தொடர்கள்
கதை
வேட்பாளர் பயிற்சிக் கல்லூரி - கே என் சுவாமிநாதன்

20260227063416244.jpeg

கார்த்திக் அலுவலகத்திற்குப் போன திவாகர் அங்கிருந்த பெயர் பலகையைப் பார்த்து திகைத்தான். அங்கு பல வண்ணக் கரை வேஷ்டிகளுடன் நிறைய நபர்கள் வந்திருந்தனர். கார்த்திக்கை தனியே அழைத்து “என்ன கார்த்திக். இப்ப புது கம்பெனி ஆரம்பிச்சிருக்கியா. என்ன? அது என்ன, பயிற்சிக் கல்லூரி?” என்று கேட்டான். ஆமாம் திவாகர் தேர்தல் வருதில்ல. நாமளும் நாலு காசு பார்க்க வேண்டாமா?” அதுதான் இந்த முயற்சி என்றான். நீ போன தேர்தலுக்கு ஆரம்பித்த “வேட்பாளர் உதவி மையம்” என்ன ஆச்சு என்று கேட்டான் திவாகர்.

“அது பெரிய கதை திவாகர். வேட்பாளர்களுக்கு பேசறதுக்கு எழுதிக் கொடுக்கிறது, வீடு வீடாகப் போய் வோட்டுக் கேட்க உதவிக்கு ஆட்களை கொடுக்கிறது அப்படின்னு ஆரம்பிச்சேன். பொதுக் கூட்டங்களுக்கு ஆட்களை ஏற்பாடு செய்து தரச் சொல்லிக் கேட்டாங்க. அவர்கள் தேவை 100, 200, 300 என்று ஆண்களும், பெண்களும். படிப்பறிவு முக்கியமில்லை. இப்படி போறவங்க கூட்டத்திலே மேடைக்கு முதல்ல சில இடத்தில உக்காந்து இருப்பாங்க. மீட்டிங்கில பங்கேற்க பெரிய தலைங்க வரும் பொழுது வாழ்க, ஒழிக கோஷம் போடறது இவங்க வேலை. இந்தக் கூட்டம் இல்லைன்னா மீட்டிங் நல்லா இருக்காது.

இதில நல்ல பணம். அப்படின்னு ஒத்துக்கிட்டேன். கட்சி பாகுபாடு இல்லாம கேட்டவங்களுக்கு ஆட்களை ஏற்பாடு பண்ணிக் கொடுத்தேன். பணமும் ஒழுங்காக வந்துக்கிட்டிருந்தது. அப்போ எங்க ஆளு பண்ணின சொதப்பல்ல மையத்திற்கு மூடு விழா பண்ண வேண்டி வந்தது.”

“என்னப்பா நடந்தது?” என்று கேட்டான் திவாகர்.

“ஒரே நாளில இரண்டு கட்சிகள் ஆட்கள் வேணும்ன்னு சொன்னாங்க. இரண்டுமே பெரிய கட்சிகள். ஒன்றுக்கு ஒன்று எதிரிக் கட்சிகள். பெரிய கட்சி வாய்ப்பு அப்படின்னு ஒத்துக்கிட்டேன்.”

இரண்டு வண்டி ஏற்பாடு பண்ணியிருந்தேன். வண்டி டிரைவர்கள் இரண்டு பேருக்கும் விலாசம் எழுதிக் கொடுத்த என்னோட ஆளு விலாசத்தை மாத்திக் கொடுத்துட்டான். குழுக்கள் இடம் மாறிச் செல்ல, கோஷமும் மாறிப் போயிடுத்து.

அன்னிக்கு அந்த இரண்டு கூட்டங்களில் நடந்த ரகளை பத்திரிகைகள், தொலைக்காட்சி, வலைதளம் எல்லாத்திலும் வைரலா வந்திச்சு. மேடையிலே ஏறி கூட்டத்திற்கு தலைமை தாங்க வந்திருக்கின்ற தலைவரை ஒழிக சொல்லி, அவரின் எதிர் கட்சித் தலைவரை வாழ்க சொல்லி, கோஷங்கள் எல்லாம் மாறிப்போச்சு. தலைவர்கள் கோபிச்சிக்கிட்டுப் போய்ட்டாங்க. கூட்டம் நடக்கலை. எங்க மையம் மூலமா ஆட்களை ஏற்பாடு செய்ய கட்சிகள் தடை விதிச்சாங்க. எனக்கு வர வேண்டிய பணமும் வரலை. மையத்தை இழுத்து மூடினேன். இந்த வாட்டி ஆளைத் தேடிக் கொடுக்கிற வேலை வேணாம் அப்படின்னு பயிற்சிக் கல்லூரி ஆரம்பிச்சேன்.”

“ஏம்ப்பா, பயிற்சி மையம் அப்படின்னு வைக்கலியா?”

“இல்லப்பா. மையம் நமக்கு போணி ஆகாதுன்னு தோணித்து. அதனால பயிற்சிப் பள்ளின்னு பேர் வைக்கலாம்ன்னு பார்த்தேன். ஒரு கட்சிக்காரர் சொன்னார். தம்பி, பயிற்சிக் கல்லூரின்னு வை. நாங்க கல்லூரியில படிச்சோம்ன்னு கெத்தா சொல்லிக்கிலாம் அப்படின்னார்.”

“என்னப்பா பயிற்சி கொடுக்கிற. மேடையிலே எப்படிப் பேசணும்னா?”

“நீ எந்த ஊர்ல இருக்கே. இப்ப வோட்டுக் கேட்க போகும் போது என்ன வேலையெல்லாம் செய்யணும்ன்னு தெரியுமா உனக்கு. டீக் கடைக்குப் போனா, டீ போடத் தெரியணும். கொத்துப் பரோட்டா பண்ணத்தெரியணும். அதனால எல்லா வேலைக்கும் பயிற்சி கொடுக்கிறேன். துணி துவைக்க, சமைக்க, வீடு பெருக்க, மிக்ஸி, க்ரைண்டர் அரைக்க, தோசை சுட, டீ, காபி போட எல்லாம் சொல்லித் தேரேன்.”

“ஏம்ப்பா இவங்க ஜெயிச்சா சட்டசபைக்குப் போவாங்க. அப்புறம் எதுக்கு இதெல்லாம் செய்யணும்.”

“புரியாத ஆளா இருக்கேப்பா நீ. வோட்டுக் கேட்க வரும் போது கூடவே பத்திரிகை, தொலை காட்சி, ஊடகம் எல்லாம் வருது. இவங்க பண்றதை படம் பிடிச்சுப் போடறாங்க. பேப்பர், தொலைக்காட்சி, வலைதளம் எல்லாத்திலேயும் வருது. தேர்தல்ல நிக்கிறவர்க்கு இது நல்ல விளம்பரம் இல்லையா?”

“சரி, இந்த வாட்டியானும் பணத்தில ஏமாறாம பார்த்துக்க” என்றான் திவாகர்.

“பயிற்சிக்குப் பணம், பயிற்சி எடுத்துக்கும் போது எதாவது கெட்டுப் போனா அதுக்கு அபராதம் அப்படின்னு பணத்தை முழுசா வாங்கிட்டுத்தான் பயிற்சி கொடுப்போம்” என்றான் கார்த்திக்.