தொடர்கள்
கதை
அதிகாரத்தின் அர்த்தம் - முகில் தினகரன்

20260227065729914.jpg

பண்ணையார் பொன்னுரங்கத்தின் மூத்த மகன் கணேசன். திமிர்தான் அவன் அடையாளமே. தந்தை உட்பட யார் பேச்சையும் மதிக்க மாட்டான்.
பண்ணையில் வேலை பார்க்கும் வயதான பணியாளர்களிடமும்,
“டேய் வேலைக்கார நாயே… அங்கே என்னடா சும்மா நின்னிட்டிருக்கே?!” என்று கடுமையாகப் பேசுவான்.

இளைய மகன் இளங்கோ அதற்கு நேர்மாறானவன். தந்தையிடம் பயமும் மரியாதையும் கொண்டவன்.
“அப்பா சொன்ன வேலையைச் செய்யணும்” என்பதே அவன் நம்பிக்கை. பண்ணையில் மற்ற தொழிலாளர்களுடன் சேர்ந்து வேலை செய்வான். அவர்களோடு சிரித்துப் பேசுவான்.

காலம் நகர்ந்தது…

பொன்னுரங்கம் உடல்நலக் குறைவால் படுக்கையில் விழுந்தார்.
வீட்டில் ஒரே பதட்டம்.

மூத்தவன் கணேசன் மனதில் ஏற்கனவே முடிவு செய்து விட்டான்,
“இனி இந்தப் பண்ணை முழுக்க என்னோட கட்டுப்பாட்டில்தான் வரும்!”

ஆனால், பொன்னுரங்கம் இளங்கோவை அருகில் அழைத்து, "சின்னவனே… இனிமே பண்ணையை நீதான் நிர்வாகம் பண்ணனும்…” என்றார்.

அந்த வார்த்தை கணேசன் உள்ளத்தில் தீ வைத்தது.

“அப்பா! நான் இருக்கும் போது என்னைத் தாண்டி இவனுக்கா நிர்வாகப் பொறுப்பு?” வெடித்தான்.

பொன்னுரங்கம் மெல்லக் கண்களைத் திறந்து அவனை நோக்கினார். "கணேசா… நீ கட்டளையிட மட்டுமே விரும்பினாய். அது தவறில்லை.
ஆனா… கீழ்ப்படிய கற்றுக் கொள்ளவே இல்லை.”

கணேசன் திகைத்தான்.

“தந்தை பேச்சை மதிக்கலை,
வேலைக்காரர்கள் மனதைப் புரியாமல் வார்த்தைகளால் அவர்களைப் புண்படுத்தினாய், உன் கையில் அதிகாரத்தைக் கொடுத்தால் அதை ஆணவமாக்கிடுவாய்… எல்லாத்தையும் அழித்து விடுவாய்"

அங்கிருந்த தொழிலாளர்கள் அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தனர்.

“இந்தப் பண்ணை வெறும் நிலத்தால மட்டும் நிலைக்காது… மனுஷங்களால தான் நிலைக்கும்!.. இளங்கோ பணிவானவன்... அவன் உத்தரவிட மாட்டான்… முன்னோடியாக நடப்பான்...
அதனாலேயே எல்லாரும் அவனுக்குக் கீழ்படிவாங்க.”

கணேசனின் கண்ணில் கோபம் குறைந்து, வேறொரு உணர்வு தோன்றியது.

இளங்கோ அமைதியாக நின்றான்.

அந்த நாள் முதல்…பண்ணையில் கட்டளைகள் குறைந்தன. ஆனால் வேலை துரிதமானது.

கணேசன் மெல்ல மெல்லப் புரிந்துகொண்டான், "கீழ்ப்படிதல் இல்லாத அதிகாரம், கட்டுப்பாடு அல்ல… குழப்பம்.”