
அன்புள்ள திருமாவளவன் அவர்களுக்கு வணக்கம்.. !
என் பெயர்... கோத்திரம்... நட்சத்திரம் எல்லாம் உங்களுக்கு வேண்டாம். ஆனால், நான் ஒரு இந்து. ‘இந்து என்றால் திருடன் என்று அர்த்தம்’ என்று திமுக தலைவர் அன்று சொன்னாரே...! ‘திமுகவில் ஒரு கோடி இந்துக்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்’ என்று ஆர் எஸ் பாரதி சமீபத்தில் சொன்னாரே, அதெல்லாம் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.
நான் திமுக உறுப்பினர் இல்லை. ஆனால், இந்து கோயில்களுக்குப் போவேன், சாமி கும்பிடுவேன், நெற்றியில் விபூதி அல்லது திருமண் இட்டுக் கொள்வேன். நீங்கள் அதை தேர்தல் சமயத்தில் மாத்திரம் செய்வீர்கள். சிதம்பரத்தில் தீட்சதர்களிடம் போய் வாக்கு கேட்டீர்களே நினைவிருக்கிறதா? இப்படி சில சமயம் மட்டும் நீங்கள் இந்து வேஷம் போடுவீர்கள். ரம்ஜானின் போது நோன்புக் கஞ்சி குடிப்பீர்கள், கிறிஸ்மஸ் நாளில் வாழ்த்து சொல்வது போல் கூட சமபவம் உண்டு. .என்ன செய்ய?! அரசியலில் வாக்கு பெற உங்களுக்கு நிறைய முகமூடிகள் தேவைப்படுகிறது. அது போகட்டும்.
சமீபத்தில் மனுஸ்மிருதி என்ற நூல் பற்றியும் அதில் இந்து பெண்கள் அனைவரும் விபச்சாரிகள் என குறிப்பிட்டுள்ளது என்றும் நீங்கள் பேசியிருக்கிறீர்கள். நீங்கள் இப்படி தரக் குறைவாக பேசியது போன மாதம் ஒரு வெபினாரில். ஆனால் போன வாரம்தான் இது பரபரப்பான செய்தியாகிப் போனது.
நீங்கள் இப்போதெல்லாம் மேடை மற்றும் பேட்டிகளில் அடிக்கடி சொல்லும் வார்த்தை மனுதர்மம் மற்றும் சனாதன தர்மம். இவை இரண்டும் தான் உங்களுக்குப் பிடித்தமானது. இந்துக் கடவுள்களை கேவலப்படுத்துவது, விமர்சிப்பது போன்றவை உங்களது அன்றாட பொழுதுபோக்கு. இதையெல்லாம் சொல்லிவிட்டு, பெரியாரையும் துணைக்கு அழைத்துக் கொள்வீர்கள். இது ஒரு வகையான தற்காப்பு.
பாரதிய ஜனதா, இந்துத்துவா கொள்கைகளை பரப்புகிறது என்பது நீங்கள் உட்பட எல்லோராலும் பரவலாக சொல்லப்படும் கருத்து அல்லது குற்றச்சாட்டு என எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். பாரதிய ஜனதா எனும் கட்சி ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பரப்புகிறது என்பதும் உங்கள் கருத்து அல்லது ஆதங்கம். அல்லது இரண்டுமே என்றும் சொல்லலாம்.

ஆர்எஸ்எஸ், இந்தியாவிற்கு சுதந்திரம் வருவதற்கு முன்பே தொடங்கப்பட்ட இயக்கம். அது தேசபக்தி மற்றும் தனி மனித ஒழுக்கத்தை போதித்தது. இன்றைக்கு நம்மிடையே இருப்பது ஒரு குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய அமைச்சர்கள், குடியரசு துணைத் தலைவர், பாராளுமன்ற, சபாநாயகர், 18 மாநில முதல்வர்கள், 29 ஆளுநர்கள், 417 பாராளுமன்ற உறுப்பினர்கள், 1600 க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள். இவர்கள் எல்லோரும் ஆரம்பத்தில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களாக இருந்து, பிறகு ஜன சங்க கட்சியின் உறுப்பினராக இருந்து, ஜன சங்கட்சி பாரதிய ஜனதா கட்சியாக உருமாறிய போது, அந்த கட்சியில் தொடர்ந்து இருந்து வந்தவர்கள்.

குடியரசுத் தலைவர் பற்றி உங்கள் மொழியில் சொல்வதென்றால், தலித் வகுப்பைச் சேர்ந்தவர். இந்தியாவின் உயர்பதவியில் அவரை வைத்து அழகு பார்க்கிறது, நீங்கள் சொல்லும் இந்துத்துவா கட்சி.

உங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர் ஸ்டாலினை, (ஒரு வேளை அவர் முதல்வரானால்!!!!) ஒரே ஒரு நாள் மட்டுமாவது உங்களை முதல்வராக உட்கார வைக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்... முதலில் இப்படி ஒரு கோரிக்கையை அவரிடம் வைக்கும் துணிச்சலாவது உங்களுக்கு இருக்கிறதா என்பதே எனக்கு சந்தேகம். ஏனெனில் உங்களுக்கு பொதுத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுத்த கட்சி அது. நீங்களும் அதை எதிர்த்து வாய் பேசாமல் கொடுத்ததை அப்படியே ஏற்றுக் கொண்டீர்கள். சரி..இதெல்லாம் அரசியல் உடன்படிக்கை என விட்டு விடுவோம்!
உங்கள் சமீபத்திய சர்ச்சை பேச்சிற்கே வருகிறேன்..!
மனு என்பவர் யார்? அவர் இப்படி ஒரு நூல் எழுதி இருக்கிறாரா என்பதே நிறைய இந்துக்களுக்கு தெரியவில்லை. உங்கள் வாதப்படி அவர் அப்படி எழுதி இருப்பது உண்மையாகவே இருந்தாலும், இப்போது மனுஸ்ருதிப்படியா அரசாங்கம் நடக்கிறது?! அம்பேத்கர் எழுதிய சட்டப்படி தானே இந்திய அரசு, மாநில அரசு என மாநிலங்களிலும் ஆட்சி அரசாங்கம் நடக்கிறது?!

‘தாழ்த்தப்பட்டவர்களை போல் எங்களை தலைமைச் செயலாளர் மூன்றாம் தரமாக நடத்தினார்’ என்று ஒரு திமுக எம்பி சட்டமன்ற வளாகதின் வெளியே பக்ரங்கமாகவே செய்தியாளர்களிடம் சொன்னார். அப்போது கூட்டணி தர்மம் உங்களை அடக்கி வாசிக்க வைத்தது.
‘தலித் வகுப்பினரை நீதிபதி ஆக்கியது திமுக போட்ட பிச்சை’ என்று இன்னொரு திமுக கட்சிப் பொறுப்பாளர் சொன்னார். மீண்டும் கூட்டணி தர்மம் உங்களை அடக்கி வாசிக்கச் செய்தது.
காரணம், பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகளுக்கு திமுக 2 தொகுதிகளை ஒதுக்கியது. ஒரு தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார், நீங்கள் மற்றொரு சின்னத்தில் போட்டியிட்டீர்கள். அந்த ஒரு கோடி திமுக உறுப்பினர்களில் ரவிக்குமாரும் இப்போது ஒருவராகி விட்டார். ஆனால், அவர் இப்போதும் விடுதலை சிறுத்தை கட்சியின் முக்கிய பொறுப்பாளர்.
இது மட்டுமின்றி, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பாதி இடங்களில் உங்கள் கட்சி உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று திமுக இப்போதே உங்களை நிர்ப்பந்திப்பதாக செய்திகள் வருகிறது. இது எந்த கூட்டணி தர்மத்தில் வருகிறது?! உண்மையில் உங்கள் கட்சியின் பெயர் விடுதலை சிறுத்தைகள் கட்சியா அல்லது பினாமி திமுகவா?!
இந்த கேள்வியை உங்களிடம் கேட்டால், உங்களின் பதில் என்னவாக இருக்கும்?! இதுபற்றி எல்லாம் உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. உங்களுக்கு தெரிந்ததெல்லாம் இந்து கடவுள்களை கேவலப்படுத்துவது, மனுதர்மம், சனாதன தர்மம் என்று நடைமுறையில் துளியும் இல்லாததைப் பற்றி யாரையோ திருப்திப்படுத்த பேசுவது.
யோசித்துப் பார்த்தால், உங்கள் நிலைமை மிகவும் பரிதாபம்தான். அய்யோ பாவம்!.. பதவி ஆசை உங்களைப் பாடாய் படுத்துகிறது.. உங்களுக்கு ஆதரவளிக்கும் வேண்டியவர்களுக்கு ஏற்ப ஒத்திசை பாடாமல் வேறென்ன செய்வீர்கள் நீங்கள்?

நாளை திமுகவே கூட பாரதிய ஜனதாவுடன் திடீர் கூட்டணி அமைக்கலாம். ஏற்கனவே அதற்கு முன் உதாரணம் இருக்கிறது. அப்போது மனுதர்மம், சனாதன தர்மம் பற்றியெல்லாம் திமுக ஒரு போதும் பேசாது... அந்த நிலை வந்தால் நீங்கள் பாவம் என்ன செய்வீர்கள்? அதுதான் என் கவலை திருமா!

வைகோ முன்பு ஒரு முறை ‘தேர்தல் செலவுக்கு நான் திருமாவளவனுக்கு 25 லட்ச ரூபாய் தந்தேன்’ என்று சொன்னபோது, நீங்கள் எப்படி மௌனமாகவே இருந்தீர்கள்?! அதே வித மௌனமாகவே பாவம் நீங்கள் வருங்காலத்திலும் திமுகவிடம் இருந்தாக வேண்டும்... உங்களுக்கு வேறு வழியே இல்லையே திருமா சாமி!

சில மாதங்களுக்கு முன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து சென்னை மாநகராட்சியை, தனித்தொகுதி வரையறையில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை மனு வைத்தீர்கள்.. அந்தக் கோரிக்கையை நீங்கள் ஏன் திமுகவிடம் வைக்கக்கூடாது? திமுகவை ஏற்கச் சொல்லி அதை ஏன் நீஙகள் வலியுறுத்தக் கூடாது?!
நீங்கள் குறிப்பிடும் மனு ஸ்மிருதி, தமிழ்நாட்டில் பாடநூலில் சேர்க்கப்பட்டு இருக்கிறதா அல்லது யாராவது தனியாக வகுப்பு எடுத்து அதனை சொல்லித் தருகிறார்களா? இந்தியாவில் மனு ஸ்மிருதி அதிகாரபூர்வ சட்டமாக தற்போது அமுலுக்கு வந்து விட்டதா என்ன?! ஏதோ ஒரு காலத்தில் (சுமார் 1700களில்) எவரோ ஒருவர் எழுதி வைத்த ஒருவித நூலை.. தற்போது யாருக்கும் தெரியாத அல்லது யாரும் அறியாத ஒன்றை கையில் வைத்துக்கொண்டு, அரசியல் பண்ணும் உங்களைப் பார்த்தால் எனக்கு மிகவும் பரிதாபமாகவே இருக்கிறது.

நீங்கள் இந்து மதத்தைப் பற்றியும், இந்து மத நூல்களைப் பற்றியும் சரிவர தெரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இந்து மதத்தில் எவரும் சேர்த்துக் கொள்ளப் படுவதும் இல்லை எவரும் விலக்கப்படுவதும் இல்லை.
ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன், கேளுங்கள்... சமீபத்தில் ஒரு கோயில் குருக்கள் மகளை, தலித் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் அந்த பெண்ணின் பெற்றவர்களுக்கு தெரியாமலே அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். அந்த குருக்கள், பெற்றவர் என்ற முறையில் ‘என் மகளை காணவில்லை’ என்று வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் பெண் தன் விருப்பப்படி யாரையும் திருமணம் செய்து கொள்ள தடையில்லை என்று அந்த திருமணத்தை அங்கீகரித்தது. அத்தோடு அந்த குருக்கள் இந்த பிரச்சனையை அப்படியே விட்டு விட்டார். இதற்காக கௌரவ அல்லது ஆணவக் கொலைகள் எதுவும் நடக்கவில்லை. கௌரவக் கொலையின் ஆணிவேர் யார் என்று சொல்லி உங்களை நான் சங்கடப்படுத்த விரும்பவில்லை. அந்த குருக்கள், ‘அந்த சட்டமன்ற உறுப்பினரை நான் என் மகன் மாதிரி வளர்த்தேன். அவரே எனக்கு இப்படி ஒரு காரியம் செய்டு விட்டார்’ என வருத்தப்பட்டதோடு சரி!
நீங்கள் சொல்லும் தீண்டாமை, சனாதன தர்மம் கடைப்பிடிக்கும் அந்த குருக்கள் வீட்டில் இல்லை. அது எங்கிருக்கிறது என்பது உங்களுக்கும் தெரியும். ஆனால், அதை சொல்லும் துணிச்சல் தான் உங்களுக்கு இன்று இல்லை.
‘தமிழ்நாட்டில் தலித் ஒருவர் முதல்வர் ஆக வாய்ப்பில்லை’ என்று உங்கள் ஆதங்கத்தை நீங்கள் அடிக்கடி பதிவு செய்கிறீர்கள். ஆனால், அதற்கு நீங்கள் தனிப்பட்ட முறையில் எடுத்த முயற்சி என்ன... ஏன்? உங்களால் முடியாது. தலித் வகுப்பை சேர்ந்தவர்களை, நிதியமைச்சராக, பொதுப்பணித்துறை அமைச்சராக, சுகாதாரத்துறை அமைச்சராக ஆக்கச் சொல்லி உங்கள் கூட்டணித் தலைவர்களை உங்களால் ஏன் வற்புறுத்த இயலவில்லை?! உங்கள் கட்சியை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அவர்கள் வற்புறுத்துவது போல் இதை நீங்கள் எப்போது வற்புறுத்துவீர்கள்?!. உங்களுக்கு அதற்கான கேள்வி கேட்கும் துணிச்சல் இல்லையா?!.

உங்களது வெளிப்படையான இந்து மத எதிர்ப்புக்கான காரணத்தை நானும் வெளிப்படையாகவே சொல்லட்டுமா?!
பாரதிய ஜனதா என்ற பிம்பம் உங்களை சமீப காலமாக மிகவும் பயமுறுத்துகிறது. அதனால் தான் ராமர் கோயில் கட்டினால் 100 கோடி இந்துக்கள் ஒன்றாகி விடுவார்கள் என்ற பயத்தை நீங்கள் வெளிப்படுத்துடிறீர்கள். இப்போது கூட சட்டம் ஒழுங்கு கெடும் என்று பாரதிய ஜனதாவின் யாத்திரைக்கு தடை விதிக்க முதல்வருக்கு நீங்களாகவே கடிதம் தருகிறீர்கள். இதன் மூலம் பாரதிய ஜனதாவை நீங்கள் ஒரு பிரச்சனையாக பார்க்கிறீர்கள் என நன்றாகவே தெரிகிறது. ஆனால், அவர்கள் உங்களைப் பற்றி பெரிதாக கவலைப்படுவதாக தெரியவில்லை. அவர்கள் வேலையை அவர்கள் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். அதுதான் பாரதிய ஜனதா.
இப்படிக்கு,
மனுஸ்மிருதி பற்றி எதுவும் தெரியாத ஒரு அப்பாவி இந்து!

Leave a comment
Upload