
அறிவின் பலமும், கல்வி தரும் மேன்மையும் மனத் திண்மையும்,உடல் உறுதியும் கொண்ட புதிய தலைமுறை பெண்கள் இன்று எல்லா துறைகளிலும் கால் பதித்து தம் அடையாளத்தை நிறுவி வருகிறார்கள். வயல்வெளி முதல் வான்வெளி வரை பெண்களின் கரங்கள் சாதனைகளைப் எழுதி வருகின்றன. பெண் எழுச்சியின் மற்றும் ஓர் அடையாளமாக ஆஸ்திரேலிய நாட்டின் ராணுவத்தை வழி நடத்த சூசன் கோயல் என்னும் வீரப்பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
கான்பெர்ரா பாராளுமன்றத்தில் இந்த வாரம் நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அங்கு ராணுவத்தளபதியாக உள்ள லெப்பிடினண்ட் ஜெனரல் சூசன் கோயல் ஜூலை மாதம் முதல், தலைமை தளபதியாக பொறுப்பேற்று வழி நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..தற்போது தலைமைப் பொறுப்பில் இருக்கும் சைமன் ஸ்டூவர்ட் ஜூலையில் ஒய்வு பெறும் போது சூசன் அப்பொறுப்பினை ஏற்றுக் கொள்வார் என்றும் அந்த அறிவிப்பு கூறுகிறது.
"நாட்டின் 125 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக இராணுவத்தை ஒரு பெண் வழி நடத்துவார்" என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பேனிஸ் கூறினார். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பு அந்நாட்டு பெண்களிடையே மட்டுமன்றி , உலகப் பெண்கள் அரங்கில் மகிழ்ச்சி அலைகளைப் பரவ செய்துள்ளது.
இராணுவத்தில் பெண்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அந்நாட்டின் அரசு, அதிகமாக பெண்களை அமர்த்தி உள்ளது.2030 ஆண்டுக்குள் இராணுவத்தில் 25% பெண்கள் பொறுப்பு வகிக்க வேண்டும் என்பது அவர்களது இலக்கு.
கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் போதே சூசன் ராணுவப்பணிக்கு ADFA ( Australian Defence Force Academy )ஆல் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கக்கப்பட்டார் , 1987 இல் ராணுவத்தில் சேர்ந்த அவர் , பல்வேறு உயர் பொறுப்புகளில் திறம்பட பணியாற்றி உள்ளார்.மத்திய கிழக்கில் ஆஸ்திரிலேய அரசு நடத்திய போர் வியூகங்களை தலைமை ஏற்று நடத்தியவர் சூசன்.அவ்வாறே அரபு நாடுகளில் நடத்திய "ஆபரேஷன் அக்கார்டியன்" இவரது தலைமையில் நடந்தது.
தற்போது கூட்டுத் திறன்களின் தலைவராக (Chief of Joint Capabilities) பணியாற்றி வருகிறார். ஜூலை முதல் ஆஸ்திரிலேய இராணுவத்தின் தலைமை தளபதியாக நாட்டின் பொறுப்பேற்கிறார் .
AM (Order of Australia,), CSC( Conspicuous Service Cross,) DSM Distinguished Service Medal போன்ற பதக்கங்கள் அவரது அர்ப்பணிப்பு மிகுந்த சேவைக்குப் பெற்ற விருதுகளாக அவரது சீருடையை அலங்கரிக்கின்றன. இந்த ராணுவ விருதுகளுக்கு மிகவும் தகுதி வாய்ந்தவராக தன்னை உருவாக்கிக் கொண்டுள்ள சூசன் தன் பணிக்காலத்தில் மேலும் சிறப்பாக செயல்படுவார் என்று உலகமே நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறது .
"you cannot be what you cannot see", என்னும் புகழ் பெற்ற வரியை விருது வாக்காக கொண்டுள்ளார் சூசன். அவரைக் காண்போர் அனைவருக்கும் அவரே வழிகாட்டியாக , முன்மாதிரியாகவும் விளங்குகிறார்.
150 ஆண்டுகளுக்கு முன்பே சுதந்திரப்போரில் படைகளை நடத்திச் சென்று ஆங்கிலேயரை எதிர்த்த ஜான்சி ராணியின் வழி வந்த நம் இந்தியப் பெண்களும் நம் இந்திய நாட்டின் இராணுவத்தில் உயர் பொறுப்புகள் மட்டும் அன்றி முப்படைகளின் தலைமைப் பொறுப்பை வகிக்க வேண்டும் என்று நம் மனம் விரும்புகிறது .
படை நடத்த வருகிறோம் யாம் !!

Leave a comment
Upload