தொடர்கள்
காதலர் தின ஸ்பெஷல்
காதல் கைகூடும் காஞ்சி காமேஸ்வரர்..!! - மீனாசேகர்.

Kanchi Kameshwarar, the one who brings love..!!

தமிழ்நாடு, காஞ்சிபுரம் சர்வ தீர்த்தக் கரையில் உள்ள காமேஸ்வரர் கோயில் (காமேசுவரம்) மன்மதன் சிவபெருமானை வழிபட்டு மீண்டும் உயிர் பெற்ற சிறப்புமிக்க ஸ்தலம். இத்தல இறைவன் மன்மதனுக்கு அருள் செய்ததால் மன்மதேசுவரர் எனவும் அழைக்கப்படுகிறார். இது காஞ்சிபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது
காஞ்சிப் புராணத்தில் போற்றப்படும் இக்கோயில், திருமணத் தடைகள் நீங்கவும், காதல் கைகூடவும், இங்குள்ள காமனை நினைத்து வழிபடுவது சிறப்பானது.

ஸ்தல புராணம்:
பார்வதி தேவி சிவபெருமானைக் கரம் பிடிக்க வேண்டி தவமிருந்தபோது, மன்மதன் சிவபெருமான் மீது மலர்க்கணையைத் தொடுத்து அவரது தவத்தைக் களைத்தார். இதனால் கோபமடைந்த சிவபெருமான், தனது நெற்றிக்கண்ணைத் திறந்து மன்மதனை எரித்துச் சாம்பலாக்கினார். கணவனை இழந்த ரதிதேவியின் வேண்டுதலுக்காக, மன்மதன் காஞ்சிபுரம் வந்து சர்வ தீர்த்தக் கரையில் சிவலிங்கத்தை ஸ்தாபித்து, தவமிருந்து வழிபட்டார். மன்மதனின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு மீண்டும் உயிர் கொடுத்து அருளினார். இங்கு மன்மதனுக்கு (காமன்) ஈசன் அருள் புரிந்ததால், இத்தலம் காமேசுவரம் எனப் பெயர் பெற்றது.

Kanchi Kameshwarar, the one who brings love..!!

ஸ்தல சிறப்பு:
காஞ்சிபுரம் காமேஸ்வரர் கோயில் (காமேசுவரம்) காமேஸ்வரர் மற்றும் காமேஸ்வரி (அம்பிகை) சந்நிதிகள் ஒரே மண்டபத்தில் சக்தி-சிவன் ஐக்கிய ரூபமாக அருளும் சிறப்புமிக்க தலம். மேலும் மன்மதன் வழிபட்டு வரம் பெற்ற இத்தலம், பிரணவ மந்திரத்தின் பொருளைச் சிவபெருமான் பார்வதி தேவிக்கு உபதேசித்த இடமாகவும், காஞ்சிப் புராணத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சிறப்பு உட்கோயிலாகவும் போற்றப்படுகிறது.

Kanchi Kameshwarar, the one who brings love..!!

திருவிழாக்கள்:
காஞ்சிபுரம் காமேஸ்வரர் கோயிலில் சித்திரை மாதத்தில் உத்திரப் பெருவிழாவும், மாசி மாதத்தில் பிரம்மோற்சவமும், மற்றும் சிவராத்திரியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவின் போது, இக்கோயிலிலும் விழா களைக்கட்டும்.

வழிபாட்டுப் பலன்:
இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டால் காமம் மற்றும் அன்பு தொடர்பான கோரிக்கைகள் நிறைவேறும். காதல் வெற்றி பெறும், திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு வழிபடுவதன் மூலம் விரைவில் திருமணம் கைகூடும். தம்பதிகளிடையே ஒற்றுமை, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை மற்றும் நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்

Kanchi Kameshwarar, the one who brings love..!!

கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினமும் காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

எப்படிச் செல்வது:
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் தென்மேற்கு திசையில் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோக்கள் மூலம் கோயிலை எளிதில் அடையலாம்.

Kanchi Kameshwarar, the one who brings love..!!

காதலர் தினத்தில் நாமும் காஞ்சி காமேஸ்வரரை வழிபட்டு பலன்களைப் பெறுவோம்..!!