தொடர்கள்
கதை
காதலின் இலக்கணம் - கி ரமணி

20260114095212418.jpg

கடந்த ஆறு மாதமாக இந்த மூதாட்டி நடந்து கொண்டிருக்கிறாள்.

காடு, மலை,மேடு,பள்ளம், வெயில், மழை, எல்லாம் கடந்து...கையில் ஒரே ஒரு மாற்று உடையுடன்.

அவள் உடலில் எலும்புக்கூட்டைத் தவிர சொல்லிக் கொள்கிற மாதிரி எதுவும் இல்லை.

எதிர்ப் பட்ட எல்லாரிடமும் அவள் கேட்கும் ஒரே கேள்வி:

"துவாரகைக்கு இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது?" என்பதுதான்.

அவள் ஆறு மாதம் முன் பயணத்தை ஆரம்பித்தபோது,அங்கு யாரும் அந்தக் கேள்வியைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

"இங்கிருந்து துவாரகைக்கு நடந்து போகிறதாவது!. நூறு யோஜனை தூரம் இருக்குமே!"

எல்லாரும் மூதாட்டியைப் பார்த்து சிரித்து விட்டுப் போய் விடுவார்கள்.

ஆனால் கிழவி அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்பட்டதில்லை.

நடந்தாள்.. நடந்தாள்.. நடந்து கொண்டே இருந்தாள் .

வழியில் இருக்கும் சத்திரங்களில் தங்குவாள். கிடைத்ததை உண்பாள். திரும்பவும் நடப்பாள். நடக்கும்போது 'கிருஷ்ணா,கிருஷ்ணா 'என்று பாடிக் கொண்டே நடப்பாள்.

ஆறு மாத கால நடைக்கு முடிவில் துவார கைக்கு வந்துவிட்டாள்.

அவள் வந்த அன்று ஊரெல்லாம் ஒரே கோலாகலம். ஸ்ரீ கிருஷ்ணரின் பிறந்த நாள். ருக்மணி,சத்யபாமாவுடன் அன்று கண்ணன் பொதுமக்களுக்கு காட்சி அளிப்பார்... அரண்மனையின் உப்பரிகை மேலிருந்து.

மூதாட்டிக்கு ஒரே மகிழ்ச்சி.

இந்த செய்தி கேள்விப்பட்டவுடன் அரண்மனைக்கு கூட்டத்தோடு கூட்டமாக சென்று' இன்று கிருஷ்ணனை தரிசித்து விடுவோம்' என்று எண்ணும்போது அவளுக்கு கால்கள் நிலை கொள்ளவில்லை.

எவ்வளவு வருஷங்கள் கழித்து மீண்டும் அவளுடைய கண்ணனைப் பார்க்கப் போகிறாள்? 50 வருடங்கள்? அல்லது 60 வருடங்கள்? அதற்கும் மேலாகவா.? நினைவு இல்லை. அவள் கால நினைவுகள் கடந்த நிலையில் இருந்தாள்.

வேகமாக நடந்து அரண்மனையை அடைந்து மக்கள் கூட்டத்தில் தன்னைப் புகுத்திக் கொண்டு உப்பரிகை தெரியும் ஒரு மூலைக்குச் சென்று நின்றாள்.

பாமா ருக்மணியுடன் சேர்ந்து வந்த துவாரகை மன்னன் ஸ்ரீ கிருஷ்ணன் தன் கையை உயர்த்தி மோகனப் புன்னகையுடன் எல்லாரையும் வாழ்த்தினான்.

மூலையில் இருந்த மூதாட்டி அசையவே இல்லை.

கண்ணனைப் பார்த்து மெய் மறந்து நின்றாள்.

கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளமாக பெருகியது. அதில் ஆனந்தம் மட்டுமே இருந்தது.

கண்ணன் அரண்மனைக்குள் சென்றதும் கூட்டம் குறைய, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அரண்மனைக்குள் ஒரு வழியாக நுழைந்து விட்டாள் மூதாட்டி.

ஆனால், அலுப்பு தாங்க முடியாமல் மயங்கி சாய்ந்து விட்டாள்.

அரண்மனைப் பணிப்பெண்கள் அவளுக்கு மருத்துவம் செய்து எழுப்பி அமர்த்த, கிழவி அவர்களிடம் ஒரு உதவி கேட்கிறாள்.

"என் வாழ்நாள் முடியும் வரை இந்த அரண்மனையில் கண்ணன் பணிகள் செய்தபடி நான் இருக்க வேண்டும்." என்று உருக்கமாக வேண்டுகிறாள்.

கேட்டதும் கொடுக்கும் கண்ணனின் அரண்மனையில் மூதாட்டியின் உரு க்கமான இந்த ஆசை நிறைவேறாதா என்ன?

அங்கேயே பூ தொடுக்கும் பணியில் ஈடுபடுகிறாள் பாட்டி.

ஒவ்வொரு பூவையும் நாரில் சேர்த்து கட்டும் போதும்" கிருஷ்ணா "என்ற நாமம் அவள் வாயில் இருந்து ஒலிக்கும்.

நாட்கள் பறந்தன. மூதாட்டியின் உடல்நிலை இப்போது மிகவும் மோசமாகிவிட்டது.

அவள் தனக்கு மரணம் நெருங்குவதை உணர்ந்தாள்.

அவள் மீது மிகுந்த அன்பு கொண்ட ஒரு பணிப் பெண்ணிடம்,

" நான் இறக்கும் முன் ஒரு முறை என் கிருஷ்ணனை என் அருகில் பார்க்க வேண்டும். ஏற்பாடு செய்வாயா? " என்றாள்.

ஆச்சரியப்பட்ட பணிப்பெண் சிரித்தாள்.

"விளையாடுகிறாயா பாட்டி! துவாரகை மன்னன் உன் அருகில் வர வேண்டுமா? சரி,அவரிடம் போய் நீ யார் என்று நான் சொல்ல வேண்டும். நீ எனக்கு முதலில் அதைச் சொல்வாயா?"

மூதாட்டி சிரமப்பட்டுக் கூறினாள்,

"கோகுலத்து ராதை என்று கூறு. கண்ணனைப் பார்க்க கோகுலத்தில் இருந்து வந்திருக்கிறாள் என்றும் கூறு. "

பணிப்பெண் அரண்மனைக்குச் சென்று செய்தியை கண்ணனிடம் தெரிவித்தாள்.

போட்டது போட்டபடி ஓடியே வந்தான் பரந்தாமன்.

படுத்துக் கிடந்த மூதாட்டி அருகே வந்த கண்ணன் கேட்டான்.

" ராதே! நீயா? நீ எப்போ இங்க வந்தாய்? நீ வந்த உடனே ஏன் என்னிடம் நேராக வரவில்லை? அந்தக் காலத்தில் என் சிறிய வயதில் கம்சனை வதம் செய்யச்சென்ற தருணத்தில் உன்னிடமிருந்தும் கோகுலத்திலிருந்தும் விடைபெற்றேன்.

அதன் பின் உன்னை என்னால் பார்க்க முடியவில்லை. எல்லாம் விதி."

கண் கலங்கினான் கண்ணன்.

மகாலட்சுமியான ராதை சொன்னாள் :

" நீ இந்த உலகைக் காக்க வந்த திருமாலின் அவதாரம். உன் இளமைக் காலத்தில் உன்னுடன் இருக்கும்,உன்னை மகிழ்விக்கும், கடமை கொண்ட திருமகள் நான்.

"உன் வேலையை நீ நன்றே செய்கிறாய். என் வேலையை நான் செய்து முடித்து விட்டேன். நான் உன்னை இப்போது பிரிகிறேன்.

என் நாதனே... மீண்டும் நாம் வைகுண்டத்தில் சந்திப்போம்.

அதற்கு முன்னாடி எனக்காக இப்பொழுது உன் குழல் கொண்டு ஒரு பாட்டு மட்டும் இசைப்பாயா ? "

கோவிந்தன் தன் குழலெடுத்து

பாட்டிசைத்தான். உலகின் சகல ஜீவராசிகளையும் மெய்மறக்கச் செய்யும் அந்த தெய்வீக இசை அன்று கடைசி முறையாக ஒலித்தது.

இசை முடிந்ததும் ராதை முகத்தில் சிரிப்பு மட்டும் தேங்கி இருந்தது.

அவள் உயிர் பிரிந்து வைகுண்டம் சென்று விட்டது.

அருகில் அமர்ந்து கண்ணீர் வழிய அவளுடைய முகத்தையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன்.

பின்,தன் புல்லாங்குழலை அவளுடைய அருகில் வைத்து விட்டு எழுந்தான்.

கண்ணன் அதற்குப் பிறகு எப்போதும் புல்லாங்குழல் வாசித்ததில்லை.

காதலுக்கு இலக்கணமான ராதை-கிருஷ்ணனின் அன்பு நிரந்தரமானது. புனிதமானது.

அதற்கு காலத்தால் அழிவு கிடையாது.