
அமெரிக்கா

உலகம் சுற்றும் மேட்டரில் அமெரிக்க தேர்தல் இல்லையென்றால் கழுவில் ஏற்ற ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.
தேர்தல் ரிசல்ட் அனேகமாக சூப்பர் ஓவர் போகும் போல இருக்கும் என்று நினைக்கிறேன்.
அந்த அளவு பரபரப்பு.
முடிவு தெரிய இன்னும் நாளாகலாம்.
சீன வெளியுறவு அமைச்சகம் இது குறித்து கூறும் போது இந்த தேர்தல் அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரம். இதில் கருத்து சொல்லவோ அல்லது செய்யவோ எங்களுக்கு எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
மறைமுகமாக பிடன் ஜெயித்தால் சீனாவுக்கு லாபம் என்பதை சூசகமாகக் கூட சொல்ல முடியாத நிலை.
ஏனெனில் ஒழுங்காக போய் கொண்டிருந்த எறும்பு வரிசையில் கையால் கோடு போட்டது போல, சீன அமெரிக்க வர்த்தகத்தை கையால் கீறி கலைத்துப் போட்டது டிரம்ப்.
இதற்கு நடுவில் டிரம்ப் ஒரு வேளை தோற்றால் அவரது வருமான வரிக் கணக்கிலிருந்து அவர் ஆட்சியில் நடந்த முறைகேடுகள் வரை (இருக்கும் பட்சத்தில்) வெளிக் கொண்டு வர டெமாக்ரட் கட்சி காத்துக் கொண்டிருக்கிறது.
தேர்தல் முடிவு இன்று அல்லது நாளை வெளியாகாது.
சில வாரங்கள் கூட ஆகலாமாம். அதிபர் புஷ்ஷுக்கும் அல் கோருக்கும் நடந்த தேர்தல் யுத்தத்தில் ஃபுளோரிடாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு அதிலும் சில கருத்து வேறு பாடுகள் வந்து இறுதி முடிவு சுப்ரீம் கோர்ட் வரை சென்று ஒரு மாதத்திற்கும் மேலாக ஆன பின்பு தான் புஷ் அதிபரானார்.
ஒரு வேளை டிரம்ப் அதிபராகவில்லையெனில் மீடியாவுக்கு யார் தீனி போடுவது ?? மீம்ஸ் போடுபவர்கள் வாழ்க்கை என்னாகும் ?
சீனா யாருடன் வர்த்தகப் போர் புரியும் ? நினைத்துப் பார்க்கவே கவலையாக இருக்கிறது.
நார்த் கரோலினா

அலாவுதீன் படங்களில் பார்த்திருப்போம். ஏன் சீனாவின் வீ சாட் செயலி உபயோகப்படுத்துபவர்களுக்கு கூட இது தெரிந்திருக்கும். ஒரு மூடப்பட்ட பாட்டிலில் செய்தி எழுதப்பட்டு கடலில் வீசினால் அது ஏதோ ஒரு கரையில் ஒதுங்கி அதை கண்டெடுப்பார்களா என்று பழங்காலத்தில் செய்வார்கள்.
நார்த் கரோலினாவில் உண்மையிலேயே அப்படி ஒரு பாட்டிலை கண்டெடுத்தார்கள் மூன்று பெண்கள்.
அது என்னவென்று பார்ப்பதில் அவர்களுக்கு ஒரு ஆவல் இருந்தது. திறந்து பார்த்தால் அதில் ஒரு காகிதத்தில் செய்தி எழுதியிருந்தது. அதோடு அஸ்தியும் இருந்தது.
கெல்லி ,டானா, டிரிசியா என்ற அந்த மூன்று பெண்களுக்கும் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.
அதில் இருந்த தொலைபேசியில் தொடர்பு கொண்டனர் அந்த பெண்கள்.
அந்த தொலைபேசி காமிலி ஹேலி என்ற பெண்ணினுடையது.
அவர் சொல்கிறார் “ என் கணவர் ஸ்காட் அடிக்கடி கடல் பிரயாணம் செல்ல கூடியவர். பாட்டிலில் ஏதேனும் செய்தி எழுதி அதை யாரேனும் எங்கேனும் கண்டுபிடிக்கிறார்களா என்பது அவரது ஆசை. 2018 அவர் இறந்ததும் அவருடைய பழக்கவழக்கத்தை விடாமல் அவருடைய அஸ்தியுடன் என் பெயரையும் தொலைபேசியையும் எழுதி கடலில் போட்டேன். அது எப்படியோ இரண்டு வருடங்கள் கழித்து கரை ஒதுங்கி மூன்று பெண்களிடம் சிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
என் கணவர் ஸ்காட் “என்ன நான் போயிட்டேன்னு நினைச்சியா. இந்த மூன்று பெண்களை சந்தித்து ஹலோ சொல்லி விட்டு இனி மேல் தான் என் பயணம் என்று சொல்வது போல இருக்கிறது இந்த நிகழ்வு என்று நெகிழ்கிறார்.
எனக்கென்னமோ இந்த பாட்டில் செய்திகள் தான் டிவிட்டர் ஃபேஸ்புக் இதற்கெல்லாம் முன்னோடி என்று தோன்றுகிறது.
ஒரு செய்தி எழுதி பாட்டிலில் போட்டு வீசி விடவேண்டியது. உலகின் எந்த கரையில் யாரிடம் போய் அது சேருமோ என்பது ஒரு திரில் தானே ??
பெர்ரிவிலி.

ரீடா பெய்லி என்ற பெண்.
திடீரென அவருக்கு தலைக்குள் ஒரு செய்தி சொல்லி சுரண்டினால் பரிசு கிடைக்கும் லாட்டரி வாங்கு வாங்கு என்று குரல் கேட்க தொலையட்டும் என்று 30 டாலர் கொடுத்து ஒரு லாட்டரி சீட்டு வாங்குகிறார்.
அதை சுரண்டி முடித்ததும் அதிலுள்ள எண்களுக்கு தனக்கு பரிசு விழவில்லை என்று பெருமூச்சு விட அந்த கடைக்காரர் இல்லம்மா இன்னொரு நம்பர் இருக்கு பாருங்க அதையும் சுரண்டுங்க என்று சொல்ல, அதையும் சுரண்டி முடித்தால், பரிசு 100,000 டாலர்கள். ரீடா பெய்லிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
இதில் செய்தி 100,000 டாலர் விழுந்ததல்ல. இதற்கு அடுத்து சொல்லப்போவது தான் உங்கள் வயிறுகளை லேசாக எரிய விட்டு புகைக்க வைக்க போகிறது.
இவருக்கு சரியாக பதிமூன்று வருடத்திற்கு முன் ஜாக்பாட்டில் ஒரு மில்லியன் டாலர்கள் விழுந்துள்ளது என்பது தான் அது.
கொடுக்கற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டும் கொட்டும், அல்லது சுரண்டினாலும் கொட்டும்.
ஐரோப்பா
ரோட்டர்டாம்.

நம்மூர்லயும் நிறைய சிலைகள் / கலைவடிவங்கள் வைத்திருக்கிறோம். காக்காய்க்கள் கக்கா போவதற்கும் அல்லது ஏதேனும் பதட்டத்தில் அவைகளை துணி போட்டு போர்த்தி வைக்கவும் தான் அவை உபயோகப்படுகின்றன.
ரோட்டர்டாம் நகரத்தில் ஒரு மெட்ரோ இரயில் நிலையத்தின் அருகே வைக்கப்பட்டிருக்கும் கலை நேர்த்தியான ஒரு சிற்பம் ஒரு பெரிய விபத்தை தடுத்திருக்கிறது.
துறைமுகம் அருகே உள்ள இரயில் நிலையத்தில் நடு இரவில் மெட்ரோ இரயில் ஒன்று நிறுத்தத்தை தாண்டி தண்டவாளத்தில் இறங்கி ஓடியதில் பத்து மீட்டர் பள்ளத்தில் விழுந்திருக்க வேண்டியது.
நல்ல வேளையாக அருகிலிருந்த ஒரு திமிங்கலத்தின் வால் (சிலை தான்) தாங்கிப் பிடிக்க இரயிலும் விழவில்லை அதிலிருந்த ஓட்டுனரும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்.
தூங்கிக் கொண்டிருந்த மக்கள் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தால் அந்தரத்தில் இரயில் திமிங்கிலத்தின் வாலில்.
உயிர் காத்த திமிங்கலம்.
ஆசியா
சீனா
சீனாவின் சீடாங் நகரம்.
அங்கிருந்த ஒரு வீட்டில் மராமத்து வேலைகள் நடப்பதனால் அவர்கள் வளர்க்கும் நாயை நூறு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் நண்பர்கள் வீட்டில் நாண்டாங் என்ற நகரத்தில் விட்டு வைத்திருந்தார்கள்.

பிங் ஆன் என்ற அந்த செல்லப் பிராணிக்கு நான்கு மாதங்களுக்கு மேல் தன்னுடைய எஜமானர்களை பிரிந்து இருக்க முடியவில்லை.
ஒரு சுபயோக தினத்தில் அந்த வீட்டிலிருந்து எப்படியோ தப்பித்து நூறு கிலோ மீட்டர்களும் எப்படியோ தேடி ஓடி வந்து விட்டது சீடாங் நகரத்திற்கு.
ஆனால் வீடு கண்டு பிடிக்க முடியாமல் கால்களெல்லாம் ரத்தம் வர ஒரு ஓரத்தில் படுத்து விட்டது.
சமூக ஊடகங்கள் விடுமா ? இந்த நாயின் நிலையை படமெடுத்து போட யார் உரிமையாளர்கள் என்று கேட்டவுடன் பிங் ஆனின் உண்மையான உரிமையார்கள் வந்து நாயைக் கூட்டிக் கொண்டு போக, பிங் ஆன் பாச மழை பொழிந்து விட்டதாம்.
ஆக ‘நாய்கள்’ நன்றியுள்ளது என்று தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் என்றாலும் உலகம் முழுவதும் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டு விட்டது.
ஆஸ்திரேலியா.


சென்ற வாரம் உலகம் சுற்றும் விகடகவி படித்து விட்டு வந்த வாசகர் காமெண்டில் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஒரேயடியா இறப்பு செய்திகள் தானே இருக்கு என்று சொன்ன முகூர்த்தம் இந்த வாரம் கிட்டத்தட்ட சாண்டோ சின்னப்பா தேவர், படமெடுப்பது போல் செய்திகளாக வந்து விட்டது. அடுத்தாக ஒரு கிளி.
குவீன்ஸ்லாந்தில் இருக்கும் பிர்ஸ்பேன் நகரம்.
ஆண்டன் நக்வேன் என்பவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
திடீரென ஒரு சத்தம் கேட்க அருகிலுள்ள அவரது கிளி அவரது பெயரை திரும்ப திரும்ப சொல்லி அழைத்திருக்கிறது.
என்னவென்று திடிக்கிட்டு விழித்துப் பார்த்தால் வீடு முழுவதும் புகை. நெருப்பின் வாசம்.
உடனடியாக கிளியை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வர உயிர் தப்பினார் ஆண்டன்.
இது இலவு காத்த கிளியல்ல, உயிர் காத்த கிளி.
தென்னமெரிக்கா
அர்ஜெண்டினா.

முன்னாள் கால்பந்து வீரர் டீகோ மாரடோனவின் மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.
தென்னமெரிக்காவில் கால்பந்து என்றால் உயிர்.
அவர்கள் நாடு தோற்றால் அதை தாங்கிக் கொள்ளாமல் உயிர் விடுபவர்கள் ஒரு வகை என்றால் அந்த தோல்விக்கு யார் காரணமோ அந்த வீரரை தேடிச் சென்று சுட்டுக் கொல்லுபவர்கள் இன்னொரு வகை. கால்பந்து மீது அவ்வளவு பைத்தியம்.
மாரடோனா அவர்களின் கடவுள் போல.
சமீபத்தில் அவருடைய மூளையில் ஏற்பட்ட இரத்தக் கட்டுக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட அறுபது வயதான மாரடோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
லா ப்ளேடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரடோனாவிற்கு குணமாக வேண்டுமென வாசலில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர். டீகோ டீகோ என்ற அவர்களின் கூச்சல் இறைவனுக்கு கேட்டிருக்க வேண்டும்.
மாரடோனாவின் அறுவை சிகிச்சை வெற்றி என்று அறிவித்திருக்கின்றனர்.
விரைவில் குணமாகி மீண்டு வரட்டும் மாரடோனா.
ஆப்பிரிக்கா
எத்தியோப்பியா.சூடான், எகிப்து.

அண்டை மாநிலங்களான தமிழ்நாடும் கர்நாடகாவுமே. காவிரி பிரச்சினையில் அடித்துக் கொண்டு ஓய்ந்த பாடில்லை.
ஆப்பிரிக்காவில். எத்தியோப்பியா, சூடான், எகிப்து மூன்று நாடுகளும் கூடிப் பேசி நைல் நதிக்கு குறுக்கே கட்டும் அணை குறித்த பேச்சு வார்த்தையை மீண்டும் துவங்கியிருக்கின்றனர்.
சிறு வயதில் படித்த சீனப் பெருஞ்சுவரும் நைல் நைதியும் எகிப்திய வரலாறும் எனக்கு ஒரு பிரமிப்பை உண்டாக்கியிருந்தது.
சீனப் பெருஞ்சுவர் அடிக்கடி சென்றிருந்தாலும் எகிப்திலுள்ள. நைல் நதி சில வருடங்களுக்கு முன் போன போது நாகர்கோவில் எஸ்.எல்.பி மேல் நிலைப்பள்ளியில் போத்தி வாத்தியார் நைல் நதி பற்றி சொன்ன வரலாற்று விஷயங்கள் கண்ணெதிரே நடப்பது போல ஒரு பிரமை.

நதிமூலம்.
நைல் அவ்வளவு அகலம். அவ்வளவு நீளம்.
நைல் நதி நாகரீகத்தின் தாய்மடி. சுமார் நான்காயிரம் மைல் நீளமானது நைல். நைல் நதி நீல நைல் வெள்ளை நைல் என்று இரண்டு நதிகளின் கலவை. நீல நைல் தான் தாய் நதி என்று சொல்லப்படுகிறது. வெள்ளை நைல் சூடானருகே சேர்ந்து கொண்டு ஒரு கண்டத்தின் பத்து சதவிகித நீர் தேவையை பூர்த்தி செய்வது நைல் தாய். ஆம் கங்கை காவிரி மட்டுமல்ல நைலும் ஒரு தாய் தான். வேறு மொழி பேசும் தாய்.
அதில் குறுக்கே அணை கட்டினால் எவ்வளவு நீர் தேக்கமுடியும்.
எத்தியோப்பியாவிலிருந்து கீழ் நோக்கி பாயும் நதியில் எகிப்தின் தேவைக்கு சுமார் 97 சதவிகிதம் நைல் தான் கை கொடுக்கிறது.
இந்த அணை கட்டப்பட்டால் தன்னுடைய தேவைக்கு நீர் கிடைக்காதோ என்று கவலை தெரிவித்திருக்கிறது.

சூடானைப் பொறுத்தவரை இந்த அணை அடிக்கடி நடக்கும் வெள்ளத்தை தடுக்கும் என்று நம்புகிறது.
மூன்று நாடுகளிலிருந்து நீர் வளத் துறை சார்பில் இரண்டு பேர் கலந்து கொண்டு பேச்சு வார்த்தை துவங்கியிருக்கிறார்கள்.
நல்லபடியாக அணை கட்டி சச்சரவில்லாமல் பகிர்ந்துங்கப்பா.
இல்லையெனில் காவேரி போராட்டம் இனி வாய்ப்பில்லை என்ற நிலையில் நம்ம ஊர் போராளிகள் நைல் போராட்டம் ஆரம்பித்து விடப் போகிறார்கள் !
ராம்.

Leave a comment
Upload