தொடர்கள்
தொடர்கள்
சினிமாவும் இலக்கியமும். 21. தி.குலசேகர். (இறுதி வாரம்)

20260114085407913.jpg

சினிமா மற்றும் இலக்கியம் முதலான கலைகள் நமக்கு எப்படி பயன்படுகிறது என்று இந்த நிறைவுப்பகுதியில் பார்க்கலாம். சிறந்த திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்கள் நம்முடைய அழகுணர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. நம்முடைய ஆதிமொழி மௌனம். அதுவே சினிமா மற்றும் இலக்கியம் முதலான கலைகளின் பிரதான மொழி.

அது நம்மை காதலிக்க வைக்கிறது. எல்லோரையும், எல்லாவற்றையும் காதலிக்க வைக்கிறது. ‘ஐ லவ் எவ்ரிதிங் அன்டர் தி யுனிவர்ஸ்’ என்று இதயத்தில் ஒலிக்க வைக்கிறது. நிதானத்தை அவதானிக்க வைக்கிறது. எதுவுமற்றதை எல்லாமுமாக பார்க்க வைக்கிறது. வெற்றிடத்தை நிறைவிடமாக உணர வைக்கிறது.

ஒரு மனிதருக்கு வாழ்நாளில் கிடைப்பது ஒரு மனிதரின் அனுபவம் தான். அதுவே, ஒரு நல்ல கலை, இலக்கிய பரிட்சயமானது ஆயிரக்கணக்கான மனிதர்களுடைய அனுபவத்தின் குவியலாக நமக்குள் வந்தடைகிறது. ஒவ்வொரு நல்ல திரைப்படைப்பும், புத்தகமும் இன்னொரு வாழ்க்கையிலிருந்து பெறக்கூடிய கூடுதல் அனுபவமாக அதன் மூலம் நம்மை வந்து சேருகிறது. இப்படியாக ஒரு வாழ்க்கைக்குள் பல்லாயிரக்கணக்கான அனுபவங்களின் தொகுப்பை சினிமாவும், இலக்கியமும் விதைக்கின்றன.

20260114085437104.jpg

அந்த அனுபவங்களின் தொகுப்பு அன்பை, அறிவை, அழகை, கருணையை, புரிதலை என அத்தனையையும் செழுமை கொள்ள வைக்கிறது. பேரன்பாலும், பெருங்கருணையாலும் மனதை நிறையச் செய்கிறது. அந்தப்புள்ளியில் ஜென் மனநிலையின் சூட்சுமத்தை உணர வைக்கிறது. அதன் பிறகு நாம் எளிமையின் பிரதிநிதியாகி விடுகிறோம். புறம் சார்ந்த தேடல் அகம் சார்ந்த தேடலாகி விடுகிறது. அளவிட முடியாத சாசுவத மகிழ்வில் மனமானது நிறைந்து ததும்பத் துவங்கி விடுகிறது.