தொடர்கள்
கவிதை
கிராமத்து காதல் ஒன்று - கோவை பாலா

20260114093806143.jpg

கிராமத்துக் காதல் ஒன்று...!!

நேரத்தை ஒதுக்கி நானும்
கிராமம் சென்றது,
கிராமத்துக் காதல் ஒன்று
காண நேர்ந்தது...!
பாரத்தை சுமக்க எந்தன்
மனமும் மறுத்தது...
சாரத்தைச் சொல்ல வந்து,
கவிதை வடிவானது...!

பட்டப்படிப்பு முடித்தும் பயிர்
செய்ய வந்தான் அவன்...!
சட்டம் படித்தும் தற்சார்பில்
வாழ வந்தாள் அவள்...!
இயற்கை இடுபொருட் களிட்டு
நிலத்தின் உயிர் காக்கும்,
செயற்கை முறை துறக்கும்,ஒரு கோட்டில் நின்றனர் இருவர்...!

பேச்சிலும் மூச்சிலும்,பயிர்கள்
வளர்ச்சியும் விளைச்சலும்‌...
வரப்பில் நடந்திடும் போதும்,
நடக்கும் விவாதமும்...
மாமன் முறை என்று சற்றே
முரப்பாக இருந்தாலும்,
காமன் முறையாக வந்தங்கே,
களம் வென்றுவிட்டான்...!

அவனைத் தொலைத்து,பின்னே தேடினான் அவளுள்...!
அவளும் தொலைந்து போய்,
தேடினாள் அவனுள்...!
தோட்டமும் துரவும் தொய்வின்றி,
துணையுடன் நடந்தான்...!
நோட்டம் விட்டேன் நான்,என
முன்னே வந்து நின்றான்...!

கண்ணாலம் கட்டிக்க காத்துக்
கிடக்கிறேன் என்றான்...!
அவள் நெல்லறுக்க போகையில்
காவல் இருக்கேன் என்றான்...!
எந்நாளும் அவள் நினைப்பில்
இருக்கேன் என்றான்...!
வந்தாளும் நாளுக்குத் தான்
ஏக்கம் என்றான்...!

வேட்டாத்து மாரியம்மன் கோவில் ஒன்றிருக்கு என்றான்...!
பொழுது சாயும் நேரம்,பொண்ணு
காத்திருக்கும் என்றான்...!
காட்டோர மல்லிகை எடுத்து, சரம் தொடுப்பேன் என்றான்...!
பார்த்தவுடன் தந்திடுவேன் அவள்
சூடத்தான் என்றான்...!

வைகாசி மாசம்தனில் பரிசம் என்றான்...!
கைராசி கைபிடிக்க தை மாசம் என்றான்...!
சிவகாசி வேட்டுச் சத்தம் விண்ணை பிளக்க,
மகராசி புகுந்த வீடு வருவாள் என்றான்...!

மவராசனை வாழ்த்த வர வேண்டும்
என்றான்...!
தகவல் கொடு, தவறாமல் வருவேன் என்றேன்...!
மண்ணுயிர் மேலோங்க இணைந்த
உள்ளங்களில்...
கிராமத்துக் காதல் ஒன்று கண்டேன் அங்கு...!
காதலர் தினம் மிகவும் அழகானது
அன்று...!