
அமுதாவுக்கு அன்று முழுவதும் அதே நினைவாக இருந்தது. பாஸ்கர் எதற்காக அதைச் சொன்னான்? என்ன தேவை அதற்கு?
“ஸ்ட்ராங்கா ஒரு காபி குடுங்கோ மாமி” என்றாள் சமையல் மாமியிடம்.
காபியை சொட்டு சொட்டாக உறிஞ்சியபடி மொட்டை மாடியில் நடந்தபடியே யோசித்துக் கொண்டிருந்தாள்.
“ஹாய் அமுதா, இங்க என்ன பன்ற?” கேட்டவாறே வந்தான் பாஸ்கர்.
“கீழப் பார்த்தேன் உன்னைக் காணும். மாமி சொன்னா நீ மேல இருக்கன்னு”
என்ன இவன் இவ்வளவு சாதாரணமாக பேசுகிறான். நேற்று இவன் சொன்னதை ஜீரணிக்க முடியாமல் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன்.
“என்ன பாஸு இவ்வளவு கேஷுவலா இருக்க? நேத்திக்கு நீ சொன்னது என் காதுல ஒலிச்சுண்டே இருக்கு”
“சோ வாட், அதுதான் நேச்சுரல். இதுல ஃபீலிங்சுக்கெல்லாம் இடமில்ல” என்றான்.
அமுதாவுக்கு தலை சுற்றியது. ஜோக்கடிக்கிறானா? நிஜம்தானா? எப்படி எடுத்துக் கொள்வது?
அப்படி பாஸ்கர் என்ன சொன்னான்?
“அமுதா, நான் அபியை டைவர்ஸ் பண்ணப் போறேன். எங்களுக்குள்ள ஒத்து வரலை”
“என்ன பாஸு சொல்ற? டைவர்ஸா? இதென்ன இது அசிங்கமா?”
“அது அப்டித்தான். ஒனக்குப் புரியாது. நா கெளம்பறேன்”
அலுவலகத்தில் ஒன்றாகப் பணிபுரியும் பாஸ்கரின் இந்தப் பேச்சு அமுதாவை மிகவும் சங்கடப் படுத்தியது.
“காரணம் தெரிஞ்சுக்கலாமா, நேத்திக்கு நீ சொன்னதுக்கு?” அமுதா கேட்டாள்.
அவன் சொன்ன பிறகு மனம் மிகவும் லேசானது. ஒரு முடிவுக்கு வந்தாள்.
அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்துக் கொண்டாள். காலை டிபனை முடித்துக் கொண்டு பாஸ்கர் வீட்டுக்குச் சென்றாள்.
அரைமனதுடன் வரவேற்ற அபியின் மனசு புரிந்தது. “ஹாய் அபி, எப்பிடி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன்” சொரத்தில்லாமல் வந்தது பதில்.
“ஒங்களுக்கு முக்கியமான பொறுப்பு கொடுக்கப் போறேன்”
“பொறுப்பா? என்னது?”
“எனக்கும் கல்யாண வயசு வந்தாச்சுன்னு அம்மா சொல்லிண்டே இருக்கா. நீங்க என்ன பண்ணனும்னா ஒரு நல்ல வரன் பார்க்கனும். எப்டின்னா நானும் பாஸ்கரும் எப்பிடி நண்பர்களா இருக்கோமோ, அது மாதிரி நீங்க ரெண்டு பேரும் நண்பர்களா இருக்கனும்”
அபிக்கு ஏதோ குத்துவது போல் இருந்தது.
“எனக்கும் ப்ரதர்ஸ் இல்லை. உங்களுக்கும் இல்லை. அதனாலத்தான் சொல்றேன். ஒங்க வாட்சாப்புக்கு நான் என் ஜாதகம் அனுப்பறேன்”.
அபிராமி கொடுத்த எலுமிச்சை இஞ்சி ஜூசைக் குடித்துவிட்டு வீடு திரும்பினாள்.
அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த பாஸ்கருக்கு ஒன்றும் புரியவில்லை. தலை பின்னி பூ வைத்துக் கொண்டு அவனுக்குப் பிடித்த அவல் உப்புமாவும் தக்காளிச் சட்னியும் செய்து வைத்துக் காத்துக் கொண்டிருந்தாள்.
மறுநாள் அலுவலகத்தில் அமுதாவிடம் “நேத்து நா வரும்போது நல்லாதான இருந்த. அப்புறம் எதுக்கு ளீவுப்போட்ட? போனும் எடுக்கல?”
“இப்ப சொல்லு. நா கொஞ்சம் வெளில போனேன்”
“அதிசயம் தெரியுமா? சம்பந்தமே இல்லாம பேசிப் பேசி என்னை வெறுப்பேத்துவா அபி. ஆனா நேத்து நேத்து.... ஒன்னுமில்லப்பா” என்று வழிந்தான்.
நடந்ததைத் தெரிந்து கொண்டாள். இனிமேல் இவளுக்கு பீ பீ பீ டும் டும் டும் என்றால் அபிராமி பாஸ்கர் வீட்டில் குவா குவா தானே

Leave a comment
Upload