பெறக்கூடிய வகையில் சென்னை நகரில், போரூருக்கு 20 கி.மீ சுற்றளவில் பழமையான நவகிரகக் கோயில்கள் அமைந்துள்ளன. அவை,

The heroes of the nine planets that bring good luck..!! - 18

கொளப்பாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் (ஸ்ரீ சூரியனுக்கான நவக்கிரக ஸ்தலம்)
சோமங்கலம் ஸ்ரீ சோமநாதீஸ்வரர் (ஸ்ரீ சந்திரனுக்கு நவக்கிரக ஸ்தலம்)
பூந்தமல்லி ஸ்ரீ வைத்தீஸ்வரர் (ஸ்ரீ அங்காரகனுக்கான நவக்கிரக ஸ்தலம்)
கோவூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் (ஸ்ரீ புதனுக்கான நவக்கிரக ஸ்தலம்)
போரூர் ஸ்ரீ ராமநாதேஸ்வரர் (ஸ்ரீ குருவுக்கான நவக்கிரக ஸ்தலம்)
மாங்காடு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் (ஸ்ரீ சுக்கிரனுக்கான நவக்கிரக ஸ்தலம்)
பொழிச்சலூர் ஸ்ரீ அகத்தீஸ்வரர் (ஸ்ரீ சனீஸ்வரருக்கான நவக்கிரக ஸ்தலம்)
குன்றத்தூர் ஸ்ரீ நாகேஸ்வரர் (ஸ்ரீ ராகுவுக்கான நவக்கிரக ஸ்தலம்)
கெருகம்பாக்கம் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் (ஸ்ரீ கேதுவுக்கான நவக்கிரக ஸ்தலம்)

கொளப்பாக்கம் ஸ்ரீ அகத்தீஸ்வரர் (ஸ்ரீ சூரியனுக்கான நவக்கிரக ஸ்தலம்)

The heroes of the nine planets that bring good luck..!! - 18

போரூருக்கு அருகில் உள்ள கொளப்பாக்கத்தில் அருள்மிகு ஆனந்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இது சூரிய பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் 1,300 ஆண்டுகள் பழமையானது.
சூரியதேவனுக்கு உஷா, பிரத்யுஷா என்று இரண்டு தேவியர். உஷாதேவிக்கான காலத்தையே உஷத் காலமாகவும், பிரத்யுஷாவுக்கான காலத்தைப் பிரதோஷ காலம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இவர்களில் உஷாதேவியை அடையும் பொருட்டு சூரிய பகவான் சிவனாரை வழிபட்ட ஸ்தலம். இங்கே தனி சந்நிதியில் சூரிய பகவான் ஈஸ்வரனை நோக்கிய வண்ணம் உள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ஸ்தலத்துக்குச் சென்று, சூரியனுக்குச் சிவப்பு வஸ்திரம் அணிவித்து, செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்து, மேலும் சூரியனுக்குரிய தானியமான கோதுமையில் செய்த பிரசாதத்தை நைவேத்தியம் செய்து மனமுருக வேண்டினால் நமது பிரச்சினைகள் நீங்கி நற்பலன்கள் கிட்டும்.
அரசமரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட கோயில். ஸ்தல தீர்த்தம் - அம்ருத புஷ்கரணி. பிரதோஷ நாட்களிலும், சிவராத்திரி நேரங்களிலும் பக்தர்கள் இத்தலம் வந்து, ஆனந்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் அருளோடு சூரிய பகவானின் திருவருளையும் பெறுகின்றனர். கொளப்பாக்கம் சென்னையிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், போரூர் சந்திப்பிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலும் உள்ளது.

சோமங்கலம் ஸ்ரீ சோமநாதீஸ்வரர் (ஸ்ரீ சந்திரனுக்கு நவக்கிரக ஸ்தலம்)

The heroes of the nine planets that bring good luck..!! - 18

குன்றத்தூர் அருகே சோமங்கலத்தில் அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத சோமநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இது சந்திரனுக்கு உரியப் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் 1,500 ஆண்டுகள் பழமையானது. சந்திரனே இத்தலத்திலுள்ள ஈசனைப் பூஜித்து, தான் இழந்த கலையை மீண்டும் பெற்றதால் இவ்வூருக்குச் சோமங்கலம் என்ற பெயர் உண்டானது. அதாவது, சந்திரன் மங்கலம் பெற்ற ஸ்தலம் இது. இங்குச் சந்திரன் தனிச் சந்நதியில் அருள்பாலிக்கிறார். திங்கட்கிழமை இந்த ஸ்தலத்துக்குச் சென்று, வெள்ளை நிற வஸ்திரத்தை அணிவித்து, வெள்ளை அல்லி மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் கலந்த பால் பாயசம் நைவேத்தியம் செய்து சந்திரனை வணங்க வேண்டும். இங்குக் கருவறையில் 'சதுர தாண்டவ மூர்த்தி'யாக நடராஜர் தனித்துவமாக எழுந்தருளி இருப்பதைக் காண்பது மிகவும் அரிது. சந்திரனின் வடிவமான சதுரத்தை அடிப்படையாகக் கொண்டு, சிவபெருமான் இங்கு எழுந்தருளியிருப்பது சிறப்பம்சமாகும். இங்கு ஈசன் சோமநாதரையும் சந்திரனையும் வழிபடுவதால் நல்ல தேக ஆரோக்கியத்தையும், சகல இன்பங்களையும் பெற்று வாழலாம். இக்கோயிலின் ஸ்தல விருட்சம், கருவறையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சரக்கொன்றை மரம் ஆகும்.இக்கோயிலின் ஸ்தல தீர்த்தம் சந்தீஸ்வரர் தீர்த்தம் என்று கூறப்படுகிறது, இது ஸ்ரீ சந்திகேஸ்வரரால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
சென்னை, தாம்பரத்திலிருந்தும், குன்றத்தூரிலிருந்தும் இக்கோயிலுக்குச் செல்லலாம். இரண்டு இடங்களில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பூந்தமல்லி ஸ்ரீ வைத்தீஸ்வரர் (ஸ்ரீ அங்காரகனுக்கான நவக்கிரக ஸ்தலம்)

The heroes of the nine planets that bring good luck..!! - 18

பூந்தமல்லியில் அருள்மிகு தையல் நாயகி சமேத வைத்தீஸ்வரன் கோயில் உள்ளது. இது செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இத்தலத்துக்கு “உத்தர வைதீஸ்வரன் கோயில்” என்ற பெயரும் உண்டு. இக்கோயில் 1,300 ஆண்டுகள் பழமையானது. சாபம் பெற்ற இந்திரனுடைய சருமநோயைத் தீர்த்து மோட்சம் அருளிய ஸ்தலம். அங்காரகன் தனக்கு ஏற்பட்ட தோஷத்தால் பலம் குறைந்து, இத்தலத்திலுள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி தனது முழுமையான பலத்தைப் பெற்றார். இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் 21 முதல் 25-ஆம் தேதி வரை (சுமார் பிப்ரவரி-மார்ச்) அதிகாலை 6 மணி அளவில், சூரியனின் கதிர்கள் கிழக்கு கோபுரம் வழியாக நேரடியாக மூலவர் சிவலிங்கத்தின் மீது விழும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது. இந்த நிகழ்வு 'சூரிய பூஜை' என்று அழைக்கப்பட்டு, சூரிய பகவான் சிவனை வழிபடுவதாகக் கருதப்படுகிறது. இங்குத் தாளிப்பனையின் கீழே அங்காரகன் அருவமாகப் பூஜிக்கும் விதமாகச் சிவலிங்கமும், திருவடிகளும் உள்ளன. செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தித்துக்கொண்டால், வெகு விரைவிலேயே திருமணம் நடைபெற்றும் என்பது ஐதீகம்.
தாளிப்பனை மரம் ஸ்தல விருட்சமாகக் கொண்ட கோயில். ஸ்தல தீர்த்தம், மங்கல தீர்த்தம்.
இந்த கோயில் பூந்தமல்லியின் மையப் பகுதியில் உள்ளது. ஆவடி, தாம்பரம், கோயம்பேடு என எல்லா பகுதிகளிலிருந்தும் பூந்தமல்லிக்குச் செல்லலாம்.

கோவூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் (ஸ்ரீ புதனுக்கான நவக்கிரக ஸ்தலம்)

The heroes of the nine planets that bring good luck..!! - 18

போரூருக்கு அருகில் உள்ள கோவூரில் அருள்மிகு சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவனைக் காமதேனு வழிபட்டதால், இத்தலம் ‘கோவூர்’ என்று வழங்கப்படுகிறது. இது புதன் பரிகார ஸ்தலம்.. இக்கோயில் 1,200 ஆண்டுகள் பழமையானது. இத்தலத்தில் புதன் ஈசனோடு இணைந்த அம்சமாக விளங்குகிறார். அதனால், புதனுக்குத் தனி சந்நிதியில்லை. மூலவரை வணங்கினாலே போதும்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் இத்தல இறைவன் மீது கோவூர் பஞ்சரத்னகீதம் பாடியுள்ளார். சேக்கிழார் பெரியபுராணத்தை ஆரம்பித்த இடமாகவும் போற்றப்படுகிறது
புதன்கிழமை அன்று, சிவபெருமானுக்குச் செந்நிற வஸ்திரத்தை அணிவித்து செண்பக மலர்களால் அர்ச்சனை செய்து, பால் அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் புதனருள் கிட்டி கல்வி மற்றும் சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம்.
கயிலாயத்துக்கு ஒப்பான இத்தலத்தின் ஸ்தல விருட்சம், மகாவில்வம் (27 இலைகளைக் கொண்ட சிறப்பு வாய்ந்தது). இக்கோயிலின் ஸ்தல தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம்
போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் கோவூர் உள்ளது.

போரூர் ஸ்ரீ ராமநாதேஸ்வரர் (ஸ்ரீ குருவுக்கான நவக்கிரக ஸ்தலம்)

The heroes of the nine planets that bring good luck..!! - 18

போரூரில் குடிகொண்டுள்ள அருள்மிகு சிவகாமசுந்தரி அம்பாள் சமேத இராம நாதேஸ்வரர், ஸ்ரீராமருக்குப் போர்த் தந்திரங்களைக் கற்பித்ததால் இந்த ஊரே போரூர் என்றானது என்கிறது புராணம்.
இத்தலத்துக்கு“உத்தர ராமேஸ்வரம் ” என்ற பெயரும் உண்டு. இக்கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. ஶ்ரீராமருக்கு குருவாகச் சிவன் விளங்கிய காரணத்தால் இந்த கோயில் குருவுக்குரிய பரிகார ஸ்தலமாகக் கருதப்படுகிறது. குரு பகவானுக்கு உரிய பூஜைமுறைகள் யாவும் இந்த இராம நாதேஸ்வரருக்கு செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் போலவே இங்கும் விபூதியுடன் பச்சைக்கற்பூரமும், ஏலக்காயும் மணக்கும் தீர்த்தமும் பிரசாதமாகக் கிடைக்கிறது; அதோடு, பக்தர்களின் தலையில் சடாரி சாத்தும் மரபும் உள்ளது. இங்கு வியாழக்கிழமை விரதம் இருந்து, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, முல்லை மலரால் அர்ச்சனை செய்து,நெய் தீபம் ஏற்றி, கொண்டைக்கடலை சுண்டல், தயிர்ச்சாதம், நைவேத்தியம் செய்து குருவான சிவனையும் வணங்கினால், குருவருள் பெருகும். இங்குச் சிவபெருமானுக்குத் திராட்சை மாலை அணிவித்து வணங்குவது சிறப்பு. புத்திரபாக்கியம்,, திருமணத்தடைக்கு இவரை வழிபட்டால் குருவின் அருளைப் பெறலாம். இராமபிரானின் திருவடிகளை இத்தலத்தில் தரிசிக்கலாம்.
இக்கோயிலின் ஸ்தல விருட்சம் வேப்பமரம். இதனுடன் நெல்லி மரமும் இத்தல வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஸ்ரீராமர் இத்தலத்தில் ஒரு நெல்லி மரத்தடியில்தான் தவம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் சிவ தீர்த்தம் (அமிர்‌த தீர்த்தம்) முக்கியத் தீர்த்தமாகக் கருதப்படுகிறது.
போரூர் சந்திப்பிலிருந்து குன்றத்தூர் செல்லும் சாலையில் சுமார் அரை கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

மாங்காடு ஸ்ரீ வெள்ளீஸ்வரர் (ஸ்ரீ சுக்கிரனுக்கான நவக்கிரக ஸ்தலம்)

The heroes of the nine planets that bring good luck..!! - 18

பூந்தமல்லிக்கு அருகே உள்ள மாங்காட்டில் அருள்மிகு வெள்ளீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அம்பாள் காமாட்சி அம்மன் அருகிலேயே தனிக் கோயில் கொண்டுள்ளார். இக்கோயிலில் சுவாமி சந்நிதி எதிரே அம்பாள் பாதம் மட்டும் உள்ளது. சுக்கிராச்சாரியார் இங்குச் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அனுதினமும் பூஜிக்க, அவருக்கு ஈசன் பார்வையை மீட்டுக் கொடுத்தார். இத்தலத்தைத் தரிசிப்பவர்களுக்குச் சுக்கிரனின் பூரண அருள் கிட்டும். இங்குள்ள ஈசனைத் தமிழில் வெள்ளீஸ்வரர் என்றும், சமஸ்கிருதத்தில் பார்க்கவேஸ்வரர் என்றும் அழைக்கின்றனர். இக்கோயில் 1,000 ஆண்டுகள் பழமையானது. இது சுக்கிரன் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் மாங்காடு வெள்ளீஸ்வரரை தரிசித்து பார்வை திறனைப் பெறுகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் அல்லது பரணி, பூரம், பூராடம் நட்சத்திரங்களில் சுக்கிரனுக்குப் பரிகார பூஜைகள் செய்கிறார்கள். இங்கு வெள்ளீசுவரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வெண்பட்டு உடுத்தி, வெள்ளைத் தாமரையால் அலங்கரித்து, மொச்சைப் பயறு சுண்டல் நைவேத்தியம் செய்து வழிபட, திருமணத் தடை நீங்குகிறது மற்றும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்கிறார்கள். இக்கோயிலின் ஸ்தல விருட்சம் மாமரம். மற்றும் ஸ்தல தீர்த்தம் சுக்கிர தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
இக் கோயில் மாங்காடு பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

பொழிச்சலூர் ஸ்ரீ அகத்தீஸ்வரர் (ஸ்ரீ சனீஸ்வரருக்கான நவக்கிரக ஸ்தலம்)

​ ​ The heroes of the nine planets that bring good luck..!! - 18

பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. இது சனி பகவானுக்குரிய பரிகாரத் தலம். இவ்வூர் பூம்பொழிலோடு மலர்ந்திருந்ததால் பொழில் சேரூர் என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி, பொழிச்சலூர் என்றானது என வரலாறு கூறுகிறது. இக்கோயில் 1,000 ஆண்டுகள் பழமையானது. ‘மற்றவர்களின் பாவங்களை நீக்கிய சனி பகவான், இங்கு வந்து தனது பாவங்களை நீக்கிக் கொண்டார்’ எனத் ஸ்தல வரலாறு கூறுகிறது. சனீஸ்வர பகவான் இத்தலத்தில் உள்ள நள்ளாறு என்ற தீர்த்தத்தில் நீராடி, சிவனைப் பூஜித்து தன் தோஷம் நீங்கப்பெற்று, தனிச் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறார். எனவே, இவ்வூர் வடதிருநள்ளாறு என்றும் வழங்கப்படுகிறது. இங்குத் தனிச் சந்நிதியில் சின்முத்திரையுடன் சனி பகவான் காட்சியளிக்கின்றார். சனிக் கிழமைகளில் இங்கு வந்து ஈசனை வழிபடுவதுடன், சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால், எல்லாவித சனி தோஷங்களும் நீங்கி வலிமை பெறுவார்கள் என்பது ஐதீகம். கருநீல நிற வஸ்திரத்தையும் சனீஸ்வரனுக்கு அணிவித்து கருநீல சங்கு புஷ்ப மலர்களையும், அர்ச்சனை செய்வது நன்மையைத் தரும். மற்றும் அநாதைகளுக்கும் வயோதிகர்களுக்கும் தான தர்மங்கள் செய்தும் சனிபகவானின் அருளைப் பெறலாம்.
இக்கோயிலின் ஸ்தல விருட்சம் வன்னி மரம், இங்குள்ள ஸ்தல தீர்த்தம் நள்ளார் தீர்த்தம்.இந்த கோயில் பல்லாவரம் - குன்றத்தூர் சாலையில் பல்லாவரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள பொழிச்சலூர் என்ற ஊரில் உள்ளது.

குன்றத்தூர் ஸ்ரீ நாகேஸ்வரர் (ஸ்ரீ ராகுவுக்கான நவக்கிரக ஸ்தலம்)

The heroes of the nine planets that bring good luck..!! - 18

போரூர் அருகில் உள்ள குன்றத்தூரில் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத திருநாகேஸ்வரர் கோயில் ராகு பரிகாரத்தலமாக விளங்குகிறது. இத்தலத்தில் ராகு வழிப்பட்டதால் சிவபெருமானுக்கு ‘திருநாகேஸ்வரர்’ என்று பெயரானது. இந்த ஆலயத்தில் ராகுவுக்குரிய வழிபாடுகள் சிறப்பாகச் செய்யப்படுகிறது. இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் அவதாரத் தலம் இது. சேக்கிழார் பெருமான், சோழ தேசத்தில் அமைச்சராக இருந்தபோது கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமியை தரிசிப்பதை பெரும் பேறாகக் கருதினார். இப்படியொரு ஆலயத்தை தம் சொந்த ஊரில் அமைக்க அவர் ஆவல் கொண்டு அதை நிறைவேற்றி மனநிறைவு கண்டார். இத்தலத்தை வடநாகேஸ்வரம் என்று அழைக்கின்றனர். கோயிலினுள் சேக்கிழார் பெருமான் சந்நிதி அமைந்துள்ளது. இத்தலத்தில் நாகத்தின் கீழ் லிங்க உருவில் காட்சி தருகிறார் ஈஸ்வரன். இன்றும்கூட இரவு நேரத்தில் நாகங்கள் இறைவனை வழிபட வருவதாகக் கூறுகின்றனர்.
இத்தலத்தில் அமர்ந்திருக்கும் மூலவரான நாகேஸ்வரர், ராகுவின் அம்சமாகவே காட்சி தருகிறார். ராகு காலத்தில் சிவனுக்குப் பாலாபிஷேகம் செய்தும், உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் போன்றவற்றை நைவேத்தியமாக வைத்தும் வழிபாடு செய்கிறார்கள். ராகு தோஷமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டால் தோஷம் விலகி நன்மை பெறுவார்கள். மேலும் சர்ப்ப தோ‌ஷம், திருமணத்தடை, ஆயுள் பாதிப்புகள் ஆகியன விலகி நலம் அடைவார்கள். இங்குச் சர்ப்ப சாந்தி பரிகாரமாக ஹோமமும் செய்து நல்ல பலன்களைப் பெறலாம்.இத்திருக்கோயிலின் தல விருட்சம் செண்பக மரம். இக்கோயிலின் ஸ்தல தீர்த்தம் சூரிய புஷ்கரணி என அழைக்கப்படுகிறது.
போரூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரத்திலும், பல்லாவரத்தில் இருந்து சுமார் 8 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது

கெருகம்பாக்கம் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் (ஸ்ரீ கேதுவுக்கான நவக்கிரக ஸ்தலம்)

The heroes of the nine planets that bring good luck..!! - 18

போரூர் அருகில் கெருகம்பாக்கத்தில் அருள்மிகு ஆதி காமாட்சி சமேத நீலகண்டேஸ்வரர் கோயில், கேது பரிகாரத்தலமாக விளங்குகிறது. இதனை வட கீழ்ப்பெரும்பள்ளம் என்றும் அழைக்கின்றனர். இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது. கேதுவால் வழிபடப்பட்ட பெருமை கொண்ட ஆலயம் என்பதால், அவரால் ஏற்படும் தோ‌ஷங்கள் இங்கு நிவர்த்தியாகின்றன.
ஒவ்வொரு நாளும் எமகண்ட வேளை என்பது கேதுவிற்கு உரிய தாகும். இங்கே செய்யப்படும் எமகண்ட வேளை பூஜைகள் விசே‌ஷமானது. நீலகண்டேஸ்வரருக்கும், நந்திக்கும் இடையே இருக்கும் மேல் விதானத்தில், சூரியனைக் கேது விழுங்குவது போன்ற ஒரு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்குக் கீழாக நின்றபடி நீலகண்டேஸ்வரரையும், அம்பிகையையும் பிரார்த்தனை செய்தால் கேது தோ‌ஷம் நீங்கும். இத்தலத்தில் கேது பகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். திருமணத்தடை, புத்திர பாக்கியம், தேக ஆரோக்கியம், தொழில் சம்மந்தப்பட்ட அனைத்து தடைகளும் நீங்குவதற்கு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை, எம கண்டத்தின் போது, காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை, ஸ்ரீ கேது பகவானுக்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் ஹோமங்கள் செய்யப்படுகின்றன, அதன் பிறகு சிறப்பு அபிஷேகம் செய்து, பல வண்ண வஸ்திரம் அணிவித்தும், சிவப்பு அல்லி மலர்களால் அலங்கரித்தும் கொள்ளு பொடி கலவை சாதம் நைவேத்தியம் செய்கிறார்கள்.
இக்கோயிலின் ஸ்தல விருட்சம் வில்வ மரம். இந்த ஆலயத்திற்கு பிரத்தியேகமாகத் தீர்த்தம் கிடையாது என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.
போரூர் - குன்றத்தூர் சாலையில் போரூர் சந்திப்பில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

The heroes of the nine planets that bring good luck..!! - 18

இந்த ஒன்பது ஸ்தலங்களுக்கும் சென்று தரிசனம் செய்து நற்பலன்களை பெறுவோம்..!!