
காதல் என்னும் உன்னத உணர்வை காலங் காலமாக மனித குலம் அனுபவித்து வருகிறது, கொண்டாடி வருகிறது.
காதல் இல்லையேல் இங்கு வாழ்வில்லை, வாழும் வாழ்க்கைக்குப் பொருளும் இல்லை. காதல் இல்லையேல் மண்ணில் மனித உயிர் தழைக்க வழியுமில்லை..
காதலை இலக்கியங்கள் மட்டுமல்ல, திரைப்படங்களும் போட்டி போட்டு வளர்த்தன. காதலைக் கருப்பொருளாக கொண்டு உருவாக்கப் பட்ட திரைப்படங்கள் வருடக்கணக்கில் வசூலில் சாதனை படைத்தன.
தேவதாஸ் தொடங்கி உருவாக்கப்பட்ட காதல் காவியங்களும் , அவற்றின் நாயக நாயகியரும் இன்னும் நம் நினைவில் நீங்காமல் வாழ்கின்றனர். அவ்வரிசையில் வந்த படம் மரோ சரித்ரா.
திரை அரங்குகளில் இரண்டு ஆண்டுகளைக் கடந்து ஓடி சாதனை படைத்த திரைப்படம் மரோ சரித்ரா. பாலச்சந்தர், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாக்கப்பட்ட மாஸ்டர் பீஸ் .திரைப்படம். பல வெற்றிகளையும், விருதுகளையும் குவித்த படம்.
1978ஆம் ஆண்டில் நான் பார்த்த இப்படம், நேற்று பார்த்த படம் போல இருக்கிறது. கதாபாத்திரங்களும், காட்சி அமைப்புகளும், பின்னணி இசையும் இன்னும் நினைவில் மங்காமல் இருக்கிறது ,
இரட்டை குதிரை வால் சடையும், குண்டு முகத்தில் கரிய விழிகளும், அவற்றில் பொங்கும் குறும்பும், காதலும் என அறிமுக நாயகி 'ஸ்வப்னா' வாக சரிதா. கடல் போன்ற கண்களுடன் 'சந்தியா'வாக மாதவி.
இவர்களுடன் 'பாலு' வாக நம் கமலஹாசன். மூவரும் பிரதான பாத்திரங்கள் என்றாலும் , திரைப்படத்தில் மற்றும் ஒரு முக்கிய பாத்திரம் "விசாகபட்டின கடற்கரை"

கல்லூரி காதல், கிராமிய காதல், ஒருதலைக்காதல், கலைகளால் இணைந்த காதல்,தொலைப் பேசி காதல், பார்க்காமலே காதல்,மதம் கடந்த காதல் , சாதி கடந்த காதல், என்றால் மரோசரித்ரா மாநிலம் கடந்த காதல்.
தமிழ்நாட்டு பாலு, விசாகப்பட்டினத்தில் பெற்றோருடன் இருக்க செல்கையில், க்கத்து வீட்டில் வசிக்கும் தெலுங்குப் பெண் ஸவப்னாவிடம் காதல் வயப்படுகிறார். இவர்களின் காதலுக்கு இருவரது வீட்டிலும் எதிர்ப்பு எழுகிறது.
இருப்பினும், இவர்களின் காதலின் உறுதியை அறிய பெற்றோர் ஓராண்டு இருவரும் எவ்வித தொடர்பும் இன்றி பிரிந்திருக்க வேண்டும், ஓராண்டுக்குப் பின்னரும் இவர்கள் காதல் நிலைத்திருந்தால் இருவருக்கும் திருமணம் என்று அறிவிக்கிறார்கள். காதலர்கள் பிரிகிறார்கள். பாலு ஹைதராபாத் செல்கிறார்.

ஓராண்டுக்குப் பின்னர் ஸ்வப்னாவைத் தேடி வருகையில் இருவரும் ஒன்றாக வாழ முடியாமல் சூழ்நிலை சதி செய்ய , குன்றின் உச்சியில் இருந்து விழுந்து இறந்துப் போகிறார்கள். காதலர்கள் இறந்தாலும், காதல் இறப்பதில்லை. இக்காதல் மற்றுமோர் சரித்திரம் என்ற வாசகங்களுடன் படம் நிறைவடையும்.
பாலசந்தர் என்னும் திரை ஓவியர் கரத்தில் இருந்த தூரிகையின் வண்ணத் தீற்றல்கள் படம் முழுவதும் நிறைந்து இருக்கும்.
சுவர் முழுவதும் பாலுவின் பெயர் எழுதி வைப்பது, அம்மா எரித்த பாலுவின் புகைப்படத்தின் சாம்பலை டீயில் போட்டு பருகுவது என்று அழுகையும் சிரிப்புமாக முதல் படத்திலேயே சரிதா கொடி கட்டி பறப்பார்.
கமலைப் பற்றி சொல்லவே வேண்டாம். அழகும், இளமையும் கொண்ட தமிழ் இளைஞனாக வெளுத்து வாங்குவார். தெலுங்கு தெரியவில்லை என்று சொன்ன ஸ்வப்னாவின் குடும்பத்தாரின் முன் தானே அம்மொழியைக் கற்றுக்கொண்டு தெலுங்கு மொழியின் வட்டார வழக்குகளில் பேசும் காட்சி ஒன்றே போதும்.
காதலுக்கு தூது வரும் சந்தியாவாக மாதவி உன்னத நடிப்பும் அருமை.

பாலு தன் ஸவப்னாவுக்கு எழுதி வைத்து அனுப்பாமல் விடும் கடிதங்கள் இறுதி காட்சியில் கடலலையில் மிதப்பது , இரவில் விளக்கை அணைத்துப் போடுவது என்று காட்சிகள் அப்போது புதுமையாக இருந்தன .
இப்படத்தின் காட்சிகளைப் பின்பற்றி பல படங்களில் காதல் காட்சிகள் அமைக்கப்பட்டன என்பது என் எண்ணம்.
48 ஆண்டுகளுக்கு முன் நான் பார்த்த இப்படம் இன்னும் ஒரு அழகான காதல் கவிதையாய் மனதில் நிற்கிறது. உயிரும், உணர்வும் மிக்க காதல் ஜோடியின் ஆழ்ந்த நேசமும், பிரிந்த பின் தவிக்கும் தவிப்பும் நம்மை உருக வைக்கும்.
வென்று விட்ட காதல் கதைகள் தரும் அனுபவத்தைக் காட்டிலும் , சோக முடிவு கொண்ட இப்படம் தரும் அனுபவம் கனமானது . படம் முடிந்த பின்னும் ரசிகர்கள் விசும்பலுடன் கலைவதைப் பார்த்த நினைவு இன்னும் மனதில் இருக்கிறது.
காதலுக்குப் புதிய இலக்கணங்களும், பரிமாணங்களும் வந்து விட்ட இந்நாட்களில் மரோசரித்ராவை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது. இன்றைய இளைஞர்கள் இப்படத்தைப் பார்த்து "கிரிஞ்" என்று சொல்லவும் கூடும்.
காதலின் கனம் உணர்ந்தவர்களுக்கு, ‘மரோ சரித்ரா’ எந்நாளும் காவியம் தான்.
காதலர் தினத்தை மட்டும் அல்ல, காதலையே கொண்டாடுபவர்களுக்கு இது புரியும்.

Leave a comment
Upload