குரு ஸ்தலம் - ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

பிரசித்தி பெற்ற புதன் ஸ்தலம் - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலைப் பற்றி இதற்கு முன் உள்ள பதிவில் பார்த்தோம். நவகிரக ஸ்தலங்களில் ஐந்தாவது ஸ்தலமாக விளங்குவது தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ள
ஆபத்சகாயேஸ்வரர் கோயில். இக்கோயில் நவக்கிரகத் தலங்களில் குரு ஸ்தலமாகப் போற்றப்படுகிறது. இங்குச் சிவபெருமானே ஞான தட்சிணாமூர்த்தியாகக் குரு வடிவில் அருள்பாலிக்கிறார். இவருக்கு குரு தட்சிணாமூர்த்தி என்ற சிறப்புப் பெயரும், இத்தலத்துக்குத் தட்சிணாமூர்த்தி ஸ்தலம் என்ற பெயரும் உண்டு. இங்குள்ள சிவனார் ஆலகால விஷத்தை அருந்தி, தேவர்களைக் காத்ததால், ஆபத்சகாயேஸ்வரர் (ஆபத்தில் உதவுபவர்) மற்றும் காசி ஆரண்யேஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள அம்பாள் ஏலவார்குழலி (உமையம்மை) என்ற சுக்கிரவார அம்பிகை. சுக்கிரவாரம் என்பது வெள்ளிக்கிழமை. அது பெண்களுக்கு உகந்த நாள் என்பதால், வெள்ளியின் பெயரையே தாங்கி தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். மேலும் இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் ஒன்றாகும்.

குரு பகவான் நவகிரகங்களில் பரிபூரண சுப பலத்தைப் பெற்றவர். இவருக்கு பிரஹஸ்பதி, வியாழன், பீதாம்பர், பொன்னன் என்ற பெயர்களும் உண்டு. குரு தெய்வீக அறிவுக்கும், ஞானத்திற்கும் அதிபதி. இங்கு குரு பகவான் சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றதால், இது தட்சிணாமூர்த்தி வழிபாட்டிற்கு உகந்த இடமாகத் திகழ்கிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்ற பழமொழி ஒன்றே குருவின் பெருமையை விளக்கப் போதுமானது.
இந்த கோயில் ஆரம்பத்தில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. மேலும் தற்போதுள்ள கட்டுமான அமைப்பு 16 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுக் கட்டப்பட்டதாகும்.
ஸ்தல புராணம்:

பஞ்சாரண்யங்கள் ஐந்தில் நான்காகத் திகழும் ஸ்தலம். காசி ஆரண்யம் என்பது இதன் வட மொழிபெயர். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட கொடிய ஆலகால விஷத்தை, சிவபெருமான் இங்கு அருந்தியதாகக் கருதப்படுகிறது. விஷத்தை (ஆலம்) உண்ட தலம் என்பதால் இது 'ஆலங்குடி' என்று பெயர் பெற்றது. இத்தலத்தின் ஸ்தல விருட்சம் பூளை செடியாகும். பூளை செடியின் கீழ் சிவபெருமான் சுயம்புவாகத் தோன்றியதால் இத்தலத்திற்கு 'திருஇரும்பூளை' என்ற பெயரும் உண்டு. மேலும் பார்வதி தேவி தவம் செய்து, இறைவனை மணம் புரிந்த இடமாக இது கருதப்படுகிறது. அத்திருமணத்தைக் காண வந்த திருமால்,பிரமன், லக்ஷ்மி, சாஸ்தா, அஷ்டதிக் பாலகர்கள், வீரபத்திரர், கருடன் ஆகியோர் தத்தம் பெயரில் லிங்கம் நிறுவி வழிபட்டுள்ளனர். விசுவாமித்திரர், முசுகுந்த சக்கரவர்த்தி, வீரபத்திரர் முதலானோர் வழிபட்ட திருத்தலம்.
சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபொழுது, வெட்டாற்றில் பெரும் வெள்ளம் ஏற்பட்டிருந்தது. அப்போது சிவபெருமான் ஒரு ஓடக்காரனாக உருவெடுத்து வந்து, சுந்தரரை ஆற்றில் இருந்து அக்கரைக்கு அழைத்துச் சென்று காட்சியளித்தார்.
ஸ்தல அமைப்பு:

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில் ஊரின் நடுவே அழகாக, ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரத்துடன் காட்சியளிக்கின்றது. கோயிலின் உட்புறத்தில் அலங்கரிக்கப்பட்ட தூண்கள், மற்றும் பரந்த மண்டபங்களுடன் இக்கோவிலின் அமைப்பு வித்தியாசமாகவும் விசித்திரமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இத்தலத்தில் "மாதா, பிதா, குரு" என்ற தத்துவத்தின் அடிப்படையில் முதலில் அம்பாள், பின்னர் சிவன், இறுதியாக குரு சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐந்து நிலை இராஜகோபுரத்தைக் கடந்து சென்றால் கொடிமரம், பலிபீடம், நந்தி மேற்குப் பகுதியில் காட்சி தருகிறார், கஜமுகாசுரனை வதம் செய்த 'ஸ்ரீ கலங்காமல் காத்த விநாயகர். வெளிப் பிராகாரத்தில், தெற்குப் பார்த்த ஏலவார்குழலி அம்பாள் சந்நிதி. உள் வாயில் வழியாக நுழைந்தால் சூரிய பகவான் சந்நிதி. அருகிலேயே உற்ஸவ சுந்தரர். மேலும் உள் பிராகாரத்தில் நால்வர், சூரியநாதர், சோமேசநாதர், குரு மோட்சேஸ்வரர், சோமநாதர், சப்தரிஷி நாதர், விஷ்ணுநாதர், பிரமீசர் ஆகிய சப்த லிங்கத் திருமேனிகள். ஸ்ரீகாசிவிஸ்வநாதர் - விசாலாட்சி, அகத்தியர் ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர். வடக்குச் சுற்றில் ஸ்ரீநடராஜர் சபை. ஆக்ஞா கணபதி, கல்யாண சாஸ்தா, சோமாஸ்கந்தர், சப்த மாதர்கள், சனகாதி முனிவர்களோடு கூடிய தட்சிணாமூர்த்தி என ஏராளமான உற்ஸவ மூர்த்தங்கள் அருள்பாலிக்கிறார்கள்.
ஆபத்சகாயேஸ்வரர் கருவறையில் கிழக்கு நோக்கியபடி அருள்பாலிக்கிறார். அருகில் தாமிர நந்தி உள்ளது. அடுத்து அகத்தியரை வழிபட்டபின், முருகனை வணங்கினால், மன நோய், மனக்குழப்பம் ஆகியன அகலும் என்பது நம்பிக்கை.
பிரகாரத்தில் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி தனி சந்நிதியில் அபய ஹஸ்தத்துடன், வீராசனத்தில் அமர்ந்து, அவரது காலடியில் முயலகன், இருமருங்கிலும் சனகாதி முனிவர்கள் அமர்ந்திருக்கத் தேவ குருவாகக் காட்சி கொடுக்கிறார்.

ஸ்தல விருட்சம்: பூளைச்செடி.
ஸ்தல தீர்த்தம்: அமிர்தப் பொய்கை. சிவபெருமான் விஷத்தை எடுத்துக்கொண்டு, அமுதத்தை நமக்கு வழங்குவதால், இந்தப் பொய்கைக்கு அமிர்தப் பொய்கை என்ற பெயர் ஏற்பட்டது.. கிழக்கே சற்று தொலைவில் ஓடும் ஆறு, பூளைவள ஆறு. இதுவும் இத்தலத் தீர்த்தமே. கோயிலுக்குள்ளே உள்ள ஞான கூபம் என்ற கிணறும் விசேஷமானது. சுவாமிக்கு ஐப்பசி அபிஷேகம் பூளைவள ஆற்று நீரால் நடைபெறும். இந்தத் தலத்தில் பிரம்ம தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சப்த ரிஷி தீர்த்தம் ஆகிய பதின்மூன்றும், பூளைவள ஆறு, அமிர்த புஷ்கரிணி, ஞான கூபம் ஆகிய மூன்றும் சேர்த்து மொத்தம் 16 தீர்த்தங்கள் இருப்பதாக ஐதிகம்.
ஸ்தல பெருமை:

இக்கோயிலில் ஆபத்சகாயேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கின்றார். அம்பாள் இந்த தலத்தில் தவம் இருந்து இறைவனைத் திருமணம் செய்துகொண்டார்.
ஆலகால விஷத்திலிருந்து காத்த ஈசன் இருக்கும் இத்தலத்தில்
விஷக்கடி அபாயமோ, நச்சுத் தாக்குதல் ஆபத்தோ கிடையாது.
தமிழகத்தில் தட்சிணாமூர்த்தி உற்சவராகத் தேரில் பவனி வருவது இங்கு மட்டும்தான்.
சிறப்பு வழிபாடு: ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மூன்றாவது அல்லது நான்காவது வியாழக்கிழமைகளில் "மாசிமகாகுருவார" வழிபாடு சிறப்பாக நடைபெறும். குருப் பெயர்ச்சி தினத்தை விட, இந்த மாசி மாத வியாழக்கிழமைகளில் தான் குருபகவானுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
அம்மை தழும்புகளுடன் சுந்தரர் சிலை :

இங்குள்ள சுந்தரர் சிலை திருவாரூரிலிருந்து அர்ச்சகர்களால் ஒளித்து எடுத்துவரப்பட்டதாகவும், அப்போது காவலர்களிடமிருந்து தப்பிக்க, தங்களின் பிள்ளைக்கு அம்மை நோய் உள்ளதால் மறைத்துக் கொண்டு செல்கிறோம் எனக் கூறினர். பின்னர் ஆலங்குடி வந்து பார்த்த போது சுந்தரருக்கு அம்மை போடப்பட்டிருந்தது. இப்போதும் கூட சுந்தரர் சிலைக்கு அம்மை தழும்புகள் இருப்பதைக் காணலாம்.
திருவிழாக்கள்:

இக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம், குருப் பெயர்ச்சி விழா, தெப்பத்திருவிழா மற்றும் மாசி மகம் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற ஸ்தலம். குறிப்பாக, தட்சிணாமூர்த்திக்கு நடைபெறும் தேர்த் திருவிழா மற்றும் குருப் பெயர்ச்சி லட்சார்ச்சனை மிக முக்கியமான விழாக்களாகும். மகா சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் மற்றும் சிறப்பான அலங்காரங்களுடன் கொண்டாடப்படும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் (குருவாரம்) மற்றும் பௌர்ணமி நாட்களில் குரு பகவானுக்கு 24 நெய் விளக்குகள் ஏற்றி 24 முறை வலம் வருதல் மிகவும் பிரசித்தம்.
பிரார்த்தனை:
ஆயுள், ஆரோக்கியம், கல்வி, ஞானம், திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் கிடைக்க மக்கள் இங்கு வேண்டிக்கொள்கின்றனர். மற்றும் ஜாதகத்தில் குரு தசை நடப்பவர்கள், குரு நீச்சம் பெற்றவர்கள் மற்றும் குரு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகார பூஜைகள் செய்கின்றனர்
கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினமும் காலை 6.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும். வியாழக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் கோயில் நடை நாள் முழுவதும் திறந்திருக்க வாய்ப்புள்ளது.

எப்படிச் செல்வது:
ஆலங்குடி குரு ஸ்தலம் கும்பகோணம் - நீடாமங்கலம் - மன்னார்குடி பிரதான சாலையில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ (தெற்கே) மற்றும் நீடாமங்கலத்தில் இருந்து 7 கி.மீ (வடக்கே) தொலைவில் உள்ளது. இத்தலத்திற்குச் செல்ல கும்பகோணம் மற்றும் நீடாமங்கலத்தில் இருந்து அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன. அருகில் உள்ள முக்கிய ரயில் நிலையம் நீடாமங்கலம், மற்றும் அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி (திருச்சிராப்பள்ளி) ஆகும்.
குரு தோஷங்கள் நீங்கி, நல்ல வாழ்க்கை அமைய
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடுவோம்..!!

Leave a comment
Upload