
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா 19 ஏப்ரல் 2026-ஆம் ஆண்டு கொடியேற்றத்துடன் தொடங்கி மே 5 வரை நடைபெறவுள்ளது. இதில் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 28 மீனாட்சி திருக்கல்யாணம், ஏப்ரல் 29 தேரோட்டம் மேலும் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் மே 1-ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றன. இதைத் தொடர்ந்து மே 2-ஆம் தேதி கள்ளழகர் (சுந்தரராஜப் பெருமாள்) தேனூர் மண்டபத்தில், மண்டூக முனிவருக்கு (சுதபஸ் முனிவர்) சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு பகல் 11.30 மணிக்கும், அனுமார் பட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்வு பிற்பகல் 3.30 மணிக்கும் நடைபெறவுள்ளது. இதையடுத்து, இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் திருமஞ்சனமாகி, இரவு 12 மணிக்கு அழகர் தசாவதாரத்தில் காட்சியளிக்கிறார். மீண்டும் கள்ளழகர் கோலம் பூண்டு திங்கள்கிழமை மே 4-ஆம் அழகர் மலைக்குப் புறப்பட்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை சென்றடைவார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இத்திருவிழா, மதுரையின் கலாச்சார பாரம்பரியத்தைப் பறைசாற்றுகிறது.

புராணத்தில் மண்டூக முனிவர் பெற்ற சாபம்:
சுதபஸ் என்ற முனிவர், நூபுரகங்கையில் தீர்த்தமாடி, பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அந்தச் சமயத்தில் துர்வாச மகரிஷி, தன் பரிவாரங்களோடு அவ்வழியாக வந்தார். பெருமாளையே நினைத்துக் கொண்டிருந்த முனிவர், ரிஷி வந்ததைக் கவனிக்கத் தவறியதால் ஆத்திரமடைந்த துர்வாசர் 'மண்டூகோ பவ' (தவளையாகப் போகக் கடவாய்!) எனச் சாபமிட்டார். உடனே தவளையாகிப் போன சுதபஸ் முனிவர் சாபவிமோசனத்துக்கு வழி கேட்டபோது, நீ 'விவேகவதி தீர்த்தக்கரையில் (வைகை) தவம் செய்து கொண்டிரு. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள் அழகர் அங்கு வந்து உனக்குச் சாபவிமோசனம் கொடுப்பார்' அதன்படி வைகைக் கரையில் தவம் செய்து கொண்டிருந்த சுதபஸ் முனிவருக்குச் சாப விமோசனம் கொடுப்பதற்காகவே அழகர் மதுரைக்கு வந்து போனதாக ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
மண்டூக முனிவருக்குச் சாப விமோசன நிகழ்வு:

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வை எடுத்துரைக்கும் வகையில், தேனூர் மண்டகப்படி முன்பாக சிறிய திருக்குளம் வடிவமைக்கப்பட்டு அதில் நீர் நிரப்பப்பட்டு பூக்கள் மற்றும் மண்டூக முனிவரின் சிலை வைக்கப்பட்டும், நாரை ஒன்றும் கட்டிவைக்கப்பட்டிருக்கும். கள்ளழகர் கண்டாங்கி பட்டு உடுத்தி, கருட வாகனத்தில் எழுந்தருளி நாரைக்கு முக்தி அளிக்கும் வகையில் அங்குக் கட்டப்பட்டிருந்த நாரை பறக்கவிடப்படும். பின்னர் கள்ளழகர் முன்னிலையில், நம்மாழ்வார் திருமொழி பாடப்பட்டு, மண்டூக முனிவர் சிலைக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் சாப விமோசனம் வழங்கப்படும். இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வைகை ஆற்றில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்குச் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த கண் கொள்ளா காட்சியைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கள்ளழகரைத் தரிசனம் செய்து அருளைப் பெறுகின்றனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, மதுரை மீனாட்சி அம்மன் சித்திரைத் திருவிழாவின் ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.


Leave a comment
Upload