தொடர்கள்
Daily Articles
மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

நானும் சைக்கிளும்...

எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா இல்லையா என்பதை இப்போது ஊர்ஜிதம் ஆக சொல்ல முடியாது. ஆனால், நான் சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டேன் என்பது மட்டும் நிஜம்.

அறுபதுகளில் சைக்கிள் ஒரு அத்தியாவசிய வாகனம். வசதியான வீட்டில் சைக்கிள் இருக்கும். நெய்வேலியில் எங்க சித்தி வீட்டில், இரண்டு மூன்று சைக்கிள் இருக்கும். எங்கள் சித்தி உள்பட எல்லோரும் சைக்கிள் ஓட்டுபவர்கள். அதேபோல் எங்கள் மாமா வீட்டில், இரண்டு மூன்று சைக்கிள் இருக்கும். அங்கு பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள், தாத்தா, பாட்டி என்று எல்லோரும் சைக்கிளில் பயணிப்பார்கள். அந்த சாலைகள் மிகவும் நன்றாக இருக்கும்.

அந்தக் காலத்தில் சைக்கிளில் டபுள்ஸ் செல்ல அனுமதி இல்லை. இரவு நேரத்தில், சைக்கிளில் விளக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். டபுள்ஸ் வந்தால் போலீஸ்காரர் காற்றைப் புடுங்கி, வால்டூயுப்பை தூர எறிந்து விடுவார். விளக்கு எரியவில்லை எனில் அபராதம் அல்லது காற்றை புடுங்குவது. இதில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்கும். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும், இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது.

சிலர் டைனமோ விளக்கை பயன்படுத்துவார்கள், இது கொஞ்சம் காஸ்ட்லி. இன்னும் சிலர் எண்ணையில் எரியும் விளக்கை பயன்படுத்துவார்கள். இதுசமயம் காற்றில் அணைந்துவிடும். விளக்கு எரிகிறதா என்று பார்த்துக்கொண்டே சைக்கிளை ஓட்ட வேண்டும். ஒருமுறை என் மாமா சைக்கிளில் வரும்போது, விளக்கு காற்றில் அணைந்துபோக... போலீஸ்காரர் வழிமறிக்க, காற்றில் அணைந்துவிட்டது என்று சொன்னதை போலீஸ்காரர் நம்பாமல் அபராதம் விதிக்க முற்பட்டபோது... போலீஸ்காரர் கையை பிடித்து விளக்கின் மேல் வைக்க... அவர் சூடு தாங்காமல் அலற இப்பவாவது நம்புறீங்களா என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். போலீஸ்காரர் எதுவும் பேசாமல் அப்படியே நின்றுவிட்டார். அந்தக் காலத்தில் போலீஸ்காரரை பார்த்தால் சைக்கிளை விட்டு இறங்கி வணக்கம் சொல்லவேண்டும். அந்தகால போலீஸ்காரருக்கு அந்த கவுரவம் கிடைத்தது.

சைக்கிள் வைத்திருப்பவர்கள், பெரும்பாலும் அதை மற்றவர்களுக்கு இரவல் தர மாட்டார்கள். “நான் வெளியே கிளம்பி போகணும், காற்று இல்லை, பிரேக் பிடிக்காது"என்று ஏதாவது காரணம் சொல்லி சைக்கிளைத் தருவதை தவிர்ப்பார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிளை நன்கு துடைத்து, சக்கரத்தில் உள்ள கம்பிகள் எல்லாம் பள பளக்கும்படி வைத்திருப்பார்கள்.

உஷார் ஆசாமிகள், வரும் வழியில் யாராவது டபுள்ஸ் கேட்பார்கள் என்று கேரியரை கழற்றி விட்டு, தேவைப்படும் போது மட்டுமே வைத்து கொள்வார்கள்

‌என் சக பள்ளி தோழர்கள், சைக்கிள் கற்றுக் கொண்டு என் முன் சுற்றி சுற்றி வந்து, என் ஆவலை தூண்டினார்கள். சிலர் பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் வந்து, ஆசிரியர் சைக்கிள் பக்கத்தில் நிறுத்தி விட்டு பெருமை பேசுவார்கள்.

அப்போது வாடகை சைக்கிள் ஒரு மணி நேரத்திற்கு 7 பைசா, அரை மணி நேரத்திற்கு நாலு பைசா. அங்கே உள்ள நோட்டில் பெயர், நேரம் எழுத வேண்டும். எழுதிவிட்டு சைக்கிளை எடுத்துச் செல்ல வேண்டும். வாடகை சைக்கிள், வீட்டு சைக்கிள் அளவுக்கு பராமரிப்பு இருக்காது. நான் சைக்கிள் ஓட்ட... வாடகை சைக்கிள் எடுத்தபோது, எனக்கு கற்றுக்கொடுக்க இரண்டு பள்ளித் தோழர்கள் வந்தார்கள். அவர்கள் ஏற்கனவே சைக்கிள் ஓட்ட நன்கு பழகியவர்கள். நான் சைக்கிளில் ஏறியதும் ஒருத்தன், “கூன் முதுகு போடாதே” என்று முதுகில் ஓங்கி அறைந்து, நேராகப் பார்க்கச் சொன்னான். இன்னொருத்தன் “நேராக ரோட்டைப் பார்“ என்று அவனும் ஒரு அடி கொடுத்தான். ஒரு பத்து நிமிடம் நான் சைக்கிள் ஓட்டி இருப்பேன். எப்படி ஓட்டணும் என்று டெமோ காட்டும் சாக்கில், அவர்கள் இருவரும் அரை மணி நேரம் ஓட்டுவார்கள். அதில் ஒருவன், இரண்டு கையெல்லாம் விட்டு சாகசம் காட்டுவான். நானும் இது மாதிரி எல்லாம் செய்வேன் என்று கனா கண்டேன். அப்படி இப்படி ஒருவழியாக முதலில் குரங்கு படல், அதன்பின் சைக்கிள் ஓட்ட பழகினேன். என் பிரண்ட் வரத குட்டி “நீ மைதானத்தில சைக்கிள் ஓட்டி பிரோயஜனமில்லை, ரோட்ல ஓட்டணும்” என்று ஒரு முறை சைக்கிளில் ஏற்றி தள்ளிவிட்டான். நான் கொஞ்ச தூரம் போனதும், எதிரே ஒரு எருமை மாடு மற்றும் இன்னொருத்தர் சைக்கிளில் வர... நான் சைக்கிளை சற்று திருப்ப... அது அருகில் இருந்த குளத்தில் ஒவ்வொரு படிக்கட்டிலும் தடதட என்று சத்தத்துடன் இறங்கி பெதேல் என்று நான் கீழே விழுந்தேன். முட்டிங்கால், கை எல்லாவற்றிலும் ஏகப்பட்ட சிராய்ப்பு, ரத்த காயம். நல்ல வேளை சைக்கிளுக்கு எதுவும் ஆகவில்லை. சைக்கிளுக்கு ஏதாவது ஆகியிருந்தால், அதற்கு யார் பணம் தருவது என்று என்னை இன்னும் சேதாரம் ஆக்கியிருப்பாள் என் அம்மா. திட்டியபடியே எப்போதும் ஹாஸ்பிடலில் இருந்து எக்ஸ்ட்ராவாக வாங்கி வைத்திருக்கும் களிம்பை எடுத்து காயம் பட்ட இடத்தில் எல்லாம் அப்பினாள். அடுத்த ஆறு மாதத்திற்கு நான் சைக்கிளையும், சைக்கிள் ஓட்டுபவர்களையும் வேடிக்கை மட்டும் பார்த்தேன். அதன் பிறகு மீண்டும் வரத குட்டி, என் சைக்கிள் ஆசையை தூண்ட... “என் அம்மா, அடிகிடி பட்டா அப்படியே எங்கேயாவது ஓடிப் போயிடு, வீட்டுக்குள்ள வராதே” என்று ஆசீர்வதித்து அனுப்பிவைத்தாள். முதலில் தட்டுத்தடுமாறி ஓட்டினேன், பிறகு சுதாரித்துக்கொண்டு சுமாராக ஓட்ட பழகினேன். ஆனால், இறங்குவது தான் தெரியவில்லை. டபக் என்று கீழே குதிக்க... சைக்கிள் கிட்டத்தட்ட யார் மீதும் அல்லது எதன் மீதோ மோதுவது போல் நின்றது. அதன் பிறகு, சைக்கிளை விட்டு இறங்க லைட் கம்பம், வீட்டு வாசல் திண்ணை... இப்படி சில இடங்களைத் தேர்ந்தெடுத்து இறங்கினேன். இதனால் நான் சைக்கிளை ஓட்டியதை விட தள்ளிக்கொண்டு போனது தான் அதிகம்.

ஒரு முறை ஆபீஸ் வேலையாக வெளியே போக சக ஊழியர் ஒருவரின் சைக்கிளை கடன்வாங்கி அண்ணாசாலை வந்தேன். எனக்கு எல்லோரும் மாதிரி சைக்கிளை சாய்த்து காலை தரையில் ஊன்ற தெரியவில்லை. அதற்கு என் உயரமும் ஒரு காரணம். ஒவ்வொரு சிக்னலிலும் நான் இறங்கி, மறுபடியும் எறுவதற்குள்... கார் மற்றும் ஆட்டோ, இரண்டு சக்கர வாகனம்... என்று எல்லோரும் குரல் தர... நான் பதற்றத்துடன் ஓட்ட ஆரம்பித்தேன். இரண்டாவது சிக்னலிலும் இதே கதை நடக்கும் போது, நான் ஏற முடியாமல் பதட்டத்தில் சைக்கிளை போட்டுக்கொண்டு கீழே விழ... ஓடி வந்த சிலர், என்னையும் சைக்கிளையும் ஓரமாக உட்கார வைத்துவிட்டு போய்விட்டார்கள். இதன்பிறகு நான் போகவேண்டிய இடத்திற்கும் போக விரும்பவில்லை, சைக்கிளிலும் பயணிக்க விரும்பவில்லை. எனவே ஒரு ஆட்டோவில் சைக்கிளை எடுத்துக்கொண்டு என் ஆபிசுக்கு திரும்பினேன். ஆபிசுக்கு கொஞ்சம் தூரம் முன்பு ஆட்டோவை நிறுத்தி விட்டு, சைக்கிளை நான் தள்ளிக்கொண்டு வந்து யாரும் பார்க்கவில்லை என்று சைக்கிளை நிறுத்திவிட்டு, சக ஊழியரிடம் தகவல் சொன்னேன். ஆனால், நான் சைக்கிளை ஆட்டோவில் ஏற்றி வந்த விஷயம் நண்பருக்கு தெரிய... அவர் சைக்கிள் ஒர்க்கிங் கண்டிஷனில் இருக்கிறதா என்று செக் பண்ணிப் பார்த்துவிட்டு, திருப்தியானார். அதன் பிறகு என்ன நடந்தது என்பதை நானே சொல்ல...

“ஏன் சார், நீங்க கேட்டா ஆபீஸ்ல காரே தருவாங்க, நீங்க எதுக்கு சைக்கிளில் போய் ரிஸ்க் எடுத்தீங்க” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். அதன் பிறகு, சைக்கிள் ஓட்டும் ஆசையை நான் மறந்துவிட்டேன். திருமணமான பிறகு, ஒரு நாள் என் மனைவி எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா என்று கேட்க... அங்கு என் ஈகோ எட்டிப் பார்க்க... “என்னது சைக்கிள் ஓட்டத் தெரியுமா” என்று பக்கத்து வீட்டு மாமா சைக்கிளை வாங்கி என் மனைவியை டபுள்ஸ் ஏற்றிக்கொண்டு கொஞ்சதூரம் போய் தொபால் என்று நானும் என் மனைவியும் கிழே விழ... என் மனைவி சைக்கிளை எடுத்து குறுக்கும் நெடுக்கும் நான்கு முறை ஓட்டி... உட்காருங்கள், நான் ஓட்டுகிறேன் என்றாள். மறுபடியும் இந்த பாழாப்போன ஈகோ எட்டி பார்த்தான். “ஏகப்பட்ட வேலை இருக்கு... சின்ன பசங்க மாதிரி சைக்கிள் ஓட்ட ஆசை படுற” என்று நான் முறைக்க... என் மனைவி நக்கலாக சிரித்தபடியே, சைக்கிளை மாமா வீட்டு வாசலில் நிறுத்தி ஸ்டேண்ட்போட்டாள். அவள் சைக்கிளை நிறுத்திய ஸ்டைல், அவள் சைக்கிள் ஓட்டுவதில் எக்ஸ்பர்ட் என்பதை காட்டியது. அதன் பிறகு யாராவது எனக்கு சைக்கிள் ஓட்ட தெரியுமா என்று கேட்டால்... என் மனைவி முந்திக்கொண்டு, “சூப்பரா சைக்கிள் ஓட்டுவார். ஒரு முறை போலீஸ்காரர் கூட, ஓவர் ஸ்பீடு என்று பைன் எல்லாம் போட்டார்” என்று சொல்வாள். அப்போதே கேள்வி கேட்டவர் ஒரு மாதிரி நக்கலாக நமட்டு சிரிப்பு சிரிப்பார்.