
துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
16ம் நூற்றாண்டா அல்லது 19ம் நூற்றாண்டா தெரியவில்லை. நமக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து முருகன் மீது பாடப்பட்டு வரும் பல பதிகங்களில் மிகப் பிரபலமானது கந்த சஷ்டி கவசம்.
பால தேவராயர், தீரா நோயுற்றிருந்தார். நோய் என்றால் கடும் நோய் எந்த மருந்துக்கும் அடங்கா கொடும் நோய், மருந்தில்லா நோய்க்கு மரணமே தீர்வென கிளம்பினார் தேவராயர்.
கடைசியாக திருச்செந்தூர் முருகனிடம் வேண்டிவிட்டு சாகலாம் என முடிவெடுத்து ஆலயம் சென்றவருக்கு, முருகபெருமான் காட்சிஅளித்து ஒரு பதிகம் இயற்றுமாறும், அது அவர் நோயினை மட்டுமல்ல... உலக நோயினை எல்லாம் நீக்கும் பாடல் என்றும், யாரெல்லாம் படிக்கின்றார்களோ அவர்கள் நோயும் அவர்கள் வேண்டுவோரின் நோயும் தீரும் என சொல்கின்றான்.
ஆம். அந்த கோவிலில் அந்நேரம் பால தேவராயர் மட்டுமல்ல, இன்னும் ஏகப்பட்ட நோயாளிகள் இருந்தனர்.
தேவராயருக்கு வயிற்றில் வலி, மற்ற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய். தலையில் கட்டி, கன்னத்தில் புற்று, கழுத்தில் கழலை, நெஞ்சு கூடும் ஒரு எலும்புருக்கி நோய், வயிற்றுவலி, மூலம், தொடையில் புண், கணுக்கால் வலி, என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய்.
இது போல பேய் , பில்லி சூன்யம் என பாதிக்கபட்டு வந்திருக்கும் கூட்டம் ஒன்று, சித்தபிரம்மை பிடித்த கூட்டம் ஒன்று.
வறுமை கூடிய கூட்டமொன்று, இன்னும் நோய் பிணி வறுமையில் வாடி நிற்கும் பெரும் கூட்டமொன்று.
அந்த மொத்த மக்களின் குரலாக முருகனிடம் எல்லா பிணிகளுக்கும், நோய்க்கும் பேய்க்குமாக அந்த முருகன் சொன்னபடி பொதுநலத்தோடு பாடினார் அந்த மனிதர், அவருக்கு வந்தது வெறும் வயிற்றுவலி... ஆனால், அவர் எல்லாருக்காகவும் பாடினார், எல்லோரும் பிணி தீர பாடினார்.
அவர்கள் எல்லோரையும் கவனிக்கும் அந்த நல்லவரான பால தேவராயர், எல்லா பக்தரையும் முருகன் எக்காலமும் காக்கும்படி பாடினார்.
அழுகையும், கதறலும் மிக்க அந்தக் கூட்டத்தின் சார்பாக பாட வந்தார் தேவராயன்.
அந்த சன்முகன் சந்நிதியில் இருந்து பாடத் தொடங்குகின்றார் பால தேவராயர், அவர் பாடி முடிக்கவும் அவரின் கொடும் நோய் அகன்றது, அந்த மகிழ்ச்சியில் அறுபடை வீடெல்லாம் சென்று அந்த பாடலை தொகுத்து முடிக்கின்றார். அதுதான் கந்த சஷ்டி கவசம்.
சஷ்டி என்றால் ஆறு, கவசம் என்றால் பாதுகாப்பு.
நோய், பில்லி சூன்யம், வறுமை, வம்ச விருத்தி சிக்கல், மனநலம், தீரா கவலை உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து கந்தன் மக்களை காக்கும் பாடலாக அது கொள்ளப்பட்டது.
அக்காலத்தில் நோய்கள் பரவும் காலத்தில் இல்லம் தோறும், ஆலயம் தோறும் அதை பாடுவார்களாம், ஆம் அப்படியும் ஒரு காலம் இருந்தது குறிப்பில் இருக்கின்றது.
ஆழந்த அர்த்தம்மிக்க பாடல் அது, ஒவ்வொரு வரியாக பாருங்கள் ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் காத்தருள ஒப்புவிக்கும் பாடல் அது.
உடலைக் காக்க அணிவது கவசம். இந்த நூலும் உடலைக் காக்க இறையருளை வேண்டுவதால் இந்த நூலுக்கும் கவசம் என்ற பெயர் வந்தது.
இந்தக் கட்டுரையின் நோக்கம் சஷ்டி கவசத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்பதை தெளிவு படுத்திக் கொள்ளும் முயற்சி தான்.
இந்த நூலின் பெயரான கவசம் என்பது எப்படி வந்தது எனில் அதற்கேற்ற பாடல் வரிகள் இவை. உடலின் ஒவ்வொரு உறுப்பினையும் காக்கும்படி வேண்டும் வரிகள்.
வலைதளத்திலேயே இதற்கு பொருள் கொட்டிக் கிடக்கிறது.
சஷ்டி கவசத்தில் நடுவில் வரும் காக்க காக்க பாடல் வரிகளில் முக்கியமானவை என்னென்ன.....
என்றனை ஆளும் ஏரகச் செல்வ!
என்னை ஆளும் திருவேரகத்தின் தலைவனே!
மைந்தன் வேண்டும் வரம் மகிழ்ந்துதவும்
உன் குழந்தையான நான் வேண்டும் வரங்களை எல்லாம் மகிழ்ச்சியுடன் தந்தருள்கின்றாய்!
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதன் என்று
லாலா லாலா லாலா என்ற பெரும் ஒலியுடன் அருள்கொண்டு ஆடுபவர்களின் மேல் இறங்கும் ஆவேசமும், உனக்கும் உன் அடியார்களுக்கும் மகிழ்வினை உண்டாக்கும் வினோதமான திருவிளையாடல்களும் உடையவன் என்று உன்னைப் போற்றி
உன் திருவடியை உறுதி என்று எண்ணும்
என் தலை வைத்து உன் இணையடி காக்க!
உனது திருவடிகளே நிலையான செல்வம் என்று எண்ணும் எனது தலையின் மீது உன் இணையான திருவடிகளை வைத்து என் தலையை காக்க வேண்டும்!
என் உயிர்க்கு உயிராம் இறைவன் காக்க!
பன்னிரு விழியால் பாலனைக் காக்க!
என் உயிருக்கு உயிராக உள்ள இறைவனே என்னை காக்க வேண்டும்! உனது பன்னிரு விழிகளால் உனது குழந்தையான என்னைக் காக்க வேண்டும்!
அடியேன் வதனம் அழகுவேல் காக்க!
அடியவனின் முகத்தை அழகுவேல் காக்கட்டும்!
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க!
திருநீற்றுப்பொடியினை அணிந்த என் நெற்றியை புனிதவேல் காக்கட்டும்!
கதிர்வேல் இரண்டு கண்ணினைக் காக்க!
எனது இரண்டு கண்களையும் கதிர்வேல் காக்கட்டும்!
விதி செவி இரண்டும் வேலவர் காக்க!
பிரமனால் படைக்கப்பட்ட எனது இரண்டு செவிகளையும் வேலவர் காக்கட்டும்!
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க!
என் மூக்குத் துளைகள் இரண்டையும் நல்வேல் காக்கட்டும்!
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க!
பேசும் எனது வாயைப் பெருவேல் காக்கட்டும்!
முப்பத்திரு பல் முனைவேல் காக்க!
எனது முப்பத்திரண்டு பற்களையும் முனைவேல் காக்கட்டும்!
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க!
சொற்களைச் செப்பும் எனது நாவைச் செவ்வேல் காக்கட்டும்!
கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க!
எனது இரு கன்னக்கதுப்புகளையும் கதிர்வேல் காக்கட்டும்!
என் இளங்கழுத்தை இனியவேல் காக்க!
என் இளமையான கழுத்தை இனியவேல் காக்கட்டும்!
மார்பை இரத்ன வடிவேல் காக்க!
என் நடுமார்பை இரத்ன வடிவேல் காக்கட்டும்!
சேர் இளமுலை மார் திருவேல் காக்க!
இரண்டு பக்கங்களிலும் இணையாகச் சேர்ந்திருக்கும் பக்கமார்புகளை திருவேல் காக்கட்டும்!
வடிவேல் இருதோள் வளம் பெறக் காக்க!
எனது இரண்டு தோள்களும் வளமுடன் இருக்குபடி வடிவேல் காக்கட்டும்!
பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க!
என் பிடரிகள் இரண்டையும் பெருவேல் காக்கட்டும்!
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!
என் முதுகு அழகுடன் இருக்கும்படி அருள்வேல் காக்கட்டும்!
பழு பதினாறும் பருவேல் காக்க!
என் பதினாறு விலா எலும்புகளையும் பருவேல் காக்கட்டும்!
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!
என் வயிறு நோயின்றி விளங்க வெற்றிவேல் காக்கட்டும்!
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க!
எனது சிறிய இடை அழகு பெறும்படி செவ்வேல் காக்கட்டும்!
நாணாங்கயிற்றை நல்வேல் காக்க!
என் இடுப்பில் அணியும் அரைஞான் கயிற்றை நல்வேல் காக்கட்டும்!
ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க!
ஆண்குறிகள் இரண்டையும் அயில்வேல் காக்கட்டும்!
பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க!
இரண்டு பிட்டங்களையும் பெருவேல் காக்கட்டும்!
வட்டக் குதத்தை வல்வேல் காக்க!
வட்டவடிவான குதத்தை வல்வேல் காக்கட்டும்!
பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க!
வலிமையான தொடைகள் இரண்டையும் பருவேல் காக்கட்டும்!
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க!
எனது கணைக்கால்களையும் முழந்தாள்களையும் கதிர்வேல் காக்கட்டும்!
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க!
ஐந்து விரல்களுடன் கூடிய என் பாதங்களை அருள்வேல் காக்கட்டும்!
கைகள் இரண்டும் கருணைவேல் காக்க!
இரண்டு கைகளையும் கருணைவேல் காக்கட்டும்!
முன்கை இரண்டும் முரண்வேல் காக்க!
இரண்டு முன்கைகளையும் முரண்வேல் காக்கட்டும்!
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க!
இரண்டு பின்கைகளையும் பின்னவளான திருமகள் இருந்து காக்கட்டும்!
நாவில் சரஸ்வதி நற்றுணையாக!
எனது நாவில் சரஸ்வதி அமர்ந்து நல்ல துணை ஆகட்டும்!
நாபிக் கமலம் நல்வேல் காக்க!
தாமரை போல் வடிவுடைய என் தொப்புளை நல்வேல் காக்கட்டும்!
முப்பால் நாடியை முனைவேல் காக்க!
மூன்று பிரிவாகச் செல்லும் என் உடலிலுள்ள நாடிகளை முனைவேல் காக்கட்டும்!
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க!
என்னை எப்பொழுதும் எதிர்வேல் காக்கட்டும்!”
இப்படியே ஒவ்வொரு உறுப்பையும் காப்பதற்கு ஒரு தனி குணத்தை சிறப்பாக வைத்து, அந்த குணத்தை உடைய வேல் அந்த உறுப்பைக் காக்க வேண்டும் என்று வேண்டுகிறார் அடிகளார்.”
கடவுளைக் கும்பிடும் பாடலில் எதற்கு அசிங்கமாக ஒவ்வொரு உறுப்பையும் குறித்து பாட வேண்டும். அது பார்வையாளர்களின் மனதைப் பொறுத்தது.
ஒரே ஒரு நாள் கழிவுகள் வெளியேறாமல் இருந்தால் அதன் பாதிப்பு உடனடியாகவே தெரிய வரும்.
அனுவின்றி ஓரணுவும் அசையாது என்பது ஆன்மீக வாதிகளின் வாதம். ஒன்னுக்கு போறதும் கொல்லைக்கு போறதும் எதற்காக இறைவனிடம் வேண்ட வேண்டும், பால் தரும் மார்பகங்களை காக்க எதற்கு ஆண்டவனிடம் வேண்ட வேண்டும் இதையெல்லாம் ஏன் சொல்ல வேண்டும் என்று கேட்பது அறிவீனம்.
ஒரு முறை டயாலிசிஸ் செய்யும் இடத்திலோ, அல்லது மலச்சிக்கல் பிரச்சினை இருப்பவர்களிடமோ பேசிப் பார்த்தால் புரியும். குழந்தை பிறந்து பால் சுரக்காத தாய்மார்களிடம் கேட்க வேண்டும் இந்த பிரச்சினைகளை
.
கண்கள் எவ்வளவு முக்கியமோ (அது இல்லாதவர்களுக்குத் தான் தெரியும் அதன் முக்கியத்துவம்) அப்படித் தான் ஒவ்வொரு உறுப்பும் முக்கியம்.
மத நம்பிக்கைகள், வழிபாடுகள் ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட உரிமை. அது எந்த மதமாக இருந்தாலும் சரி. அது தான் மதச்சார்பின்மை.
ஒரேயொரு மதத்தை சீண்டிப் பார்த்து விட்டு மற்ற மதங்களுக்கெல்லாம் நாங்கள் காவலாளிகள் என்பது எந்த மதத்தினருமே ஏற்றுக் கொள்ளக் கூடாத மதச்சார்பின்மை.
அதர்மம் எங்கெங்கு தலையெடுக்கிறதோ அங்கெல்லாம் வேல் பாயும் என்பது முருக பக்தர்களின் நம்பிக்கை.
ஒம் சரவண பவா!!!

Leave a comment
Upload