தொடர்கள்
பொது
வேற்று மொழிகளால் தமிழ்  மொழி அழியுமா? - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20200811215338830.jpeg

சமீபத்தில் போடா வாடா என்று நாம் மொழிக்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறோம். எந்த ஒரு மொழியும் மற்ற மொழியை அழித்து விடாது. நம் தமிழ் மொழியும் அப்படித்தான். 10,000 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ஒரு மொழி, 120 நாடுகளில் மக்கள் பேசி வரும் ஒரு மொழி எப்படி அழியும்?

தமிழ் மொழியில், மற்ற மொழிகளின் கலப்பு பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. புழக்கத்தில், பழக்கத்தில் இருக்கும் ஒரு மொழியில் பல வார்த்தைகளை நாம் கடன் வாங்கித் தான் இருக்கிறோம். அதே போல் மற்ற மொழிகளிலும் தமிழின் வாடை உண்டு. வட மொழி நம் மொழியை அழித்துவிடும் என்று அஞ்சும் நாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் எனும் கரையானால் அரிக்கப்படுவதை கவனிப்பதில்லை. ஆம். நாம் இன்று அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் வாக்கியங்களில் 60% ஆங்கிலம் தான். மீதமுள்ள 40% மட்டும் தான் தமிழ் பயன்படுத்துகிறோம். இது எவ்வளவு வேதனைக்கு உரிய விஷயம்?!

தற்போது 1000 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில் 200 மாணவர்கள் கூட தமிழை விரும்பிப் படிப்பதில்லை. அதே போல் இன்று இணையத்தால், மொபைல் செயலிகளில் குறுஞ்செய்தி அனுப்பக் கூட தமிழை ஆங்கிலத்தில் தான் பதிவிடுகிறோம். நன்றிக்கு nandri என்கிறோம். eppadi irukkeenga என்கிறோம். தமிழ் பத்திரிக்கைகள் மூடுவிழா நடத்துவதற்கு இதுவே சாட்சி. தமிழை தமிழில் இந்தக் கால சந்ததியினர் எழுதுவதில்லை.

தமிழை தமிழாக எழுதி, பேசி, படித்து பழகினால் மட்டுமே தமிழ் அழியாமல் வளரும். மற்ற மொழியை ஒருவன் கற்பதினால் தமிழ் அழியாது. ஆனால் தமிழை தவிர்த்தால், அடுத்த 100 ஆண்டுகளில் நம் தமிழ் மொழி பேச்சு வழக்கில் மட்டுமே பிரதானமாக இருக்கும்.