கண்ணபிரான் கற்ற கல்வி...

கண்ணபிரான் வெண்ணெயில் ஆசை கொண்டு திரிவதைக் கண்ட ஆய்ப்பாடியிலுள்ளவர்களனைவரும் அவனுக்கு வேண்டிய வெண்ணெயைக் கொடுக்க மாட்டார்களோ! இவன் ஏன் அதைக் களவு செய்ய வேண்டும்? பிறகு அகப்பட்டுக் கொண்டு ஏலாப் பொய்கள் உரைக்க வேண்டும்? உண்மையில் திருவாய்ப்பாடியிலுள்ளவர்கள் அனைவருமே கண்ணனிடம் அன்புடையவர்கள்தாம். அவன் கேட்கும் போதெல்லாம் வெண்ணெயை வாரிக் கொடுப்பவர்கள்தாம். ஆனால் அதுவே அளவுக்கதிகமாகி விட்டால், இவனுடம்புக்கு ஆகாதே என்று அவர்கள் இவன் அறியாத வண்ணம் வெண்ணெயை ஒளித்து வைப்பார்கள். அவர்கள் ஒளித்து வைக்க, வைக்க, இவனுக்கும் அதில் ஆசை அதிகமாகும். எனவே அதைத் திருடியாகிலும் பெற முயல்வான். திருவாய்ப்பாடியிலுள்ள ஒரு இல்லம் தவறாமல் சென்று இவன் செய்யும் தீம்புகள் கணக்கில் அடங்கா. இப்படி இவன் செய்யும் தீம்புகளைத் தடுக்க முடியாத ஆய்ப் பெண்கள் யசோதையிடம் சென்று அவன் செய்யும் தீம்புகளையெல்லாம் முறையிடுகிறார்கள் என்று ஹரிவம்சத்திலும் ஸ்ரீபாகவதத்திலும் காணப்படுகிறது.
இதையநுஸரித்து ஆழ்வார்களும் இவ்வகையில் பல பாசுரங்களை அருளிச் செய்துள்ளனர். இப்படிப் பெரியாழ்வார் ஒரு பதிகமும், திருமங்கையாழ்வார் ஒரு பதிகமும் அருளிச் செய்துள்ளனர். அவற்றில் சில பாசுரங்களை அனுபவிப்போம்.
வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை
வெற்பிடையிட்டதனோசை கேட்கும்
கண்ணபிரான் கற்றகல்விதன்னைக்
காக்ககில்லோம் உன்மகனைக் காவாய்
புண்ணில் புளிப்பெய்தாலொக்கும்
தீமை புரைபுரையாலிவை செய்யவல்ல
அண்ணற்கண்ணானோர் மகனைப் பெற்ற
அசோதைநங்காயுன் மகனைக் கூவாய்
(பெரியாழ்வார் திருமொழி 2-9-1)
ஊரிலுள்ள இடைப்பெண்கள் சிலர் யசோதையிடம் வந்து முறையிடுகிறார்கள். “கடைந்தெடுத்து உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயை, சிறிதும் மீதம் வையாமல் அமுது செய்து விடுகிறான் கண்ணன். அதுவாவது போகட்டும்; அது இருந்த பாத்திரத்தை கல்லிலேயிட்டு உடைக்கிறான். இது எதற்காக என்றால் அது உடைகிறபோது எழும் ஓசையைக் கேட்பதற்காக என்கிறான்! அல்லது தன்னைப் பின் தொடராதபடி எல்லோருடைய கவனத்தையும் திசை திருப்புவதற்காக இப்படிச் செய்கிறானோ! ஏனெனில் இப்படிச் செய்யும் வழக்கம் இவனுக்கு எப்போதுமே உண்டு. ‘எண்ணெய்க் குடத்தையுருட்டி இளம் பிள்ளை கிள்ளியெழுப்பி கண்ணைப் புரட்டி விழித்துக் கழண்டு செய்யும் பிரானே’ (பெரியாழ்வார் திருமொழி 2-4-6) என்று நீயே அவனைக் கூறியதில்லையா? அகத்திலுள்ளவர்கள் கவனத்தை திசை திருப்புவதற்காக எண்ணெய்க் குடத்தை உருட்டுவதும்; உடனே அகத்திலுள்ளார் எண்ணெயை இறைப்பதும் வழிப்பதுமா யிருக்கையில் அத்தைவிட்டு விட்டு இங்கே ஓடிவர வேண்டும்படி, உறங்குகின்ற குழந்தையைத் தேள் கொட்டினாப் போலே அலறும்படியாகக் கிள்ளியெழுப்புவதும், ஏற்கனவே இச்செயலால் பயந்திருக்கிறவர்களை மேலும் பயமுறுத்துகைக்காக உள்ளிமை வெளியிலே தெரியும்படி கண்ணைப் புரட்டி விழித்து, பொறுக்க வொண்ணாத தீம்புகள் செய்பவனன்றோ கண்ணன்! அது போலவே இங்கும் வெண்ணெய் விழுங்கிய கண்ணன் வெறும் பாத்திரத்தைக் கல்லிலிட்டு உடைக்கிறான்” என்று ஆய்ச்சிகள் யசோதையிடம் சொல்ல, யசோதை “நீங்கள் தான் உங்கள் இல்லங்களை இவன் புகமுடியாதபடி ஜாக்ரதையாகப் பாதுகாத்துக் கொள்வது தானே?” என்று சொல்ல ஆய்ச்சிகள், “யாருடைய களவை வேண்டுமானாலும் தடுத்து விடலாம். ஆனால் இவன் கற்ற களவு இருக்கிறதே. இதிலிருந்து ஒருவருமே காத்துக் கொள்ள முடியாது. நீயே உன் மகனைக் காவலிட்டு வைத்தால்தான் இதைத் தடுக்க முடியும்” என்று சொன்னார்கள். “சிறு பிள்ளைகள் அப்படித்தான் தீம்புகள் செய்யும், நீங்கள்தாம் அவர்கள் அறியாமல் செய்பவைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்றாள் யசோதை.
உடனே அவர்கள் “புண்ணிலே புளியைச் சொரிந்தால் எரிச்சலூட்டுவது போல், பொறுக்க முடியாத தீம்புகளையன்றோ இவன் செய்கின்றான்! வீடுகள்தோறும் தீம்புகள் செய்பவனாய்க் கள்வர்க்குத் தலைவனாய் உள்ளவனை மகனாகப் பெற்ற யசோதாய்! உன்மகனை அழைத்துக் கொள்வாயாக” என்றார்கள்.
திருவுடைப் பிள்ளைதான் தீயவாறு தேக்கமொன்றுமிலன் தேசுடையன்
உருகவைத்த குடத்தொடு வெண்ணெய் உறிஞ்சியுடைத்திட்டுப் போந்து நின்றான்
(பெரியாழ்வார் திருமொழி 2-9-3)
“இவனோ செல்வத்தினால் வளர்பிள்ளை. தன்வீட்டில் ஒன்றும் கிடைக்காமல் திருடுகிறானோ! இல்லையே! செல்வச் செருக்காலே செய்யும் தீம்புகளன்றோ இவை! ‘நாம் இத்தகைய தீம்புகளைச் செய்வது நமக்குத் தகுதியன்று என்று நினையாமல் இதையே தனக்குப் பெருமையாக நினைத்துத் தீம்புகள் செய்கிறான். உருக்குவதற்காக வைத்த வெண்ணெயைப் பாத்திரத்தோட உறிஞ்சிவிட்டு பாத்ரத்தையும் உடைத்து விட்டுச் சென்றான்” என்கிறாள் மற்றொருத்தி.
திருமங்கையாழ்வார் அருளியுள்ள ‘மானமுடைத்து உங்களாயர்’ எனும் பதிகத்திலிருந்து ஒரு பாசுரம்:
காலையெழுந்து கடைந்தவிம்மோர் விற்கப்போனேன் கண்டே போனேன்
மாலை நறுங்குஞ்சி நந்தன் மகனல்லால் மற்று வந்தாருமில்லை
மேலையகத்து நங்காய்! வந்து காண்மின்கள் வெண்ணெயே யன்றிருந்த
பாலும் பதின்குடங்கண்டிலேன் பாவியேனென் செய்கேனென் செய்கேனோ
(பெரியதிருமொழி 10-7-2)
அசோதையின் வீட்டிற்குக் கீழண்டை வீட்டில் இருக்கும் ஓராய்ச்சி முறையிடும் பாசுரம் இது: “விடியற் காலையில் எழுந்து மிகவும் சிரமப்பட்டுக் கடைந்த மோரை விற்பதற்காக நான் போகும் போது எதிரில் உன் மகன் கண்ணன் வருவதைக் கண்டு அப்போதே திடுக்கிட்டேன். ‘நம் வீட்டில் புகுந்து என்ன தீம்பு செய்யப் போகிறானோ!’ என்று பயந்து கொண்டே, போக வேண்டியதைத் தவிர்க்க முடியாமையினாலே போனேன். இப்போது வந்து பார்த்தால் வெண்ணெயும் காணோம். பத்துக் குடங்களில் வைத்திருந்த பாலும் காணோம். விசாரித்துப் பார்த்ததில் நந்தகோபன் குமரனைத் தவிர வேறு யாரும் வந்ததாகத் தெரியவில்லை. மேலையகத்து நங்கையான யசோதையே! வந்து பாருங்கள். தண்டிக்க வேண்டியவர்களே வாளா விருக்கும்போது பாவியேன் நானென் செய்கேன்!” என்கிறாள்.
நங்காய் என்று ஒருத்தியை அழைத்து, மேலே காண்மின்கள் என்றிருக்கையாலே, ஒருத்தியை அழைத்தவாறே கண்ணபிரானது தீம்புகளைக் கேட்கையிலுள்ள ஆவலினால் பல பெண்கள் எழுந்தோடி வர அவர்கள் எல்லோரையும் நோக்கி “வந்து காண்மின்கள் என்கிறாள்” என்பது ஸ்ரீஉ.வே.காஞ்சீ ஸ்வாமியின் தீபிகையுரை.
இப்படி இவர்கள் முறையிட்டதும் யசோதை “உங்கள் வீட்டில் மட்டுமா? இங்குமப்படியே செய்கிறான்” என்கிறாள்.
அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள் ஆயிரநாழி நெய்யை
பஞ்சிய மெல்லடிப்பிள்ளைகள் உண்கின்று பாகந்தான் வையார்களே”
(பெரியதிருமொழி 10-7-10)
“இத்திருவாய்ப்பாடியில் களவு செய்து உண்பவன் இவனொருவனேயோ! தன்னேராயிரம் பிள்ளைகளோடு மெல்லடியிட்டு இவன் வந்து ஆயிரம் நாழி நெய்யையும் பருகிவிட்டுச் சிறிதும் மிச்சம் வைப்பதில்லை” என்கிறாள். நெய், பால் இவற்றையுண்பதற்கு உள்ளே புகும்போது ஒருவர்க்கும் தெரியாமல் இருப்பதற்காகப் பூனைபோல் அடி ஓசைப்படாமல் மெத்தெனப் புகும்படியை பஞ்சிய மெல்லடிப் பிள்ளைகள் என்பதனால் தெரிவிக்கிறான். கண்ணபிரானும் ‘சிறியானோர் பிள்ளையாய் மெள்ள நடந்திட்டு’ என்கிறபடியே ஒருவருக்கும் தெரியாமல் பொய்யடியிட்டுப் போய், களவு செய்பவனல்லவோ! அவனுடைய தோழர்களும் அவனைப் போலவே செல்கின்றனர். ‘இப்படிப் பட்டவனை அழைத்திட நான் அஞ்சுகிறேன்’ என்றாள் யசோதை.
தீம்பு செய்யும் பிள்ளைகளை இப்படி ஆணாட விட்டிருக்கலாமோ? பிள்ளையை அடக்க வேண்டியது தாயினுடைய கடமையன்றோ! அவள் இப்படி ஒன்றும் செய்யாமலிருப்பது சிறிதும் தகாது. அவரவர்கள் தத்தம் இல்லங்களில் தயிரும், பாலும் நெய்யும் பறிகொடுத்துப் படும் அவஸ்தைகளைக் கண்டும் ஒருத்தி, தன் மகனை தண்டிக்காமல் கிடப்பது நியாயமன்று என்று ஊரெல்லாம் அவளைப் பழி தூற்றினவாறே அவர்களில் ஒருத்தியை நோக்கி யசோதை கூறுகிறாள் (பெரியதிருமொழி 10-7-8):
தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலும் ஓரோகுடம்துற்றிடுமென்று
ஆய்ச்சியர் கூடியழைக்கவும் நானிதற்கெள்கியிவனை நங்காய்
சோத்தம்பிரான் இவை செய்யப் பெறாயென்று இரப்பன் உரப்பகில்லேன்
பேய்ச்சி முலையுண்ட பின்னை இப்பிள்ளையைப் பேசுவதஞ்சவனே.
தயிரையும், பாலையும் நெய்யையும் கண்ணன் குடம் குடமாகப் பருகி விடுகிறான் என்று இடைச்சிகளெல்லாரும் திரண்டு முறையிட்டால் நான் வருந்தாமலில்லை. ஆனாலும் இவனைத் தண்டிக்க என்னால் முடியாது. மிகவும் நல்லவிதமாக அவனை எவ்வளவு வேண்டிக் கொள்ள முடியுமோ அவ்வளவு வேண்டிக் கொண்டுதானிருக்கிறேன்; “பிரானே! உன்னைக் கையெடுத்துக் கும்பிடுகிறேன்; இப்படிப்பட்ட காரியங்களை நீ செய்யாதே” என்று வேண்டிக் கொள்வேனே அன்றி இவனை மிரட்ட என்னால் முடியவில்லை. இவன் பூதனையினுடைய முலையுண்டு அவளை மாய்த்த பின்னர் இவனைக் கடிந்து ஒரு வார்த்தை சொல்ல நான் அஞ்சுகிறேன்” என்று பதில் சொல்லி விட்டாள்.
கண்ணபிரான் என்ன தீம்பு செய்தாலும் அவனைக் கண்டிக்க யசோதைக்கு மனம் வருவதில்லை. “உன்னை நான் என் கையில் கோலால் நொந்திட மோதவும் கில்லேன்” (பெரிய திருமொழி 10-4-8) என்று அவளே கண்ணனை நோக்கிச் சொல்லுகிறாள். எனவே தான் ஆண்டாளும் “அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும்” (நாச்.திரு. 3-9) என்று, கண்ணனை பயப்படும்படியாக மிரட்டாமல் (பயப்படாதிருக்கும்படி பொய் மிரட்டல் மிரட்டி) அவன் தீம்பிலே கைவளரும்படி யசோதை விட்டு வைத்திருக்கிறாள் என்கிறாள்.

Leave a comment
Upload