
3) கந்தர்ப்ப வித்யா.
கந்தர்ப்ப வித்யா கந்தர்ப்ப ஜனகாபாங்க வீக்ஷணI
கர்ப்பூரவீடி சௌரப்ய கல்லோலித ககுப்தடாII
அம்பிகையின் கருணை பகைவனையும் ரட்சிக்கும். அவளிடம் யாரிடமும் எந்த ஒரு பாகுபாடு கிடையாது. அவளைப் பொறுத்த வரை அனைவரும் அவளின் குழந்தைகள்தான். தாய்க்குக் குழந்தைகளிடம் எந்த பேதமும் கிடையாது. கேட்ட குழந்தைகளிடம்தான் அவளின் கருணை அதிகம் இருக்கும். ந்தக் குழந்தையைத் திருத்தி,நல்ல வழி காட்டுவதே அவளின் நோக்கம்.
ஈசனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட மன்மதனையும் அவளின் கருணை காத்து ரட்சிக்கிறது.
ஒருமுறை யோக தவத்தில் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து விட்டார் ஈசன். அம்பிகையும் தன் சாபம் நீங்க தவம் செய்ய காஞ்சி வந்து விட்டாள்.
அதைப் பயன்படுத்தி தாரகாசுரன் என்ற அசுரன், தவம் செய்து ஈசனின் மகனைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் கூடாது என்று வரம் வாங்கி விட்டான். தன் வரத்தின் பெருமையால் தேவர்கள், முனிவர்களை துன்புறுத்தி கொடுமை செய்தான். அதிலிருந்து தங்களைக் காக்க குமரன் அவதரிக்க வேண்டும் என்று நினைத்த தேவர்கள் மன்மதன் மூலம் ஈசனின் மேல் மலரம்பு விடச் செய்கிறார்கள்.
அதில் கண் விழித்த ஈசன் தன் தவம் கலைந்த கோபத்தில் நெற்றிக்கண்ணால் மன்மதனைத் தகனம் செய்து விடுகிறார்.
தாயை விடக் கருணா உள்ளவள் யார். எந்த ஒரு காரியத்திற்கும் காரணம் அறிபவள் அல்லவா அவள். காரணமும்,காரியமும் அவள்தனே.
அவள் ஆக்ஞையால் மட்டும்தான் அனைத்தும் நடக்கிறது. அவளே அறிவாள் அடுத்து என்ன நடக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்தவள் அவள் மட்டுமே. ஒரு பெண்ணாக . ரதியின் கதறலுக்கு மனம் இரங்கிய அன்னை, ஈசனிடம் வேண்டுகோள் வைத்து மன்மதனை உயிர்பிக்கிறாள். அன்னையின் கடைக்கண் பார்வை ஒன்றினாலேயே மனம் இரங்கி ஈசன் ரதியின் கண்களுக்கு மட்டும் மன்மதன் தெரிவான் என்று வரம் அளிக்கிறார்.
அவனால் உபாசிக்கப்பட்ட வித்யா ஸ்வரூபிணீ அம்பிகை.
தன் கடைக்கண் பார்வையால் அவனை மீண்டும் பிறப்பிக்கச் செய்தவள். ஹர நேத்ராக்னி ஸந்தக்த காம சஞ்ஜீவ நௌஷதி என்று லலிதா சஹஸ்ரநாமம் புகழ்கிறது.
கற்பூர வீடிகை என்பது ஒரு தாம்பூலம். அவளின் தாம்பூலம் நாலு திக்குகளையும் பரிமளிக்கச் செய்கிறது. கற்பூர வீடிகாமோத சமாகர்ஷி திகந்த்ரா என்றுதான் லலிதா நாமம் போற்றுகிறது.
ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, கேசரி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, முதலியவை கலந்த தாம்பூலத்தை கர்ப்பூர வீடிகா என்று அழைப்பார்கள். அவள் வாய் அமுதத்தைப் பருகவே அனைத்து உயிர்களும் காத்திருக்கின்றன என்கிறார் ஒரு கவிஞர்.
அம்பிகையை துவேஷித்ததால் மறுபிறப்பில் ஊமையாகப் பிறந்த ஸ்ரீமூகர் என்ற மகாகவி காளிதாசர் அம்பிகையின் தாம்பூலத்தைச் சுவைத்ததால் மகாகவி என்று அழைக்கப் பட்டவர் மூகபஞ்சசதீ என்று அம்பிகையின் கருணாமிர்தத்தை ஐநூறு பாடல்களாக எழுதினார்.
திருவானைக்காவல் அம்பிகையின் தாம்பூலம் மிகச் சிறப்பு வாய்ந்தது. ஒருமுறை வேதியர் ஒருவர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியிடம், கவி புனைவதில் வல்லமை தர வேண்டும் என்று வேண்டினார். அவருக்கு அருள் தர அம்பிகை வாயில் தாம்பூலத்துடன் சாதாரணப் பெண் வேடத்தில் சென்றாள். வேதியரிடம் கோவிலுக்குள் தாம்பூலம் உமிழ்வது தவறு. எனவே உன் வாயில் உமிழவா என்று கேட்க, கோபத்துடன் வேதியர் அவளை விரட்டி விடுகிறார்.
அதே நாளில் வரதன் என்ற பக்தர் கோயில் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். எனவே அம்பிகையிடம்,தாராளமாக என் வாயில் உமிழ்ந்து கொள் என்கிறார். அம்பிகையும் தன் வாய் தாம்பூலத்தை அவர் வாயில் உமிழ, அவரே மிகப்பெரிய கவியாகி, கவி காளமேகம் என்று அழைக்கப்படுகிறார்.
சிறந்த கல்வியறிவு, கலைஞானம், பெற அம்பிகைக்கு தாம்பூலம் படைத்து வழிபடுகிறார்கள். அன்னையாய் வருபவள் அவள்தான். இந்த லோகத்துக்கே அன்னையாய் இருப்பவள் அவள்.
அவளின் அமுதப்பால் உண்டு சம்பந்தர் கவி புனைந்தது போல் காளமேகமும் கவிமழை பொழிகிறார். கதம்பப் பூவின் வாசனையில் விருப்பமுள்ளவள், பஞ்ச க்ருத்ய பராயணா என்று போற்றப்படும் அவள், மனம், புத்தி, சித்தம், அஹங்காரம்,இதயம் என்னும் பஞ்ச தத்துவங்களைக் குறிக்கிறாள்.
தத்துவப் பொருளின் தாயாகினாள்- அவளே
முன்னின்று நம்மைக் காப்பாள் என்கிறது இந்த த்ரிசதீ நாமம்.

Leave a comment
Upload