தொடர்கள்
Daily Articles
வாசி யோசி.. - 11 - வேங்கடகிருஷ்ணன்

2020908202455586.jpg

வெற்றிக்கு சில புத்தகங்கள்...

வாருங்கள் வாசிப்போம்; வாசிப்பை நேசிப்போம்...

20201005153609212.jpg

10 - 10 - 10

இது என்ன புதிய விளையாட்டா? 10 - 10 - 10 ஏதாவது புரிகிறதா? இது ஒரு புகழ்பெற்ற மேலாண்மை நிபுணர் எழுத்தாளர், ஆலோசகற் சுசி வெல்ச் எழுதிய புத்தகம். இது ஒரு உத்தி. இதனுடைய விசேஷம், இதில் உள்ள எளிமைத் தன்மையில் இருக்கிறது. முடிவெடுக்கும் உத்திகள் அனைத்தும் அலுவலகச் சூழலில் வியாபார முடிவுகளை எடுப்பதற்காக நீங்கள் பயன்படுத்துபவை. எம்பிஏ வகுப்புகளில் தனி பாடமாக இது சொல்லித்தரப்படும். ஆனால் 10 10 10 அது போல் அல்ல. நீங்களும் நானும் ஏன் யார் வேண்டுமானாலும், இதை சிரமமில்லாமல், சுலபமாக புரிந்து கொண்டு உபயோகப்படுத்த முடியும். இதனை உபயோகிக்க உங்களுக்கு பேப்பர், பேனா தேவை இல்லை, கம்ப்யூட்டர் வேண்டாம், கால்குலேட்டர் வேண்டாம். எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் மிகச் சில நிமிடங்களில் நீங்கள் முடிவுக்கு வர உதவும், அற்புத உத்தி இது. முடிவெடுக்க மட்டும்தானா? என்று கேட்டால் இல்லை எந்த ஒரு வேலையும் துவங்குவதற்கு முன் 10 10 10 உத்தியை பயன்படுத்தி சிந்தித்தால், வரப்போகும் பிரச்சினையைக் கூட எளிதில் கணிக்கலாம்.

ஓகே. இப்போது விவரமாக பார்ப்போம். 10 10 10 என்பதன் அர்த்தம் 10 நிமிடங்கள் பத்து மாதங்கள் பத்து வருடங்கள்..

இதை சுலபமாக புரிந்துகொள்ள இந்த உதாரணத்தை தருகிறேன். நள்ளிரவில் திடீரென்று விழித்துக் கொள்கிறீர்கள். உங்களுக்கு நல்ல பசி. எழுந்து வந்து கிச்சன் லைட்டை போட்டு தேடுகிறீர்கள். ஆனால் சாப்பிட எதுவும் இல்லை. பிரிட்ஜில் பார்க்கும்போது, நேற்று நடந்த உங்கள் குழந்தையின் பிறந்தநாள் பார்ட்டியின் கடைசி துண்டு கேக் இருக்கிறது. இப்போது அதை சாப்பிட்டால் பசி அடங்குமா? ஆனால் இனிப்பாக இருப்பதால் உடனடி சக்தி. இந்த இடத்தில் சுசி சொல்வது 10 10 10 யுத்தியைப் பயன்படுத்தி யோசித்துவிட்டு, அதன் பிறகு அந்த கேக்கை சாப்பிடுங்கள்,

முதலில் 10 நிமிடங்கள் இந்த கேக்கை சாப்பிடுவதால் அடுத்த பத்து நிமிடங்களில் உங்களுக்கு கிடைக்கும் உடனடி பலன்கள் என்ன?
பசி கொஞ்சம் தீரும், அடுத்த வேலையை பார்க்கலாம்.

அடுத்து பத்து மாதங்கள்... இப்போது கேக்கை சாப்பிட்டு விட்டால் பத்து மாதம் கழித்து என்ன ஆகும்? கேக்கில் கொழுப்புச்சத்து அதிகம் என்பது நமக்கு தெரியும். 10 மாதங்களில் இந்தக் கேக்கினால் சிறிது சிறிதாக அதிகமான கொழுப்பு நம் உடம்பில் சேர கூடும், இது குறுகிய கால கண்ணோட்டம்.

முடிவாக பத்துவருடங்கள்... இந்த கேக்கை சாப்பிடுவதன் மூலம் பத்து வருடங்களில் அதாவது நீண்டகால கண்ணோட்டத்தில் என்ன விளைவுகள் ஏற்படக்கூடும்?

இது ஆரோக்கிய கேடு விளைவிக்கலாம். நடுஇரவில் கேக் சாப்பிடுவது ஆரோக்கிய குறைச்சலாக இருக்கும். இந்தப் பழக்கம் தொடர்ந்தால் நம் வாழ்க்கைமுறை மாறக்கூடும், பல நோய்கள் தேடி வரலாம், நம் வாழ்நாள் கூட குறைந்து விடலாம்.

நீங்கள் சிரிப்பது என் காதுகளில் ஒலிக்கிறது. என்னப்பா ஒரு துண்டு கேக் ஆயுளை குறைத்து விடுமா? என்று கேட்டால் இல்லை. ஆனால், இதேபோல் ஒவ்வொரு நாளும் தின்றுகொண்டிருந்தால், அதற்கென்று ஒரு விளைவு இருக்கத்தானே செய்யும். அதைப் பற்றி யோசிக்காமல் இப்போது இந்த கேக்கை சாப்பிடுவது புத்திசாலித்தனமான செயலா?
இதைத்தான் இந்தப் புத்தகம் அழகாக சுட்டிக்காட்டுகிறது? நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், அது சிறியதோ பெரியதோ அவற்றிற்கு உடனடி குறுகிய கால நீண்ட கால பலன்கள் உண்டு. அவற்றை 10 10 10 யுத்தி மூலம் சிந்தித்துப் பார்க்காமல், எதையும் செய்யாதீர்கள் என்பதுதான் இந்த புத்தகம் சொல்கிற மையக்கருத்து.

இந்த உத்தி கேக் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல.. எதை வேண்டுமானாலும் இதை வைத்து சிந்தித்துப் பார்க்கலாம். உதாரணமாக, ஒருவர் தன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு உபயோகிக்கலாம் அல்லது ஒரு கம்பெனியில் சேர்வதற்கு யோசிக்கலாம். இன்னொருவர் சேமிப்பு பற்றி முடிவெடுக்கலாம். எங்கேயும் எப்போதும் வேண்டுமானாலும் பொருந்தக் கூடிய தன்மை இந்த உத்திக்கு உண்டு. துவக்கத்தில் 10 நிமிடம், 10 மாதம், 10 வருடம் என்று யோசித்து செயல்படுவது தேவையில்லாத வேலை போல உங்களுக்கு தெரியலாம். ஆனால், இதை நீங்கள் தொடர்ந்து செய்து பழக்கப்படுத்திக் கொண்டு விட்டால், இது நமது மூளையில் ஒரு சிந்தனை உத்தியாக உட்கார்ந்து கொள்ளும். அதன் பிறகு, இதற்கென்று நாம் தனியாக எந்த முனைப்பும் காட்ட தேவையில்லை, இயல்பாகவே எந்த முடிவையும் நன்றாக யோசித்து எடுக்க பழகி விடுவோம்.

முக்கியமாக உங்கள் குழந்தைகளுக்கு இந்த உத்தியை கற்றுக் கொடுப்பது மிக மிக அவசியம். தற்போதைய சூழலில் அவர்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால நோக்கில் சிந்திக்க பழகுவது அவசியம். முதலில் சிரமமாக இருந்தாலும் கூட இந்த பயிற்சி அவர்களுக்கு மிக மிக அவசியம் என்கிறார் சுசி வெல்ச்.

காரணம் - நாம் அதிகமாக உடனடி பலன்கள் தரும் விஷயத்தை பற்றி மட்டும் தான் யோசிக்கிறோம். இந்த இன்ஸ்டன்ட் சமாச்சாரங்கள் தான் நம்மை கவருகின்றன. அவற்றைப் பற்றி மட்டுமே கவனித்துக் கொண்டிருக்கிறோம். நாம் செய்கின்ற செயல்களின் குறுகிய கால அதாவது ஒரு பத்து மாதங்களுக்குப் பிறகு ஏற்படக்கூடியவைகளைக் கூட நாம் யோசிப்பதில்லை. அதனால் வாழ்நாள் முழுவதும்பல சிறிய பெரிய பிரம்மாண்டமான தவறுகளை செய்து விடுகிறோம். அதுமட்டுமல்லாமல்... அதையே திரும்பத் திரும்ப செய்வது தான் பெரிய கொடுமை. இது நமக்கு தெரிவதே இல்லை.
ஒரு மாணவர் தன்னுடைய முதல் சிகரெட்டை பற்ற வைக்கிறார் ஆர்வத்தினால், அவர் எடுத்த முடிவு அது. அல்லது வகுப்புக்கு கட் அடித்துவிட்டு, வெளியே நண்பர்களோடு செல்கிறார். அப்போது 10 10 10 உத்தியில் யோசிக்க பழகியிருந்தால், அவர் உடனே கிடைக்கும் அந்த திரில் உணர்வை விட... நீண்டகால நோக்கில் தான் இழக்கக்கூடிய ஆரோக்கியம், நல்ல வாய்ப்புகள் போன்றவற்றை யோசிக்கும்போது அதை பற்ற வைக்காமல், தூக்கி போடுவது என்பது நடப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

அடிப்படையில் யோசித்தால் 10 10 10 என்பது நம்முடைய ஒவ்வொரு செயலுக்கான விளைவுகளையும் முழுமையாக உணர்ந்து நாம் சரியாக செயல்படுவதற்கு நம்மை தூண்டும் ஒரு சிறப்பான சீரிய சிந்தனை உத்தி. சிக்கலே இல்லாத இந்த வழிமுறைகளை சரியாக பயன்படுத்தி பழகினால், 10 நிமிடம் 10 மாதம் 10 வருடம் என்கிற இந்த உத்தி உங்களின் பத்து தலைமுறைகளை கூட பயன்படும்படி உங்களை வாழவைக்கும்.

இப்போது இந்தக் கட்டுரையை எடுத்துக் கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன? பத்து நிமிடங்களில் படித்து ஒரு புதிய விஷயத்தை தெரிந்து கொண்டீர்கள். பத்து மாதங்கள் இதை உபயோகப்படுத்தும் போது, உங்களுடைய எண்ண ஓட்டம் சீரிய முறையில் செப்பனிடப்படும். பத்து வருடங்களில் நீங்கள் திரும்பிப் பார்த்தால், நீங்கள் எடுக்கும் எல்லா முடிவுகளும் 95 சதவீதத்திற்கும் மேல் சரியாக, உருப்படியான ஒன்றாக அமைந்திருக்கும் வாய்ப்பு மிக மிக அதிகம்.

10 10 10 நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய முத்து.. முத்து.. முத்து...