தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

முதல்வரும் முறைகேடும்...

20200811154925919.jpeg

முன்னொரு காலத்தில் விவசாயிகளால் வாழ்ந்த தமிழகம் கடந்த 20 ஆண்டுகளாக விவசாயம் புறக்கணிக்கப்பட்டு விளைநிலங்கள் வீட்டுமனைகளாகி விட்டது. விவசாயிகளின் விளைபொருளுக்கும் நியாயமான விலை கிடைக்கவில்லை. தண்ணீர் பிரச்சனை, வறட்சி, கடன் தொல்லை என்று விவசாயிகள் அவதி தொடர்கிறது. இதனால் தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை அதிகமாகியிருக்கிறது. அரசியல் கட்சிகள் கூட தேர்தல் நேரத்தில் விவசாயிகள் பற்றி கவலைப்பட்டனர். விவசாயத்தை புறக்கணிப்பதால் ஏற்படும் அபாயம் பற்றி, இயற்கை ஆர்வலர்கள் அரசுக்கு சமூக அக்கறையோடு எச்சரிக்கை விடுத்தனர். விவசாயிகள் பற்றிய கவலை அரசுக்கு அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் பிரதம மந்திரியின் கிசான் திட்டம் அறிவிக்கப்பட்டது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இந்த திட்டம் உதவும் என்று பிரதமர் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தின்படி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 2000 வீதம் மூன்று தவணைகளாக 6000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்தார். சென்ற ஆண்டு அந்த திட்டம் முறையாக துவங்கப்பட்டது. இந்த திட்டத்தை விவசாயிகள் வரவேற்றார்கள், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இதை நம்பினார்கள்.

ஆனால் ஊழல், முறைகேடு என்ற நச்சுப் பாம்பு இந்தத் திட்டத்திலும் புகுந்து, விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய இந்த உதவியை கிடைக்கவிடாமல் தடுத்து வருகிறது.

உண்மையான விவசாயிகளுக்கு, இந்த நிதி உதவி செல்லாமல் போலியான பலருக்கும் இந்த நிதி உதவி சென்றிருக்கிறது.

இந்த விஷயம் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. நூற்றி பத்து கோடி ரூபாய் முறைகேடாக தவறான நபர்களுக்கு போய் சேர்ந்திருக்கிறது. 5 லட்சம் போலி விவசாயிகள் இந்த பணத்தை வாங்கியிருக்கிறார்கள். 37 அதிகாரிகள் இடைநீக்கம், 80 அலுவலர்கள் பணிநீக்கம் என்று வேளாண் துறை செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

முதல்வர் இந்த மோசடிக்கு மத்திய அரசுதான் காரணம் என்று பழியை மத்திய அரசு மீது திருப்பி இருக்கிறார். விவசாயிகளை தானாக பதிவு செய்யும் முறையை அறிவித்தது தான் காரணம். ஆதார் மற்றும் குடும்ப அட்டைகள் கொண்டு பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு கொடுத்தது தான் பிரச்சனை என்று சொல்லியிருக்கிறார்.

ஆனால் ஒன்றை முதல்வர் மறந்துவிட்டார். பணத்தை வழங்கும் பொறுப்பு வேளாண் அதிகாரிகளுக்கும், பயனாளிகளை அடையாளம் காட்டும் பொறுப்பு வருவாய்த்துறையிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இரண்டு துறையை சேர்ந்த அதிகாரிகளும் அந்த தகவலை சரி பார்க்காமல் இருந்தது தான் முக்கிய காரணம். சரி பார்க்காமல் இருப்பதற்கு அவர்கள் பெற்ற வெகுமதி என்ன... விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை. தற்போது இந்த மோசடியை சிபிசிஐடி விசாரிக்கிறது. இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதையெல்லாம் முதல்வர் மறந்து போய், பழியை மத்திய அரசு மீது போடுகிறார். பணி நீக்கம், இடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் எல்லாம் தமிழக அரசு அதிகாரிகளை தான் என்பதையும் ஏனோ முதல்வர் மறந்து போனார்.

விவசாயிகளுக்கு தப்பித்தவறி ஏதாவது நல்ல திட்டங்கள் வந்தால், அதிலும் முறைகேடு என்பது தொடர்ந்து விவசாயிகள் வஞ்சிக்கப் படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மைதான் என்பதை எடுத்துச் சொல்கிறது. இதற்கு முதல்வர் என்ன செய்யப் போகிறார்..?