தொடர்கள்
அனுபவம்
ஒத்தை ரோஜாவுக்காக ......!! - மாலா ஶ்ரீ

2026011409345058.jpg

காதலர் தினத்தின் தோற்றம், ரோமப் பேரரசு காலத்துடன் தொடர்பு உடையதாகக் கூறப்படுகிறது. கி.பி. 3-ம் நூற்றாண்டில் ரோமாபுரியை ஆண்ட மன்னர் கிளாடியஸ் என்பவர், ‘திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள் போரில் தைரியமாக செயல்பட மாட்டார்கள்’ என்று கருதி, அவர்களின் திருமணத்துக்குத் தடை விதித்துள்ளார். இத்தடையை மீறி, அக்காலத்தில் வாழ்ந்த வாலண்டைன் எனும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர், அந்நாட்டு இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் நடத்தி வைத்துள்ளார். இதுபற்றி அறிந்ததும் அவரை அந்நாட்டு மன்னர் கிளாடியஸ் மரண தண்டனைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் வாலண்டைன் இறந்த பிப்ரவரி 14-ம் தேதியை ‘செயின்ட் வாலண்டைன்ஸ் டே’ என்று இளம் தலைமுறையினர் கொண்டாடத் துவங்கியதாகவும் வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

காதலர் தின கொண்டாட்டதைப் பற்றி சென்னையை சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் மனநல ஆலோசகர்கள் கூறுகையில், ‘‘காதல் என்பது தவறானது கிடையாது. ஆனால், அது சரியான வயதில், சரியான நபரிடம் இருந்து வரவேண்டும். முன்பெல்லாம் இதுபோன்ற கொண்டாட்டங்கள் வருவதும், போவதுமே தெரியாது. பின்னர் இவை அனைத்தும் விளம்பர மற்றும் வர்த்தக ரீதியாக பார்க்கப்படுவதால், சாதாரண நாட்களில் 5 ரூபாய்க்கு விற்கும் ரோஜாப்பூ, காதலர் தினத்தில் 50 ரூபாய்க்கு வாங்கவும் இளம் தலைமுறையினர் துடிக்கின்றனர்.

பதின்பருவத்தினர் கல்வி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் கவனம் செலுத்த வேண்டும். இதுபோன்ற ஆக்கப்பூர்வ செயல்களை பயன்படுத்தி கொண்டால், அவர்கள் 25 வயதுக்குள் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிடலாம். அதன்பிறகு எதிர்பாலின ஈர்ப்பு வரும்பட்சத்தில் எது சரி, தவறு என்பதை உணர்ந்து நல்ல முடிவெடுக்க முடியும். ஆண்-பெண் எனும் இருபாலினருக்கு இடையே நல்ல புரிதலுடன் காதல் வருவதை யாரும் தவறு என்று சொல்வது கிடையாது. அதற்குமுன் பதின்பருவத்தில் வெளித்தோற்றத்தை பார்த்தோ, அவர்களின் சூழலை பார்த்தோ வருவதை காதல் என்றே எடுத்துக் கொள்ள முடியாது.

திட்டமிடல் இல்லாத பதின்பருவத்தில் ஏற்படும் காதல் எனும் ஒத்தை ரோஜாவுக்காக, குடும்பம் எனும் வாழ்க்கை பூந்தோட்டத்தை இழக்காதீர்கள். முந்தைய காலகட்டத்தில் காதலால் ஏற்பட்ட பல்வேறு விபரீதங்களை அறிந்து, தற்போதைய இளம் தலைமுறையினரிடையே காதலுக்கான வரையறைகள் மாறிவருகின்றன.