தொடர்கள்
Daily Articles
வந்தார்கள்... வென்றார்கள்! - மதன்

- 4 -

முகமது கஜினி..


சோமநாதர் கோயிலும் முகமது கஜினியும்...

20200812041116843.jpeg


முகமது கோரியைக்கூட நாம் ஏற்றுக்கொள்ளலாம். வில்லனாக வந்தாலும் இந்தியாவைத் தன் சாம்ராஜ்யத்தின்கீழ் கொண்டுவர வேண்டும் என்ற அரசர்களுக்கே உரிய நியாயமான ஆசை அவனுக்கு இருந்தது. ஆனால், அவனுக்குமுன் இந்தியாவுக்கு வந்த முகமது கஜினியின் கதை வேறு. கோரியோடு ஒப்பிட்டால் கஜினி அதீத வெறிபிடித்த ஒரு சூப்பர் வில்லனாகவே வரலாற்றில் காட்சி தருகிறான்.

இங்கே பரீட்சையில் பல முறை தோல்வியடையும் மாணவரை கஜினி முகமதுவுடன் நாம் தமாஷாக ஒப்பிடுகிறோம். உண்மையில் கஜினி தொடர்ந்து தோல்வியடைந்ததால் மறுபடி மறுபடி இந்தியாவுக்கு வரவில்லை. அநேகமாக அவனுடைய பதினேழு படையெடுப்புகளுமே வெற்றிதான்!

ஆப்கானிஸ்தானில் காபூலுக்குத் தெற்கே உள்ள நகரம் கஜினி. கி.பி.977-ல் மத்திய ஆசியாவைச் சேர்ந்த ஒரு துருக்கியப் பிரபு (ஆரம்பத்தில் அவர் ஒரு துருக்கிய அடிமையாக இருந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள்) கஜினியைத் தலைநகராக்கி செல்வாக்குடன் ஆட்சிபுரிந்தார். அவருடைய மகன்தான் கஜினி முகமது. கி.பி.998-ல் தந்தை இறந்தபிறகு அரியணையில் கஜினி முகமது அமர்ந்தபோது அவனுக்கு வயது இருபத்தேழு.

இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிறந்த புதிய நூற்றாண்டு தங்களைப் பொறுத்தவரை பெரும் தலைவலியோடு ஆரம்பிக்கப் போகிறது என்பதை வட இந்தியாவை ஆண்ட மன்னர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கி.பி.1000-ல் ஆரம்பித்தது இந்தியாவை நோக்கி கஜினியின் முதல் படையெடுப்பு.

ஏன் அப்போது எல்லோருக்குமே முதல் இலக்கு இந்தியா? - காரணம் உண்டு...

மத்திய ஆசியாவிலும் சரி, ஆப்கானிஸ்தானிலும் சரி, அரேபியாவிலும் சரி - மன்னர்கள் மகுடம் சூட்டிக்கொண்டதும் அவர்கள் கேட்டு மலைத்த கதைகள் இந்தியாவைப் பற்றித்தான். இந்திய மண்ணில் விண்ணை முட்டும் கோயில்கள், கட்டி முடிக்கப்பட்ட மாட மாளிகைகள், கொட்டிக் கிடக்கும் ஆபரணங்கள் - இவை பற்றிப் பலர் விளக்கமாக விவரிக்க, வெறிச்சோடிய பாலைவனத்தையும் கரடுமுரடான மலைத் தொடர்களையும் சூழ்நிலையாகக் கொண்டு ஆட்சி புரிந்த அம்மன்னர்கள் கண்களில் ஆர்வம் பொங்கியெழுந்ததில் ஆச்சரியமில்லை!

மாபெரும் குதிரைப் படையோடு காலதாமதம் செய்யாமல் கைபர் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தான் கஜினி முகமது. சிந்து நதியைக் கடந்து பஞ்சாப் பீடபூமியில் அவன் படை புகுந்த போது அதை மடக்கி நின்று எதிர்கொண்டது பஞ்சாப் மன்னன் ஜெயபாலனின் படை.

ஜெயபாலன் பிராமண குலத்தைச் சேர்ந்த மன்னன்! ஒன்பதாம் நூற்றாண்டில் காபூல் சமவெளியையும் காந்தாரத்தையும் ஆண்ட ஷாகியா மன்னர் ஒருவரிடம் இந்த ஜெயபாலனின் கொள்ளுத் தாத்தா (அல்லது எள்ளு?) அமைச்சராக இருந்தார். அமைச்சராக இருந்ததோடு அமைதியாக உட்காராத அவர், அரசையும் கைப்பற்றினார். அவரது வழிவந்தவர்கள் பிற்பாடு ஆப்கானிய, அரபுப்படைகளின் அதிரடித் தாக்குதல்களைத் தாங்காமல் பஞ்சாப் மாநிலத்துக்கு ஆட்சியை நகர்த்திக் கொண்டார்கள். பஞ்சாபில் உறுதியாக ஆட்சி செய்ய அமர்ந்தவுடன், எடுத்த எடுப்பிலேயே முகமது கஜினியின் அதிரடிப்படையோடு மோத நேர்ந்தது மன்னன் ஜெயபாலனின் போதாத காலமே!

அசுரத்தனமும் அதிபுத்திசாலித்தனமும் கலந்து போரிட்ட ஆப்கான் படையிடம் ஜெயபாலன் வீரர்களின் வீரம் ௭டுபடவில்லை. முதல்போரிலேயே பெரும் வெற்றி அடைந்தது கஜினியின் படை. வெற்றியைத் தொடர்ந்து வெறியாட்டத்தில் இறங்கினார்கள் ஆப்கான் படையினர். பஞ்சாப் பூமியில் அவர்கள் கொள்ளையடித்த செல்வத்தை அள்ளிக் கொண்டு ஒட்டகங்கள் மீது ஏற்றி வைப்பதில் ஆயிரமாயிரம் ஆப்கான் வீரர்கள் பல மணி நேரம் செலவிட்டார்கள். வந்த வேகத்தில் ஊர் திரும்பினார்கள். ஒவ்வொரு முறையும் இதே கதை... இதே கொள்ளை, கொலைகள்... பிறகு ஊர் திரும்பல்!

கஜினி முகமதுவுக்கு இந்தியா மிகவும் பிடித்துப் போய்விட்டது. கி.பி.1000-ல் ஆரம்பித்து அநேகமாக ஆண்டுக்கொருமுறை இந்தியாவின்மீது படையெடுப்பதை ஒரு பிரத்யேக திருவிழாவாகக் கொண்டாடினான் கஜினி. ஒரு ஓநாயின் வாயில் சிக்கிக் குதறப்பட்ட மான் குட்டிகளைப் போல செளராஷ்டிரம், கன்னோசி, மதுரா, தானேஸ்வர் என்று ஒவ்வொன்றாக கஜினி படையின் வாள் வீச்சில் ரத்தம் பூசிக் கொண்டது. இந்தியாவில் முல்தான் பிரதேசத்தை ஆண்ட சுல்தான் தாவூத் என்னும் இஸ்மாயிலி பிரிவைச் சேர்ந்த சுல்தானையும் கஜினி விட்டு வைக்கவில்லை. கொள்ளை என்று இறங்கிய பிறகு எதிரி எவனாக இருந்தால் என்ன? - தாவூதை வெட்டிச் சாய்த்து முல்தான் தலைநகரைத் தரைமட்டமாக்கினான் முகமது கஜினி.

கஜினிக்கு இன்னொரு விசித்திரமான, கொடூரமான பழக்கம் இருந்தது. அவன் வெற்றிகொண்ட மன்னர்களின் கைவிரல்கள் அத்தனையையும் வெட்டி எடுத்துக்கொண்டு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இப்படி அவன் ஏதோ தபால் தலைகளைப் போலச் சேகரித்த விரல்கள் ஆயிரக்கணக்கில்!

இந்தியாவில் ஒவ்வொரு முறை புகுந்து வெற்றிக்கொடி நாட்டிய மறுகணம் ஆப்கான் படை குறி வைத்துக் குதூகலத்துடன் கிளம்பியது இந்துக்களின் கோயில்களை நோக்கித்தான். “மாதக்கணக்கில் நம் வர்கள் அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டிய செல்வம் அனைத்தையும் ஒரே பாய்ச்சலில் அள்ளிக்கொண்டு வரவேண்டுமா? அரண்மனைகள்கூட அவசரமில்லை. நேரத்தை வீணாக்காமல் முதலில் கோயில்களின் பக்கம் நம் படையைத் திருப்புங்கள். அங்கு நம்மை வழிமறிக்க அகழிகள், அரண், ஆட்படை எதையும் இந்தியர்கள் வைத்திருப்பதில்லை” என்று முன்கூட்டியே கஜினிக்கு இந்தியாவைப் பற்றி ஒற்றர்கள் விவரித்திருந்தர்கள்...

20200812041227659.jpeg

குறிப்பாக சோமநாதர் கோயிலுக்கு நேர்ந்த அனுபவம் - ஓர் உச்சக்கட்ட பயங்கரம்!

டிசம்பர் 1025 - பதினேழாவது முறையாக, புழுதி பறக்க ராஜஸ்தான் பாலைவனத்தைப் புயலாகக் கடந்து குஜராத்தின் தென்கோடியில் உள்ள சோமநாத் ஊருக்குள் அலையென கஜினியின் படை புகுந்தது. அங்கு கடற்கரையோரம் இருந்த, சோமநாதர் என்று வழிபடப்பட்ட சிவன் கோயில் - நாடெங்கும் புகழ்பெற்றது. கர்ப்பக்கிருகத்தில் காட்சி தந்த சிவலிங்கத்தை, கோயில் கட்டிய வல்லுநர்கள் அந்தரத்தில் மிதக்கும்படி அமைந்திருந்தது ஓர் அதிசயம்! சோமநாதர் ஆலயச் சொத்தில் பத்தாயிரம் கிராமங்கள் அடக்கம் என்றால் கோயிலில் கொழித்த செல்வச்செழிப்பைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம். இதுதவிர, மன்னர்களும் செல்வந்தர்களும் பக்தர்களும் காணிக்கையாக அளித்த செல்வம் ஒரு சிறுமலையாகக் குவிந்திருந்தது. கூடவே, அரசர்கள் காணிக்கையாகச் செலுத்திய நூற்றுக்கணக்கான தங்க விக்கிரகங்கள்... அவற்றை அலங்கரிக்க வைரங்கள், வைடூரியங்கள், முத்துக்கள் பதித்த அற்புதமான ஆபரணங்கள்... இன்னொருபுறம் கோயில் கஜானாவில் பெருமலையாக நிரம்பி வழிந்த பொற்காசுகள்..!

ஒவ்வொரு சூரிய கிரகணத்தன்றும் ஒரு லட்சத்துக்கு மேல் இந்துக்கள் கடலில் நீராடி சோமநாதர் கோயில் முன் பக்திப்பரவசத்துடன் கூடுவது வழக்கம். சோமநாதர் கோயிலில் பூஜைகள் நடத்த நியமிக்கப்பட்டிருந்த அர்ச்சகர்கள் மட்டுமே ஆயிரம் பேர். பூஜைக் காலங்களில் ஆலயத்தில் நடனமாட ஐந்நூறு அழகிய நாட்டிய மணிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். பாடகர்கள் ஐந்நூறு பேர். ஆலயத்துக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முடியைக் காணிக்கையாகச் செலுத்துவதும் வழக்கத்திலிருந்தது. அதற்காக நியமிக்கப்பட்ட நாவிதர்கள் முந்நூறு பேர்!

அவ்வளவு ஏன்? “ஒவ்வொரு நாளும் இருமுறை கடலிலிருந்து ஒரு பெரும் அலை கிளம்பி முன்னேறி சற்றே தொலைவிலிருந்த சோமநாதர் ஆலயப் படிக்கட்டுகளைத் தொட்டு வணங்கித் திரும்பும்” என்று ஊர்மக்களால் வியந்து பேசப்பட்ட திருத்தலம் அது!

தொலைவிலிருந்தே ஜொலித்துக்கொண்டிருந்த புகழ்வாய்ந்த இந்த ஆலயத்தைத் தன் படையின் முன்னணியில் குதிரை மீது அமர்ந்து பார்வையிட்ட முகமது கஜினியின் கண்களில் ஆர்வமும் அவசரமும் கொப்பளித்தன. “இதுதான் அந்தப் பணக்காரக் கோயிலா?” என்று முணுமுணுத்த அவனது இதயத் துடிப்பு உற்சாகத்துடன் அதிகரித்தது. “முன்னேறுங்கள்!” என்று ஆணையிட்டான் கஜினி. ஏந்திய ஈட்டிகளுடனும் அகலமான வாட்களுடனும் பாய்ந்தது ஆப்கான் படை. சோமநாதர் கோயில் தனக்கு ஒரு ‘திறந்த வீடாக’ இருக்கும் என்றே நினைத்தான் கஜினி. இப்படி வழிமறித்து எதிர்ப்பார்கள் என்று அவன் கனவிலும் நினைத்திருக்க மாட்டான். ஓட்டமெடுப்பதற்குப் பதில் பல்லாயிரக்கணக்கில் ஊர் மக்கள், கோயிலில் பணிபுரிபவர்கள், அர்ச்சகர்கள் திரண்டெழுந்து கூவிக்கொண்டும் அழுதுகொண்டும் கதறிக் கொண்டும் ஓடி வந்தார்கள். கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்துக் கொண்டு கஜினியின் படையை எதிர்த்து நின்றார்கள். சுல்தானின் கண்கள் சிவந்தன “தடுப்பவர்களின் தலைகளைத் தரையில் உருளச் செய்யுங்கள்” என்று கர்ஜித்தான் கஜினி. ஆப்கான் படை வீரர்களின் ஆயிரக்கணக்கான வாட்கள் சுழலத் தொடங்கின. வெட்டித் தள்ளத் தள்ள மேலும் மேலும் மக்கள் முன்னேறி வந்து வழிமறித்தார்கள்.

அன்று சோமநாதர் ஆலயத்தின் வெளியே துண்டாடப்பட்டு, உயிரற்று வீழ்ந்து கிடந்த ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் உடல்களை, பதறி வந்த கடல் அலைகள் குளிப்பாட்டிச் சிவந்தன. இத்தனை வெறியாட்டத்துக்குப் பிறகு வெற்றிகரமாக ஆலயத்துக்குள் நுழைந்த கஜினி முகமது, ரத்தமயமான அந்தச் சூழ்நிலையிலும் கோயிலின். செல்வச் செழிப்பைக் கண்டு பிரமித்துப்போனான். உன்மத்தம் அடைந்தவர்களைப் போல விக்கிரகம், ஆபரணம் என்று ஒன்று விடாமல் அள்ளி மூட்டை கட்டினார்கள் சுல்தான் வீரர்கள். கர்ப்பக்கிருகத்தில் ஒளிவீசிக்கொண்டு அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த சிவலிங்கத்தின் மீது கஜினியின் பார்வை திரும்ப… மேலும் பிரமித்தான்! உடனே ஆச்சரியத்துடன் பக்கத்திலிருந்த படை வீரனின் ஈட்டியை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான். ஈட்டியை சிவலிங்கத்தைச் சுற்றி நாலாபுறமும் சுழற்றிப் பார்த்தான். கஜினியின் கண்களில் இருந்த வியப்பு மெள்ள அகன்றது. வெறி புகுந்தது. “பலே! சாமர்த்தியமாகத்தான் அமைத்திருக்கிறார்கள்! மேலே கூரையிலும் பக்கவாட்டிலும் உள்ள அந்தக் கற்களை அகற்றித் தள்ளுங்கள்... இது ஏதோ காந்த சக்தியின் வேலை!” என்று கஜினி ஆணையிட, வீரர்கள் உடனே செயல்பட்டனர். சுற்றிலும் கற்கள் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டன. சிவலிங்கம் மெள்ள அசைந்தது. பிறகு கீழே இறங்கி இறங்கி... “தொப்’பென்று வீழ்ந்தது. தன் இரு கைகளாலும் அலாக்காக அந்த சிவலிங்கத்தைக் தூக்கி வந்து கோயிலின்முன் போட்டு உடைத்தான் முகமது கஜினி. படை வீரர்கள் ‘ஹோ’வென்று ஆரவாரிக்க வானமும் சிவந்தது..!

சோமநாதர் கோயிலில் நடந்தேறிய இத்தனை கொடூரத்தையும் விவரமாக, சற்று வருத்தத்துடன் எழுதியிருப்பவர் அல் காஸ்வினி எனும் அரபு நாட்டுச் சரித்திர ஆராய்ச்சியாளர்.

காரியம் முடிந்த பின் கடைசி முறையாக இந்தியாவை ஒரு நிறைவான பெருமூச்சுடன் திரும்பிப் பார்த்துவிட்டு நாடு திரும்பினான் முகமது கஜினி. சோமநாதர் கோயிலிலிருந்து அவன் கொண்டுபோன தங்கம் மட்டுமே ஆறு டன் எடைக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது!

அல் காஸ்வினி என்றில்லை... பல முஸ்லிம் சரித்திரப் பேராசிரியர்கள் கஜினி முகமது பற்றிக் குறிப்பிடும்போது ‘அவன் தேவையில்லாமல் வெறியாட்டம் ஆடியதாகவே’ வருந்திக் குறிப்பிடுகிறார்கள். இத்தனைக்கும் சாம்ராஜ்யம் நிறுவும் எண்ணம் எதுவும் கஜினிக்கு இருந்ததாகத் தெரியவில்லை. ஆகவே, அவன் நிகழ்த்திய கொடுமையை நியாயப்படுத்தக்கூடிய வாதங்களை யாரும் எடுத்து வைக்க முன்வரவில்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால், முகமது கஜினியை கொலைவெறி பிடித்த ஒரு கொள்ளைக்காரனாகத்தான் நாம் கொள்ள முடியும். இதில் மாறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை.

ஆனால் ஒன்று... கொள்ளையடித்த பெரும் செல்வத்தைக் கொண்டு தன் சொந்த ஊரான கஜினியைச் சிறந்த நகரமாக உருவாக்கச் செலவழித்தான். அருமையானதொரு லைப்ரரியும் மியூஸியமும் மக்களுக்காகக் கட்டித் தந்தான். அவன் அரண்மனையில் கவிஞர்களும் பாடகர்களும் ஓவியர்களும் கூடி, தங்கள் கலைத்திறனை சுல்தான்முன் காட்டி அவனை மகிழ்வித்தார்கள். பிர்தெளஸி, அல்பெரூனி போன்ற புகழ்வாய்ந்த சரித்திர ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்களை அவன் அன்புடன் தன்னோடு வைத்துக்கொண்டிருந்தான். அவர்களும் பெரும் செல்வாக்குடனும் சகல வசதிகளுடனும் வாழ்ந்தார்கள். ஆம்... கஜினிக்கும் ஒரு மறுபக்கம் இருக்கத்தான் செய்தது!

வடமேற்கில் தொடர்ந்து கஜினி முகமது படையெடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் ஒரு மாவீரன் இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து ஒரு பெரும் படையுடன் கிளம்பி வடக்கு நோக்கி வந்து சேர்ந்தான். அவனுடைய வீரர்களை யாராலும் எதிர்த்து நிற்க முடியவில்லை. இன்றைய ஹைதராபாத், ஒரிஸ்ஸா, வங்காளம்... எல்லா நாடுகளும் அந்த மன்னன் வீரத்தின்முன் மண்டியிட்டன. கங்கைநதி நீரைக் குடங்களில் நிரப்பி, தான் வெற்றி கண்ட மன்னர்களின் தலை மீது வைத்துத் தன் ஊருக்குத் திரும்பினான் அந்த மன்னன். அந்த மாவீரன்தான் தமிழகத்தை ஆண்ட ராஜேந்திர சோழன்!
இந்தியாவின் வடமேற்கே கஜினி படையெடுத்து வந்திருக்கும் விஷயத்தை நிச்சயம் ஒற்றர்கள் ராஜேந்திர சோழனிடம் சொல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், ராஜேந்திர சோழனின் விருப்பம் கப்பற்படையுடன் சென்று மலேயா, சுமத்திராவைக் கைப்பற்ற வேண்டும் என்பதாக இருந்தது.

தென்னாட்டிலிருந்து வந்திருக்கும் ஒரு மாமன்னன் கங்கை வரை வந்து வெற்றிக்கொடி நாட்டிய விஷயம் முகமது கஜினிக்கும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். ‘சிந்து நதியைக் கடந்தது போதாதா? கங்கையை வேறு கடந்து, படை பலம் தெரியாமல் யாரோ ஒரு தென்னாட்டு மன்னனுடன் யார் மோதிக் கொண்டிருப்பது? எதற்கு வீண்வம்பு?’ என்று தன் கவனத்தை வடமேற்குப் பகுதிகளிலேயே கஜினி செலுத்தியிருக்க வேண்டும். கஜினி முகமது, ராஜேந்திர சோழன் - இருவரும் போர்க்களத்தில் நேருக்குநேர் சந்திக்காமலேயே திரும்பினார்கள் என்கிறது வரலாறு!

ஆப்கானிஸ்தான் திரும்பிய கஜினி முகமது, ஒரு விஷக் காய்ச்சலில் படுத்து 1030-ல் இறந்துபோன செய்தி கேட்ட வடஇந்தியா நிம்மதிப் பெருமூச்சு விட்டது என்றே கூறலாம்!

கஜினி, பிறகு கோரி முகமது, பிறகு தைமூர்... இப்படித் தொடர்ந்து இந்தியாவுக்குள் வேற்று நாட்டவர்கள் படையுடன் புகுந்தும் - இந்தியக் குறுநில மன்னர்கள் ஒன்றுசேர்ந்து எந்த ஒரு தற்காப்பு நடவடிக்கையையும் எடுக்காதது ஒரு பரிதாபகரமான உண்மை. ‘ஒன்றுபட்டால்தான் உண்டு வாழ்வு’ என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள் இந்த ராஜபுத்திர மன்னர்கள். தவிர, மறதி என்கிற வியாதியும் அவர்களைப் பீடித்திருந்தது. ஒவ்வொரு முறை அந்நியப் படை வரும்போதும் விழித்துக்கொண்டு அவசரகதியில் அரைகுறையாக ஒருங்கிணைவதும் படையெடுப்பு முடிந்தவுடன் எல்லாமே மறந்து விடுவதும் - பிறகு பழையபடி கச்சிதமாகப் பிரிந்து, உள்ளூர் சண்டையில் இறங்குவதும் அவர்களுக்கு வழக்கமாகி போனது. (பிருத்விராஜ் - ஜெயச்சந்திரன் ஒரு உதாரணம்!).

இந்தியர்களின் தொடர்ந்த தோல்விக்கு மேலும் சில காரணங்கள்...

அந்நியப்படை இந்தியாவுக்குள் நுழைய வழி - கைபர் கணவாய் அல்லது கோமால் கணவாயாக இருந்தது. சீனர்களைப் போல 1500 மைல் நீள நெடுஞ்சுவர்கூடத் தேவையில்லை - இந்த இரண்டு கணவாய்களைக் காக்க சிறு கோட்டைகளைக்கூட எழுப்பவில்லை இந்திய மன்னர்கள். ‘உங்களைக் காக்க நான் ஏன் கோட்டை எழுப்ப வேண்டும்?’ என்கிற ரீதியில் காழ்ப்பு உணர்ச்சியும் விதண்டாவாதமும் அன்று மலிந்திருந்ததுதான் காரணம். இத்தனைக்கும் வடபுலத்து அரசர்கள் பலர் உறவினர்கள்!

இந்திய மன்னர்களுக்கு நல்ல ஜாதிக் குதிரைகள் வளர்ப்பு என்பது எப்போதுமே புரிபடாமல் இருந்தது (சோழர்கள்கூட வருடா வருடம் ஐயாயிரம், பத்தாயிரம் என்று குதிரைகளை அரபு நாடுகளிலிருந்து இறக்குமதிதான் செய்தார்கள்!). ஆனால், ஆப்கான் குதிரைப்படையோ, பிரத்தியேகப் போர்ப்பயிற்சி பெற்று ‘சிக்’கென்று இருந்தது.

ராஜபுத்திரர்கள் நேரடிப் போரில் மாவீரர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ‘போர் தர்மத்தைப் பின்பற்றுகிறேன் பேர்வழி’ என்று களத்தில் அவர்கள் தேவையில்லாத பெருந்தன்மை காட்டுவதை ஒரு பெருமையாகக் கருதினார்கள். அது. பலமுறை வினையாக முடிந்தது (முதல் யுத்தத்தில் முகமது கோரியை வெற்றி கொண்டும் பிருத்விராஜ் அவனைக் கொல்லாமல் விட்டது ஒரு உதாரணம்!).

பொதுவாகவே பல இந்திய மன்னர்களுக்குப் போர் என்பது வீரம் கலந்த ஒரு பொழுதுபோக்காகவே இருந்தது. ஆகவே, தற்காப்புக்காக யுத்தம் செய்வதோடு நிறுத்திக் கொண்டார்கள். வலியச் சென்று தாக்குதலே சிறந்த தற்காப்பு’ என்கிற உண்மையை அவர்கள் புரிந்துகொள்ளவேயில்லை. அண்டை நாட்டுப் படையினரின் கதை வேறு. மலைகளையும் நதிகளையும் கடந்து அவர்கள் இந்தியாவுக்கு வரக் காரணம் - அவர்களுக்காக இங்கு காத்திருக்கும் பெரும் செல்வம்! அது அவர்களுக்கு ஒரு இலக்காக இருந்தது. இந்திய வீரர்களோ கடமைக்காகவும் வீர மரணத்துக்காகவும் மட்டுமே களம் குதித்தார்கள்! வந்தவர்களை மதம் இணைத்திருந்தது. நம்மவர்களை ஜாதிகள் பிரித்து வைத்திருந்தன. இங்கே படையில் பெரும் பதவிகள் தரும்போது ஜாதியையும் கருத்தில் கொண்டு செயல்பட்டார்கள். ஆப்கான் படையில் திறமைக்கு மட்டுமே மதிப்பு தரப்பட்டது உண்மை!

முகமது கஜினிக்குப் பிறகு வந்த கோரி முகமதுவின் வெற்றிகரமான இந்தியப் படையெடுப்பு பற்றி சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டோம். கோரி முகமது ஊர் திரும்பும் முன் இந்தியாவின் வடபகுதியைத் தன் சார்பில் ஆட்சி புரியத் தேர்ந்தெடுத்தது - தன் பிரதம தளபதிகளில் ஒருவனை. அந்தத் தளபதியின் பெயர் குத்புதீன் அய்பெக். கோரிக்கு அடிமையாகச் சேவகம் புரிந்து, சேனாதிபதியாகப் படிப்படியாக உயர்ந்து, பிறகு டெல்லி மன்னனாக அரியணையில் அமர்ந்தான் குத்புதன் அய்பெக். எத்தனையோ அரசர்கள் கட்டிய அமர்க்களமான மாளிகைகளெல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட, அடிமையாக வாழ்க்கையை ஆரம்பித்த குத்புதீன் துவக்கிவைத்த ஒரு அதிசயம் - டெல்லியில் உயர்ந்து நின்று அவன் பெருமையை இன்றைக்கும் முரசு கொட்டிக் கொண்டிருக்கிறது...

அதுதான் குதுப்மினார்..!