தொடர்கள்
கதை
பேரம் - சுந்தர மணிவண்ணன்.

20260114095933761.jpg
GRT ல் நகையை வாங்கிக் கொண்டு, வெளியே வந்தபோது, மேகம் கருத்திருந்தது.

தூரத்தில் இடியுடன் மின்னலும் இருந்தது. மாலை நேரம். மழை நெருங்கும் முன், அவசரமாக ஆட்டோ பிடிக்க ஆயத்தமானேன்.

அங்கேயே நின்றிருந்த ஒரு ஆட்டோகாரன், அழைத்தவுடன் வர சம்மதித்தான்.

செல்ல வேண்டிய இடத்தைச் சொல்லி,

"எவ்வளவு "என்றேன்.

"இருநூற்று இருபது ரூபாய்" என்றான்.

பேரம் பேசாமல் வண்டியில் ஏறிக் கொண்டேன்.

நார்மலாக என் நாக்கு சும்மா இருக்காது

நாட்டு நடப்பை தெரிந்து கொள்ள, ஆட்டோக்காரனிடம் பேச்சுக் கொடுத்தேன்.

"கொரானாவுக்கு அப்புறம், பழைய சம்பாத்யம் பண்ண முடியுதா பா".

"அந்த பயம் அப்பவே போச்சு. இப்பெல்லாம்

ஜனங்கள் நிறைையவே வெளியில் வரத் தொடங்கிட்டாங்க".

"ஆமாம்.. ஆமாம்”.. அதை அவசரமாக ஆமோதித்தேன்.

“தங்கம் வாங்கறக் கடையில், ஜனங்கள்

பொங்கி வழியுது ". மீண்டும் அதை ஊர்ஜிதம் செய்தேன்.

"சவாரி நிறையவே கிடைக்குது சார். நல்லா உழைச்சா நாலு காசு சம்பாதிக்கலாம்.

விலை வாசி மட்டும் ஏனோ ஏறிகிட்டே போகுதுங்க. எவ்வளவு வருமானம் வந்தாலும் போத மாட்டேங்குது".

அவன் பேச்சில் ஒரு அலுப்புடன், உண்மையும் இருந்தது.

“ஆமாம் பா..

“தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில், விண்ணைப் பிளந்துண்டு போகுது. எங்க போய் நிற்குமோ தெரியல. போகிற போக்கைப் பார்த்தா, எந்த விலையும் நம்ப கண்ட்ரோல்ல இருக்காது போல இருக்கு”.

“காலையில சவரனுக்கு ஐந்நூறு ரூபாய் ஏறிச்சாம். சாயந்தரமே , இன்னும் இரண்டாயிரம் கூடிப் போச்சுங்கிறான்”.

“நாளைக்கு விலை இறங்குற சான்ஸ் ஏதாவது இருக்குமா பா?”

ஸேல்ஸ் மேனிடம் கேட்டேன்,

.“ சார், என்ன சொல்றீங்க”.

அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான் . அந்தச் சிரிப்பில் சின்ன ஏளனம் தெரிந்தது.

“ஏன் பா சிரிக்கிற”

“இன்னும் இருபதாயிரம் ஏறப்போகுதாம் சார்”.

“சரி… பில்ல சீக்கிரம் போடு தம்பி. நிமிஷத்துக்கு, நிமிஷம் ரேட் ஏறி்க்கிட்டேப் போகுது. பில்லை போட்டு முடிக்கிறதுக்குள்ள ரேட் மாறிடப்போகுது”. அவனை அவசரப்படுத்தினேன்.

பில்லை வாங்கிப் பாரத்தேன். ஒரு சவரன் மோதிரம், ஒருலட்சத்து பதிநான்காாயிரம் காட்டியது. ஆடிப் போனேன்.

“ரேட்டைக் கொஞ்சம் குறைக்க முடியுமா?”

“ சார்…..இது இங்க ஃபிக்ஸ் பண்ற விலை இல்ல சார். இன்டர்நேஷனல் ரேட் ”.

“நம்ப ஊர்ல்ல தங்கம் நிறைய வாங்க ஆரம்பிச்சுட்டங்க.அதனால தான் தங்கம் விலை தாறுமாறா ஏறுதுன்னு சொன்னாங்க”.

“யாரு சார் சொன்னாங்க”.

“வலை தளத்துல வரச் செய்தி தான் பா”.

“ வலை தளத்துல வம்பு பேசறது, வர வர அளவில்லாம போச்சுங்க.

நம்ப ஊர்ல மட்டுமில்ல.உலகம் பூராவும் தங்கத்தின் வில ஏறிகிட்டே போகுது சார்”.

“எதுக்குதான் விலையை ஏத்தி விக்கிறாங்களோ . காரணம் எதுவும் தெரியல. இன்டர்நேஷனல் ரேட்டுங்கறான்.அவுங்க சொன்ன விலையை அப்படியே கொடுத்துட்டு வரவேண்டி இருக்கு பா”.

கடையில் நிகழ்ந்ததைச் சொல்லி, நாட்டு நடப்பை நினைத்து மனம் நொந்தேன்.

“ எங்க கிட்ட மட்டும் எல்லாரும் பேரம் பேசறாங்க சார் ” டிரைவர் என்னைத் திரும்பிப் பார்த்தான்.

“பெரிய பெரிய இடத்துல பேரம் பேச முடியல. அவங்க சொன்ன விலையே கொடுக்க வேண்டியதுதான்.

அதனால்தான் பா… இப்பெல்லாம் பூக்காரி, ஆட்டோகாரங்க மாதிரி உழைச்சு சாப்பிடுறவங்கள்கிட்ட, நான் பேரம் பேசறதில்ல. அஞ்சோ பத்தோ அதிகமா கேட்டாலும் பேச மாட்டேன்.

அதற்குள் என் வீட்டிற்கு அருகில் ஆட்டோ வந்தது.

எந்த "வீடு சார்" என்றான்.

“இந்த வீடு தான் பா” பர்ஸிலிருந்து மூன்று நூறு ரூபாய் தளை எடுத்து அவனிடம் தந்தேன்.

" சில்லரை இல்ல சார்" என்றான்.

"கொஞ்சம் வெயிட் பண்ணு பக்கத்து வீட்டில் சில்லரை மாத்திட்டு வரேன்" என்று சொன்னேன்.

"வேண்டாம் விடுங்க சார்.இரு நூறு ரூபாய் தாளை மட்டும் எடுத்துக் கொண்டான்.

"இல்ல.. இல்ல…. பாக்கி பணத்தை வாங்கிக்கோ பா"

நான் அழுத்திச் சொன்னேன்.

“நீங்க என்னிடம் பேரம் பேச மாட்டேன்னு சொன்ன போது, நான் மட்டும் உங்ககிட்ட எப்படி கறார் காட்ட முடியும் சார்"

விர்ரென்று வண்டி வேகம் எடுத்தது. அத்திசை நோக்கி என் கரங்கள் குவிந்தன.

.